நியூசிலாந்துக்கு எதிரான 2ஆவது டி20 போட்டியில் இந்திய அணி அபாரமாக பந்துவீசி நியூசிலாந்து அணியை 99 ரன்னில் சுருட்டியுள்ளது. இதையடுத்து 100 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி பேட்டிங் செய்யத் தொடங்கியுள்ளது. இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணி ஒருநாள் கிரிக்கெட் தொடரை 3-0 என்ற கணக்கில் இழந்தது.
இதையடுத்து தற்போது 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் இந்தியா – நியூசிலாந்து அணிகளுக்கிடையே நடைபெற்று வருகிறது. முதல் டி20 போட்டியில் இந்திய அணி 21 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இந்நிலையில் 2ஆவது டி20 கிரிக்கெட் போட்டி லக்னோவில் நடைபெற்று வருகிறது. கடந்த போட்டியில் இடம்பெற்ற அதே வீரர்களுடன் நியூசிலாந்து அணி விளையாடுகிறது. இந்திய அணியில் உம்ரான் மாலிக்கிற்கு பதிலாக யுஸ்வேந்திர சாஹல் இடம்பெற்றார். டாஸில் வென்ற நியூசிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அந்த அணியின் தொடக்க வீரர் ஃபின் ஆலன் 11 ரன்கள் எடுத்திருந்தபோது சாஹல் பந்துவீச்சில் போல்டாகி வெளியேறினார். மற்றொரு வீரர் டெவோன் கான்வே 11 ரன்களிலும், மார்க் சாப்மன் 14 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். கிளென் பிலிப்ஸ் 5 ரன்னிலும், டேரில் மிட்ச்செல் 8 ரன்னிலும் ஆட்டமிழக்க அடுத்து வந்த மைக்கேல் பிரேஸ் வெல் 14 ரன் எடுத்தார்.
நியூசிலாந்து கேப்டன் சான்ட்னர் 20 ரன்னுடன் கடைசி வரை களத்தில் இருந்தார். 20 ஓவர்கள் முடிவில் நியூசிலாந்து அணி 8 விக்கெட்டுகளை இழந்து 99 ரன்களை மட்டுமே எடுத்துள்ளது. இந்திய அணியின் தரப்பில் அதிகபட்சமாக அர்ஷ்தீப் சிங் 2 விக்கெட்டுகளை எடுத்துள்ளார். ஹர்திக் பாண்ட்யா, வாஷிங்டன் சுந்தர், யுஸ்வேந்திர சாஹல், தீபக் ஹூடா, குல்தீப் யாதவ் ஆகியோர் தலா 1 விக்கெட்டை வீழ்த்தினர். இதையடுத்து 100 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி பேட்டிங் செய்யத் தொடங்கியுள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Cricket