Home /News /sports /

IND vs ENG | இங்கிலாந்தை தவிடுபொடியாக்கிய ரோகித் சர்மா, விராட் கோலி; திருப்புமுனை ஏற்படுத்திய புவனேஷ், ஷர்துல்- கோப்பையை வென்றது இந்தியா

IND vs ENG | இங்கிலாந்தை தவிடுபொடியாக்கிய ரோகித் சர்மா, விராட் கோலி; திருப்புமுனை ஏற்படுத்திய புவனேஷ், ஷர்துல்- கோப்பையை வென்றது இந்தியா

இந்தியா அபார வெற்றி. கோப்பையுடன் சாம்பியன்ஸ்.

இந்தியா அபார வெற்றி. கோப்பையுடன் சாம்பியன்ஸ்.

இந்திய அணி தொடரை 3-2 என்று வென்று கோப்பையைக் கைப்பற்றியது. ஆட்ட நாயகன் புவனேஷ்வர் குமார், தொடர் நாயகன் விராட் கோலி.

அகமதாபாத்தில் நேற்று நடைபெற்ற இறுதி டி20 போட்டியில் முதலில் பேட் செய்ய பணிக்கப்பட்ட இந்திய அணி ரோகித் சர்மா, விராட் கோலி மூலம் எழுச்சித் தொடக்கம் பெற்று 20 ஓவர்களில் 224/2 என்று குவிக்க, தொடர்ந்து ஆடிய இங்கிலாந்து 12-வது ஓவர் வரை பிரமாதமாக ஆடி அதன் பிறகு சரிவு கண்டு கடைசியில் 188/8 என்று முடிந்து போனது.

இதன் மூலம் 36 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய அணி டி20 தொடரை 3-2 என்று கைப்பற்றி பேடிஎம் கோப்பையை கைப்பற்றியது. 224 ரன்கள் உள்நாட்டில் இந்திய அணியின் அதிகபட்ச டி20 ஸ்கோர், ஒட்டுமொத்தமாக 4வது பெரிய ஸ்கோர்.நடுவர்கள் வைடு கொடுக்க ‘கோலி சார்’ தலையாட்ட வேண்டும் என்பது போல் நடந்து கொண்டது அசிங்கமாக இருந்தது. இப்படியே போனால் நடுவர்களையும் கோலிதான் தீர்மானிப்பார், அவுட்களையும் கோலிதான் தீர்மானிப்பார் போலிருக்கிறது. இன்னும் கொஞ்சம் போனால் எதிரணியில் யார் யார் ஆடவேண்டும் என்பதையும் கோலியே தீர்மானிப்பார் என்றே தோன்றுகிறது. அதாரிட்டிக்கு ஒரு அளவு இல்லையா?

விராட் கோலியின் பிரமாதமான முடிவு: ஹிட் மேன் ரோகித் சர்மாவின் அசாத்திய பவர் ஹிட்டிங்:

இந்தப் பிட்ச் பேட்டிங் சொர்க்கபுரி, இந்தத் தொடரிலேயே இதுதான் பேட்டிங் பிட்ச் என்று கூறலாம். விராட் கோலி பிரமாதமான ஒரு முடிவை எடுத்தார் அது அணிக்கு பெரிய அளவில் உதவியது. மோர்கன் டாஸ் வென்று முதலில் இந்திய அணியை பேட் செய்ய அழைத்தார். அனைவரும் ஆச்சரியப்படத்தக்க வகையில் விராட் கோலியும் ரோகித் சர்மாவும் இறங்கினர். இது பிரமாதமான முடிவு, ஏனெனில் தொடக்க சரியில்லாமல்தான் 2 போட்டிகளிலும் தோற்றது இந்தியா, அதனால் அனுபவசாலிகளான இருவர் இறங்கிய போது, விராட் கோலி நான் ஒரு முனையை பிடித்துக் கொள்கிறேன் இன்னொரு முனையில் நீ வாள் சுழற்று என்று ரோகித் கைகள் கட்டை அவிழ்த்து விட பின்னி எடுத்து விட்டார் ரோகித்.இருவரும் சேர்ந்து 52 பந்துகளில் 94 ரன்களை விளாசினர்,பவர் ப்ளேயில் 60 ரன்கள். என்னையா 2 மேட்ச்களுக்கு உட்கார வைத்தாய் கோலி? என்று மட்டையால் கேள்வி எழுப்பினார் ரோகித் சர்மா. பிறகு 15, 12 என்பதுதான் ஸ்கோர். பவர், டைமிங்கில் அசத்தினார் ஹிட்மேன் ரோகித். 34 பந்துகளில் 4 பவுண்டரிகள் 5 சிக்சர்கள் என்று பின்னி எடுத்தார். குறிப்பாக இங்கிலாந்தின் வேகப்புயல் மார்க் உட்டின் ( 4 ஓவர் 53 ரன்கள்) மணிக்கு 150-51 கிமீ வேகப்பந்துகள் பவுண்டரிகளுக்கு பறந்தன.

முன்னர் ஜோப்ரா ஆர்ச்சரை அற்புத கவர் டிரைவில் பவுண்டரி அடித்தார் கோலி, பீல்டரை சரியாக நிறுத்தியிருந்தால் அதில் அவுட் ஆகியிருப்பார் கோலி, அதே ஆர்ச்சர் ஓவரில் ரோகித் சர்மா கவர், பாயிண்டுக்கு இடையில் இன்னொரு பவுண்டரி அடித்தார். மார்க் உட் வந்தவுடன் நேராக ஒரு காட்டடி அடித்தார், அதை கேட்ச் பிடிக்கலாமா என்று கையை வைத்த மார்க் உட் தான் வீசிய பந்து போலவே அதே 150 கிமீ வேகத்தில் ரோகித் ஷாட் இருந்ததால் கையை எடுத்து விட்டார், பவுண்டரி. அடுத்ததாக மீண்டும் ஒரு பந்து ஸ்லைட்டாக ஓவர் பிட்ச் ஆக அதை மிகப்பிரமாதமாக ஒரு சச்சின் ஸ்ட்ரெய்ட் ட்ரைவ் அடித்தார் ரோகித் பவுண்டரி. 13 ரன்களை கொடுத்தார் மார்க் உட். இவரது அடுத்த ஓவரில் விராட் கோலி ஃபைன் லெக்கில் புல் ஷாட் ஆடி ஒரு பெரிய சிக்சர் விளாச இந்திய ஸ்கோர் 50 ரன்களை எட்டியது. அதே ஓவரில் கிட்டத்தட்ட அதே ஷாட்டில் ரோகித் ஒரு சிக்ஸ் விளாச, மார்க் உட் 2 ஓவர்களில் 28 ரன்கள் விளாசப்பட்டார்.

பிறகு அடங்காத ரோகித், ஜோர்டானை டீப் ஸ்கொயர்லெக்கில் ஒரு சிக்சரையும் சாம் கரணை ஒரு சிக்சரையும் விளாசி 50 ரன்களைக் கடந்தார். பிறகு ஸ்டோக்ஸை நேராக ஒரு சிக்ஸ் அடித்தார். கடைசியில் பென் ஸ்டோக்சின் லெக் கட்டரை ஸ்டம்புக்குள் வாங்கி விட்டுக் கொண்டு ஆட்டமிழந்தார் ரோகித்.

கோலி மீண்டும் ‘ராஜ’ இன்னிங்ஸ்: சூரியகுமார் யாதவை வீழ்த்திய ஜோர்டானின் சமயோசிதம்

ரோகித் சர்மா விட்டுச் சென்ற அதிரடியை அவர் போன பிறகு கையில் எடுத்த கோலி 52 பந்துகளில் 7 பவுண்டரிகள் 2 சிக்சர்களுடன் 80 நாட் அவுட் என்று முடித்தார். உண்மையில் தோனியெல்லாம் ஒன்றுமில்லை, கிரேட் பினிஷர் என்றால் அது கோலிதான். சூரியகுமார் யாதவ் இறங்கினார், கடந்த போட்டி இன்னிங்ஸை அப்படியே தொடர்ந்தார். வந்தவுடனேயே ரஷீத்தின் லெக் ஸ்பின்னை நேராக ஒரு சிக்சரும் பிறகு இன்சைட் அவுட் ஷாட்டில் எக்ஸ்ட்ரா கவரில் ஒரு பிரமாத சிக்சரையும் அடித்தார், பிறகு இரண்டு ஸ்கூப் ஷாட்கள் மூலம் பவுண்டரி விளாசி 17 பந்துகளில் 32 ரன்கள் எடுத்து ரஷீத் பந்தில் ஆட்டமிழந்தார். இவரது 3 பவுண்டரி 2 சிக்சர்களுடன் இந்திய அணி முதல் 10 ஓவர்களில் 8 சிக்சர்களை விளாசித்தள்ளியது. சூரியகுமார் யாதவ் ரஷீத் பந்தை லாங் ஆன் மேல் தூக்கி அடித்தார் பந்து சிக்சருக்குப் பறந்தது, ஆனால் அங்கு ஜோர்டான் பந்தை தாவிப்பிடித்தார், ஆனால் எல்லைக் கோட்டை கடந்து விடுவோம் என்று தெரிந்தவுடன் அதை எல்லைக்கோட்டுக்குள் வீசி எறிந்தார், அங்கு ஜேசன் ராய் பிரமாதமாக பிடித்தார்.ஹர்திக் பாண்டியா, கோலியுடன் இணைந்து இங்கிலாந்தை புரட்டி எடுத்தனர், ஸ்டோக்ஸை நடந்து வந்து கோலி லாங் ஆனில் சிக்ஸ் அடித்தார். தனது 3வது அரைசதத்தை 2 ரன்கள் மூலம் எடுத்தார் கோலி.

மோர்கனின் களவியூகம் கேள்விக்குறியாக அமைந்தது, மிட் ஆஃப், எக்ஸ்ட்ரா கவரை 30 அடி வட்டத்துக்குள் நிறுத்தி கடைசி 5 ஓவர்களை வீசியதன் பொருள் பிடிபடவில்லை. ஹர்திக் பாண்டியா இதைப் பயன்படுத்திக் கொண்டு 4 பவுண்டரிகள் 2 சிச்கர்களுடன் 17 பந்துகளில் 39 ரன்களை விளாசினார், கோலி ஆர்ச்சரின் கடைசி ஓவரில் 12 ரன்களை எடுக்க இந்திய அணி 224/2 என்ற மிகப்பெரிய ஸ்கோரை எட்டியது. இங்கிலாந்தில் ஆதில் ரஷீத் மட்டுமே 4 ஓவர் 31 என்று சிக்கனம் காட்டினார்.

ராய் ஆட்டமிழந்த பிறகு மலான், பட்லர் கிளாசிக் அதிரடி; பாபர் ஆஸம் சாதனையை முறியடித்த மலான்:

225 ரன்கள் இலக்கை வெற்றிகரமாக விரட்ட வேண்டுமெனில் ஜேசன் ராய் இருக்க வேண்டும், ஆனால் அவர் புவனேஷ்வர் குமார் வீசிய முதல் ஓவரின் 2வது பந்தில் பவுல்டு ஆகி டக் அவுட் ஆனார். புவனேஷ்வர் குமார் 4 ஓவர் 15 ரன் 2 விக்கெட் என்று ஆட்டத்திற்கு திருப்பு முனை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

ஆனால் முன்னதாக ராய் ஆட்டமிழந்த பிறகு மலான், பட்லர் இணைந்து சதக்கூட்டணி அமைத்தனர். 13 ஓவர்களில் 130 ரன்கள் என்று இங்கிலாந்தை வெற்றி வாய்ப்புக்குக் கொண்டு சென்றனர். மலான் நம்பர் 1 டி20 வீரர் என்பதை நேற்று நிரூபித்தார், காட்டடியெல்லாம் அடிக்கவில்லை, கிரிக்கெட்டுக்கே உரித்தான கிளாசிக் ஷாட்களை ஆடியே ரன் விகிதத்தை உயர்த்தினார்.

ராய் ஆட்டமிழந்தவுடன் பாண்டியாவின் ஓவரில் மலான் 3 பந்துகளில் 14 ரன்கள் விளாச பாண்டியாவின் ஒரே ஓவர் 18 ரன்கள் விளாசப்பட்டது. லெக் ஸ்பின்னர் ராகுல் சாஹர் வந்தவுடன் பட்லர் புகுந்தார் 3 சிக்சர்களை விளாச பவர் ப்ளேயில் இங்கிலாந்து இந்தியாவைக் காட்டிலும் 2 ரன்கள் கூடுதலாக 62/1 என்று இருந்தது. மலான் 33 பந்த்களில் அரைசதம் கண்டார்.டி20 கிரிக்கெட்டில் அதிவேக 1000 ரன்களுக்கான பாபர் ஆசம் சாதனையை உடைத்தார் மலான். ஆசம் 26 இன்னிங்ஸ்களில் 1000 ரன்கள் மைல்கல்லை எட்ட மலான் 24 இன்னிங்ஸ்களில் 1003 என்று உடைத்தார்.

இங்கிலாந்து அணி மிகப்பிரமாதமாக ஆடி 11 ஓவர்களில் 120/1 என்று இருந்தது, உண்மையில் ராகுல் சாஹர் வீசிய 12வது ஓவர் சிக்கனமே இங்கிலாந்துக்கு அழுத்தத்தை அதிகரித்தது. இந்த ஓவரில் சிலபல வைடுகளை சாஹர் வீசினாலும் இவரை அடித்து நொறுக்க வேண்டும் என்ற பட்லரின் ஆசையை முறியடித்து அந்த ஓவரில் 7 ரன்களையே கொடுத்தார்.

இதனால் அழுத்தம் எகிறிப் போய் அடுத்த ஓவரில் புவனேஷ்வர் குமாரிடம் பட்லர் ஆட்டமிழந்தார், தூக்கி அடிக்க பாண்டியா கேட்சை எடுத்தார். 34 பந்துகளில் 2 பவுண்டரிகள் 4 சிக்சர்களுடன் பட்லர் வெளியேறினார். இந்த ஓவரில் 3 ரன்கள் தான் வந்தது. அழுத்தம் இன்னும் அதிகரித்தது. அப்போது இங்கிலாந்து 130/2 என்று சற்றே பின்னடைவு கண்டது. அதன் பிறகு தாக்கூர் களத்தில் குதிக்க பாண்டியாவும் இணைய பேர்ஸ்டோ, மலான், மோர்கன் அடுத்தடுத்து வெளியேறினர். சாம் கரனின் 2 சிக்சர்கள் இங்கிலாந்துக்கு பயனளிக்கவில்லை. 188/8 என்று முடிந்தது.

இந்திய அணி தொடரை 3-2 என்று வென்று கோப்பையைக் கைப்பற்றியது. ஆட்ட நாயகன் புவனேஷ்வர் குமார், தொடர் நாயகன் விராட் கோலி.
Published by:Muthukumar
First published:

Tags: Captain Virat Kohli, Cricket, India Vs England, Rohit sharma, T20, Team India

அடுத்த செய்தி