மன்னிப்புக் கேட்ட பும்ராவை அலட்சியப்படுத்தினார் ஆண்டர்சன் - நடந்தது என்ன? பீல்டிங் கோச் ஆர்.ஸ்ரீதர் விளக்கம்

ஆண்டர்சன் - பும்ரா

ஜேம்ஸ் ஆண்டர்சனுக்கு லார்ட்ஸ் டெஸ்ட் போட்டியின் 3ம் நாள் இறுதி கட்டத்தில் பவுன்சர்களாக வீசி அவரைக் காயப்படுத்த முயற்சி செய்தார் இந்தியாவின் ஜஸ்பிரித் பும்ரா, இதற்காக அவர் ஜேம்ஸ் ஆண்டர்சனிடம் மன்னிப்புக் கேட்கச் சென்ற போது அவரை அலட்சியப்படுத்தி புறந்தள்ளினார் ஆண்டர்சன்

  • Share this:
    ஜேம்ஸ் ஆண்டர்சனுக்கு லார்ட்ஸ் டெஸ்ட் போட்டியின் 3ம் நாள் இறுதி கட்டத்தில் பவுன்சர்களாக வீசி அவரைக் காயப்படுத்த முயற்சி செய்தார் இந்தியாவின் ஜஸ்பிரித் பும்ரா, இதற்காக அவர் ஜேம்ஸ் ஆண்டர்சனிடம் மன்னிப்புக் கேட்கச் சென்ற போது அவரை அலட்சியப்படுத்தி புறந்தள்ளினார் ஆண்டர்சன். இதுதான் இந்திய அணியை எழுச்சி பெறச் செய்ததற்குக் காரணம் என்று பீல்டிங் பயிற்சியாளர் ஆர்.ஸ்ரீதர் தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக ரவிச்சந்திரன் அஸ்வினின் யூ டியூப் சேனலில் பீல்டிங் பயிற்சியாளர் ஆர்.ஸ்ரீதர் கூறும்போது, “பும்ரா ஒரு சவாலான வேகப்பந்து வீச்சாளர் யாரையும் வேண்டுமென்றே காயப்படுத்த மாட்டார்.

    பும்ரா அந்த ஓவரில் 8-10 பந்துகளை வீசினார். யார்க்கர்கள் பவுன்சர்கள், ஆண்டர்சன் உடலில் கிளவ்வில், கையில் ஹெல்மெட்டில் அடி வாங்கினார், ஆனால் விக்கெட்டைக் கொடுக்கவில்லை. முன்பெல்லாம் டெய்ல் எண்டர்க்ளுக்கு பவுன்சர் வீசக்கூடாது என்பது ஒரு எழுதப்படாத ஒப்பந்தமாக இருந்தது, இப்போது அதெல்லாம் இல்லை. ஃபுல் லெந்த் வீசி விக்கெட் எடுத்துக் கொள் என்பதே அந்த எழுதா உடன்படிக்கை. இது ஒரு புரிதல்தான்.

    ஆட்டம் முடிந்த பிறகு இரு அணி வீரர்க்ளும் ஓய்வறைக்குத் திரும்பிய போது ஜிம்மி ஆண்டர்சனின் முதுகில் செல்லமாகத் தட்டி பும்ரா வேண்டுமென்றே செய்யவில்லை என்று கூற முனைந்தார். பும்ரா அங்கேயே மன்னிப்புக் கேட்டு முடிக்கப்பார்த்தார், ஆனால் ஆண்டர்சன் அவரை அலட்சியப்படுத்தி ஒதுக்கினார்.

    இதுதான் அனைவரையும் இந்திய அணியில் தட்டி எழுப்பியது. இதற்கு முன் இந்திய அணி ஒன்று திரண்டு எழுந்ததில்லை என்று அர்த்தமல்ல. பும்ராவை ஆண்டர்சன் அலட்சியப்படுத்தியது அனைவரின் உள்ளிலும் தீயை மூட்டியது. அதன் விளைவைத்தான் 5ம் நாளில் பார்த்தோம்”என்றார்.

    அஸ்வின் கூறும்போது, “என்ன நடந்தது எனில் பழிதீர்க்க வேகமாக ஓடி வந்து வீசி எங்களையும் அடிக்கவே பார்த்தனர், இதனால் ஆட்டத்தையே இழந்தனர்” என்றார்.

    ஆனால் இந்தச் சம்பவத்துக்குப் பிறகு கோலி கோபாவேசமடைந்தார். இங்கிலாந்து வீரர்களை நோக்கி கடுமையான வசைகளை பொழிந்ததாக கிரிக் இன்போவிலேயே மைக்கில் எடுத்ததாக எழுதியுள்ளனர். வசைமாரியில் ஒருவரையொருவர் சளைத்தவர்களல்ல என்பதே இதிலிருந்து தெரிகிறது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    நம் கேள்வியெல்லாம் இந்த ஆக்ரோஷம் ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதியில் எங்கு போயிற்று, ஆண்டர்சனுக்கு போய் வீரதீர பவுன்சரை வீசிய பும்ரா அன்று விக்கெட்டை வீழ்த்த முடியாமல் பரிதாபமாக நின்றாரே அது ஏன் என்ற கேள்வி ரசிகர்களிடத்தில் எழாமல் இல்லை.
    Published by:Muthukumar
    First published: