இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி, இந்திய அணியுடன் 4 போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. முதல் இரண்டு போட்டிகளில் இந்திய அணி வெற்றிபெற்ற நிலையில், இந்தூரில் நடைபெற்ற 3-வது டெஸ்ட் போட்டியில், ஆஸ்திரேலிய அணி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
ஆஸ்திரேலியா அணியை வழிநடத்திய கேப்டன் கம்மின்ஸ் 3-வது போட்டியில் பங்கேற்கவில்லை. சொந்த காரணங்களுக்காக ஆஸ்திரேலியா பயணமானார். இதனையடுத்து ஸ்மித் கேப்டனாக நியமிக்கப்பட்டார். ஸ்மித் கேப்டன்சியில் 3-வது போட்டியில் களமிறங்கிய ஆஸ்திரேலியா பவுலிங்கில் மிரட்டியது. 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றியை வசமாக்கிய ஆஸ்திரேலியா ஓயிட் வாஷில் இருந்து தப்பியதோடு மட்டுமல்லாமல் இந்த டெஸ்ட் தொடருக்கு உயிர் கொடுத்தது. இதன்காரணமாக 4-வது டெஸ்ட் கவனம் ஈர்த்துள்ளது.இந்திய கேப்டன் ரோஹித் ஷர்மா இந்தப்போட்டியை வென்று தொடரை கைப்பற்றுவாரா என்ற எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது.
இந்நிலையில் 4-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி, குஜராத்தின் அகமதாபாத் மைதானத்தில் இன்று காலை தொடங்குகிறது. முதல் நாள் போட்டியை பிரதமர் நரேந்திர மோடியும், ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி ஆல்பனீஸும் பார்வையிடுகின்றனர். இதையொட்டி, மைதானத்தில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இந்நிலையில், 4 நாள் இந்தியப் பயணமாக புதன்கிழமை மாலை அகமதாபாத்துக்கு வந்தடைந்த ஆஸ்திரேலிய பிரதமரை, குஜராத் முதலமைச்சர் உள்ளிட்டோர் விமான நிலையத்தில் வரவேற்றனர். இதையடுத்து, இன்று காலை போட்டியை பிரதமர் மோடியுடன் பார்வையிட உள்ளார்.
லண்டன் ஓவல் மைதானத்தில் ஜூன் 7-ம் தேதி தொடங்கும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு ஏற்கனவே ஆஸ்திரேலிய அணி தகுதிபெற்றுள்ளது. இதில் இந்திய அணி தகுதி பெற வேண்டுமானால், கடைசி டெஸ்ட் போட்டியில் வெற்றிபெற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. அதேநேரம், போட்டி டிரா செய்யப்பட்டாலோ, இந்தியா தோல்வியடைந்தாலோ, இலங்கை மற்றும் நியூசிலாந்து இடையேயான போட்டியின் முடிவைப் பொறுத்து இந்தியாவுக்கான வாய்ப்பு அமையும்.இதனால், கடைசி டெஸ்ட் போட்டி மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிளேயிங் லெவன்?
இந்தப் போட்டியில், இந்திய அணியில் முதல் முறையாக இஷான் கிஷன் சேர்க்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த டெஸ்ட் போட்டியில் ஓய்வு அளிக்கப்பட்ட முகமது ஷமி அணிக்கு திரும்புகிறார். இதன் காரணமாக, உமேஷ் யாதவ் அல்லது முகமது சிராஜ் ஆகியோரில் ஒருவர் நீக்கப்படுவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேநேரம், ஆஸ்திரேலிய அணியில் எந்த மாற்றமும் இருக்காது என்று கூறப்படுகிறது.
இந்தப் போட்டி குறித்து செய்தியாளர்களிடம் பேசிய இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா, 3-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி தோல்வியடைவதற்கு அதீத நம்பிக்கையே காரணம் என்று முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி கூறிய கருத்தை மறுத்தார். அணிக்கு வெளியே இருப்பவர்களுக்கு உள்ளே என்ன நடைபெறுகிறது என்பது குறித்து தெரியாது என்றும் ரோஹித் சர்மா கூறினார். இன்றைய போட்டி காலை 9.30 மணிக்கு தொடங்குகிறது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: BCCI, ICC World Test Championship, Ind Vs Aus, Indian cricket team, Indvsaus