அயர்லாந்துக்கு எதிரான 2வது டி20 போட்டியில் ஹர்திக் பாண்டியா தலைமை இந்திய அணி வென்று தொடரை 2-0 என்று கைப்பற்றியது. ஆனால் 225 ரன்கள் இலக்கை அயர்லாந்து விடா முயற்சியுடன் விரட்ட முயற்சி செய்து இந்தியாவை கதற விட்டது கடைசியில் உம்ரன் மாலிக்கின் ஓவர் சரியாக அமைய 221/5 என்று அயர்லாந்து 4 ரன்கள் குறைவாக எடுத்து போராடி தோல்வி அடைந்தது.
உம்ரன் மாலிக் முதல் 3 ஓவர்களில் 31 ரன்கள் கொடுத்தார், கடைசி ஓவரில் 17 ரன்கள் அயர்லாந்து வெற்றிக்குத் தேவை எனும்போது அயர்லாந்து வீரர் ஆதைர் 6 பந்தில் 13 என்று அபாயகரமாக இருந்த போது, உம்ரன் மாலிக் முதல் பந்தை டாட் பாலாக வீச 2வது பந்து நோ-பால். ஃப்ரீ ஹிட் பவுண்டரிக்குப் பறந்தது. அடுத்த பந்தும் பவுண்டரி. ஆனால் அடுத்த 3 பந்துகளையும் சிறப்பாக வீசி 3 ரன்களையே கொடுக்க இந்திய அணி 4 ரன்களில் த்ரில் வெற்றி பெற்றது. உம்ரன் மாலிக் 4 ஓவர்களில் 10 டாட் பால்களுடன் 4 பவுண்டரி 2 சிக்சர்கள் கொடுத்து 42 ரன்கள் வழங்கினார்.
அதாவது 24 பந்துகளில் 10 டாட்பால்களை கழித்து விட்டுப் பார்த்தால் 14 பந்தில் 42 ரன்களைக் கொடுத்திருக்கிறார் என்றால் இவரது ஸ்மார்ட் ஸ்ட்ரைக் ரேட் கிட்டத்தட்ட 300 ஆக உள்ளது. இந்த 14 பந்துகளில் இவர் 25 ரன்களை மட்டும் கொடுப்பவர் ஆனால் டி20-யின் ஆகச்சிறந்த பவுலர் ஆகி விடுவார்.
ஹூடா, சஞ்சு சாம்சன் டி20 உலக சாதனை:
கடைசி டி20 தொடரில் ஹூடா சான்ஸ் கிடைக்காமல் பெஞ்சில் இருந்தார். சாம்சன் அணியிலேயே இல்லை. இந்தத் தொடரில் சில நட்சத்திர வீரர்கள் டெஸ்ட்டுக்கு சென்று விட்டதால் ஹூடா, சாம்சனுக்கு வாய்ப்புக் கிடைத்தது. நேற்று இஷான் கிஷன் முதல் போட்டியில் ஆடியது போலவே கிராஸ் பேட் போட நினைத்தார், அன்று பவுல்டு நேற்று எட்ஜ் ஆகி 3 ரன்களுக்கு அவுட் ஆனார்.
அதன் பிறகு ஹூடா, சஞ்சு சாம்சன் ராஜ்ஜியம்தான். 2வது விக்கெட்டுக்காக சுமார் 87 பந்துகளில் 176 ரன்களை விளாசினர்.2வது விக்கெட்டுக்காக டி20 சர்வதேச கிரிக்கெட்டிலேயே அதிகபட்ச 176 ரன்கள் இதுதான், இந்த உலக சாதனையை நிகழ்த்தினார்கள். இந்தியாவின் டி20 வரலாற்றில் எந்த விக்கெட்டுக்கும் இதுதான் அதிகபட்ச கூட்டணி ரன்கள்.
ஹூடா, சாம்சன் இருவரும் ஷாட்டுக்கு ஷாட் மேட்ச் செய்தனர், ஹூடா குறிப்பாக ஒரு ஆன் சைடு ஆதிக்க பிளேயர், சஞ்சு சாம்சன் ஆஃப் சைடில் ஸ்கொயர் ஆஃப் த விக்கெட்டில் கொஞ்சம் ஸ்டைலிஷ் பிளேயர், ஆனால் ஹூடாவின் ஆன் சைடு பெரிய ஷாட்கள் உண்மையில் பிரமிப்பூட்டுபவை. அதுவும் புல் ஹூக் ஷாட்களை குத்திய ஜோருக்கு அடிக்கிறார். முதல் 50 ரன்களை 27 பந்துகளில் எடுத்த ஹூடா அடுத்த 50 ரன்களை 28 பந்துகளில் விளாசி 55 பந்தில் சதம் எடுத்து, இந்திய டி20 வரலாற்றில் சதம் எடுத்த ரோஹித் சர்மா, ரெய்னா, கே.எல்.ராகுல் உள்ளிட்டோர் பட்டியலில் இணைந்தார்.
சஞ்சு சாம்சன் ஒரு பிரமாதமான ஆஃப் ட்ரைவுடன் அருமையான ஆஃப் சைடு ஷாட்களில் அரைசதம் எடுத்த பிறகு அசுரத்தனமாக 3 சிக்சர்களை 5 பந்துகளில் அடித்தார். அதைர் பந்தில் சஞ்சு சாம்சன் பவுல்டு ஆன போது அவர் 42 பந்துகளில் 9 பவுண்டரி 4 சிக்சர்களுடன் 77 ரன்கள் எடுத்திருந்தார். தீபக் ஹூடா சதத்துக்காக கொஞ்சம் ஸ்லோ ஆகிவிட்டார், 91-லிருந்து 100 செல்வதற்கு 10 பந்துகள் எடுத்துக் கொண்டார், இல்லையெனில் சதம் சாதனை சதமாகக் கூட அமைந்திருக்கும். ஹூடா 57 பந்துகளில் 104 ரன்கள் எடுத்து அதில் 9 பவுண்டரி 6 சிக்சர்கள் விளாசி லிட்டில் பந்தில் அவுட் ஆனார்.
அதன் பிறகு அயர்லாந்து இந்திய அணியை முடக்கியது, தினேஷ் கார்த்திக், ஹர்ஷல் படேல், அக்சர் படேல் எல்லாம் டக் அவுட். கேப்டன் ஹர்திக் பாண்டியா 13 நாட் அவுட் ஆக இந்தியா 225/7 என்று பெரிய இலக்கை எட்டியது. அயர்லாந்தில் சிறப்பாக வீசிய அதைர் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். ஜோஷ் யங், லிட்டில் இருவருமே சிக்கனம் காட்டி 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். ஆட்ட நாயகன், தொடர் நாயகன் தீபக் ஹூடா.
அயர்லாந்தின் பால் ஸ்டர்லிங், ஆண்டி பால்பர்னி அதிரடி தொடக்கம்:
225 ரன்கள்தானே என்று அசால்ட்டாக தொடங்கியது போல் இருந்தது. முதல் ஓவரிலேயே இந்தியாவின் சிறந்த டி20 பவுலர் புவனேஷ்வர் குமாரை போட்டு சாத்தி எடுத்து விட்டார், கடைசி 4 பந்துகளில் ஒரு சிக்ஸ் 3 பவுண்டரி என்று பின்னி எடுத்துவிட்டார். பால்பர்னி மறுமுனையில் புவனேஷ்வர் குமாரை ஸ்வீப் சிக்ஸ் அடித்தார். பவர் ப்ளேயில் 73 ரன்கள் என்று அயர்லாந்து இந்திய அணியை கதறவிட்டது. ரவி பிஷ்னாய் பால் ஸ்டர்லிங்கை பவுல்டு செய்தார்.ஸ்டர்லிங் 18 பந்தில் 5 பவுண்டரி 3 சிக்சர்களுடன் 40 எடுத்தார்.
அடுத்து இறங்கிய காரெத் டெலானி டக் அவுட் ஆனார், இவர் ரன் அவுட் ஆகி வெளியேறிய பிறகு ஹாரி டெக்டர் ஒருமுனையில் நிற்க பால்பர்னி வெளுத்துக் கட்ட 10 ஒவர்களில் 107/2 என்று அயர்லாந்து சாதனை சேசிங்கில் இருந்தது. ஹர்ஷல் படேலை ஒரு பவுண்டரி, ஒரு சிக்ஸ் அடித்தார் பால்பர்னி. ஹர்ஷல் படேல் ஃபுல்டாஸ்களாகப் போட்டார், ஆனால் பால்பர்னி விக்கெட்டை எப்படியோ வீழ்த்தினார். பால்பர்னி 37 பந்துகளில் 3 பவுண்டரி 7 சிக்சர்களுடன் 60 எடுத்து ஆட்டமிழந்தார்.
திடீரென அயர்லாந்து இன்னிங்ஸில் ஒரு 9 பந்துகளில் பவுண்டரியே வராமல் போக 48 பந்தில் 102 என்று இலக்கு கடினமானது. முதல் டி20-யில் உம்ரன் மாலிக்கையெல்லாம் சாத்திய டெக்டர் கிரீசில் இருந்தார். அந்த நிலையில் தான் டாக்ரெல் இறங்கினார், இவரும் டக்கரும் சேர்ந்து 16 பந்துகளில் 3 சிக்சர்கள், 4 பவுண்டரிகளை விளாசினர். இதனால் 18 பந்துகளில் 38 என்பது போல் மேட்ச் அயர்லாந்து பக்கம் சாய்ந்தது. ஆனால் 28 பந்தில் 34 எடுத்திருந்த டெக்டரை புவனேஷ்வர் குமார் வீட்டுக்கு அனுப்பினார். ஆனால் எதுவும் அயர்லாந்தை நிறுத்த முடியவில்லை அதைர் இறங்கி 12 பந்தில் 3 பவுண்டரி 1 சிக்சருடன் 23 விளாசினார். டாக்ரெல் 34 ரன்கள் எடுத்தார், கடைசி ஓவரில் 17 ரன்கள் தேவை என்ற நிலையில் உம்ரன் மாலிக் சிறப்பாக வீசி 12 ரன்களையே கொடுத்தார். இந்தியா வெற்றி பெற்றது.
புவனேஷ்வர் குமார் 1/46. ஹர்ஷல் படேல் 1/54, பிஷ்னாய் 1/41, உம்ரன் மாலிக் 1/42 என்று எல்லோரும் அடிவாங்க அக்சர் படேல் 2 ஓவர் 12 என்று அசத்தினார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Hardik Pandya, India, Ireland, Sanju Samson, T20