இந்திய அணி டிரசிங் ரூம் சகோதரத்துவம், நம்பிக்கை இழக்காத உறுதி: நடராஜன் நெகிழ்ச்சி

இந்திய அணி டிரசிங் ரூம் சகோதரத்துவம், நம்பிக்கை இழக்காத உறுதி: நடராஜன் நெகிழ்ச்சி

நடராஜன்.

இந்திய அணியின் டிரசிங் ரூமில் நிலவும் சகோதரத்துவம், கடைசி வரை நம்பிக்கை இழக்காத உறுதி, என்னைப் பெரிதும் கவர்ந்தது என்று நடராஜன் நெகிழ்ச்சிப் பதிவிட்டுள்ளார்.

 • Share this:
  மூன்றாவது ஒரு நாள் போட்டியில் நடராஜன் 10 ஓவர்களில் 78 ரன்கள் கொடுத்தாலும் ஒரு விக்கெட்டைக் கைப்பற்றினார், ஆனால் கடைசி ஓவரில் 14 ரன்களை மிகச்சிறப்பாகத் தடுத்து இந்திய வெற்றியை உறுதி செய்தார்.

  ஹர்திக் பாண்டியா, ரிஷப் பந்த் அதிரடியில் 329 ரன்கள் குவித்த இந்திய அணி பிறகு இங்கிலாந்தின் விறுவிறு சேசிங்கில் அவர்களை கட்டுப்படுத்தி வெற்றி கண்டது.

  விராட் கோலி அனுபவ பவுலர்களையெல்லாம் முதலில் வீசச் செய்து விட்டு கடைசி ஓவர் எனும் அக்னிப்பரீட்சையை அனுபவமற்ற நடராஜனிடம் நடத்தினார். அதில் அனாயாசமாக வென்றார் நடராஜன். யார்க்கர்கள் சரியாக விழாமல் போனால் பந்து வெளியே அடிக்கப்படும், ஆனால் இவரது யார்க்கர் நேற்று துல்லியமாக விழாவிட்டாலும் அடிக்க முடியாத அளவுக்கு துல்லியத்துடன் இருந்தது.  இந்நிலையில் நடராஜனுக்கு கிரிக்கெட் உலகம் பாராட்டு மழைகளைக் குவித்துள்ளது. மைக்கேல் வான், அவரது இருதயத் துடிப்பு எப்படி இருந்திருக்கும் என்பதை நினைத்துப் பார்க்க முடியவில்லை என்றார்.

  சாம் கரன் நடராஜன் ஒரு நல்ல பவுலர் என்று பாராட்டினார். கடைசி ஓவரில் நேற்று அவர் பந்து வீச்சில் சோடை போய் இந்திய அணி தோற்றிருந்தால் கோலியை விடுத்து நடராஜன் மீது பாய ஒரு கூட்டமே காத்திருந்திருக்கும்.

  இந்நிலையில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நடராஜன் விராட் கோலி தலைமையில் 3 தொடர்களையும் வென்றது குறித்து பதிவிட்ட போது, “கிரிக்கெட் ஒரு அருமையான விளையாட்டு. இந்திய அணியின் மறக்க முடியாத ஒருநாள் தொடர் வெற்றியில் எனது பங்களிப்பும் இருந்ததில் மகிழ்ச்சி.

  இந்திய அணியின் டிரசிங் ரூமில் நிலவும் சகோதரத்துவம், கடைசி வரை நம்பிக்கை இழக்காத உறுதி, என்னைப் பெரிதும் கவர்ந்தது. ஒவ்வொரு அங்குலமும் போராடி வெற்றி பெறும் போது அதன் சுவை இன்னும் இனிக்கும். ஆதரவு நல்கிய ரசிகர்களுக்கு நன்றி” என்று பதிவிட்டுள்ளார்.

  அதே போல் தன் ட்விட்டர் பக்கத்தில், “விடாப்பிடியான உறுதியுடன் இருந்தால் உங்களுக்கு அது கிடைக்கும். சீராக இருந்தால் அதைத் தக்கவைக்கலாம், வாழ்த்துக்கள் டீம் இந்தியா 3-0 சாம்பியன்ஸ்.” என்று பதிவிட்டுள்ளார்.

  3-0 என்பது டெஸ்ட், ஒருநாள், டி20 தொடர் வெற்றியைக் குறிக்கிறது.
  Published by:Muthukumar
  First published: