டி20-யில் வீசிய ஹர்திக் பாண்டியா, ஆல்ரவுண்டர் என்று கூறப்படுகிறது, ஆனால் பேட்டிங் மட்டுமே செய்கிறார், ஒருநாள் போட்டிகளில் அவரை பயன்படுத்தவில்லை, என்ன இதெல்லாம்? என்ன நடக்கிறது இங்கே என்று முன்னாள் அதிரடி மன்னன், இன்றைய அதிரடி கேள்விகளின் மன்னன் விரேந்திர சேவாக் சரமாரி கேள்வி எழுப்பியுள்ளார்.
இன்று 3வது இறுதி ஒருநாள் போட்டி நடைபெறுகிறது. இதுவரை 2 போட்டிகள் நடைபெற்றதில் முதல் போட்டியில் இந்தியா வெற்றி பெற, இரண்டாவது போட்டியில் இங்கிலாந்து சொல்லி சொல்லி அடித்து புரட்டி எடுத்து வென்று, 1-1 என்று சமன் செய்தனர்.
இந்நிலையில் கிரிக்பஸ் ஊடகத்துக்கு சேவாக் கூறும்போது, “ஒரு மாற்றத்துக்காகவாவது ஹர்திக் பாண்டியாவுக்கு 3-4 ஓவர்கள் கொடுக்கலாமாமே. டி20-யில் 4 ஓவர் போடுவாராம், ஆனால் ஒருநாள் போட்டியில் போடமாட்டாராம். என்ன இது?
அவர் பேட்ஸ்மெனாக மட்டுமே ஆடுகிறார் என்றால் பரவாயில்லை, அது போகட்டும் ஆனால் அவரது பெர்பார்மன்ஸ் பேட்டிங்கை வைத்துத்தான் எடைபோடப்பட வேண்டும், ஆல்ரவுண்டர் என்ற ஹோதாவில் கூடாது.
ஆல்ரவுண்டர் என்றால் ஒரு சாதகம் இருக்கிறது, பேட்டிங்கில் சொதப்பினாலும் பவுலிங்கில் ஒன்றிரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தி சரிகட்டலாம். ஆனால் வெறும் பேட்டிங் மட்டுமே என்றால் ஆல்ரவுண்டர் என்ற ஹோதாவில் அவரை அணியில் தக்க வைக்க முடியாது.
எனவே எனக்கு பாண்டியா வீசாதது ஏமாற்றமளிக்கிறது. அவர் பிரேக்த்ரூ கொடுத்தால் அது அணிக்கு நல்லதுதானே. ஹர்திக் பாண்டியாவின் பணிச்சுமையில் பவுலிங் இல்லை என்றால் நான் நினைக்கிறேன் வேறு ஏதோ பிரச்னை என்று. பாண்டியா உட்பட அனைவரது பணிச்சுமையையும் மேலாண்மை செய்வதாக கோலி கூறுகிறார். ஆனால் அதற்காக பாண்டியா ஒரு ஓவர் கூட போடாமல் ஆல் ரவுண்டர் என்று அணியில் எப்படி நீடிக்க முடியும்.
50 ஓவர்கள் களத்தில் களைப்பை ஏற்படுத்தும், எனவே இடையில் அவர் ஓவர்களை வீசினால் பணிச்சுமையெல்லாம் ஒன்றும் அதிகரிக்காது. பாண்டியாவின் பணிச்சுமை அதிகரித்ததாக முடிவு செய்வது யார்? தீர்மானிப்பது யார்? கோலிதான் தீர்மானிப்பாரா? அறுவை சிகிச்சை செய்து கொண்டு திரும்பியதால் பாண்டியா அதிக கிரிக்கெட் ஆடவில்லை, பின் எப்படி அவரது பணிச்சுமை அதிகரித்திருக்கும்” என்று சேவாக் விளாசித் தள்ளியுள்ளார்.
சேவாகுக்கு புரிகிறதா அல்லது உண்மையில் அவர் அப்பாவியா என்று தெரியவில்லை. விராட் கோலி அணித்தேர்வு செய்வதில் தீர்மானிப்பது நட்புதான் என்பது சேவாக்குக்குத் தெரியாமல் இருக்க வாய்ப்பில்லை. கோலியின் வணிக ஒப்பந்தங்களை கவனித்துக் கொள்ளும் ஸ்போர்ட்ஸ் நிறுவனம்தான் தற்போதைய சில இந்திய வீரர்களின் ஒப்பந்தங்களையும் கவனித்துக் கொள்கிறது. கோலியின் பெர்சனல் ஸ்பான்சர் நிறுவனம் பிசிசிஐ-யின் ஸ்பான்சராகவும் இருப்பதையும் இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ் அம்பலப்படுத்தியது என்பதும் சேவாகுக்கு தெரியாதா என்ன என்பது நமக்குத் தெரியவில்லை.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Captain Virat Kohli, Hardik Pandya, India Vs England, Virender sehwag