IND vs NZ Final | உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி ‘டை’, ‘டிரா’ எனும்போது கோப்பை யாருக்கு?

கோலி-வில்லியம்சன்.

இங்கிலாந்தில் ஜூன் மாதம் நடக்கும் நியூஸிலாந்து, இந்தியா அணிகளுக்கு இடையிலான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் இறுதி ஆட்டம் டிராவில் முடிந்தாலோ அல்லது டை ஆனாலோ வெற்றியாளரை எவ்வாறு தேர்வு செய்வது என்பது குறித்து ஐசிசி விளக்கம் அளித்துள்ளது.

 • Share this:
  ஏனெனில் 5 நாள் டெஸ்ட் எனும்போது மழை உள்ளிட்ட காலநிலை பிரச்சினைகள் ஏற்படலாம், பிட்ச் பேட்டிங் களமாகி ஆட்டம் 5 நாட்களில் எத்தரப்புக்கும் முடிவின்றி போட்டி நிறைவடையலாம். அல்லது ஸ்கோர்கள் சமமாகி டை ஆகலாம்.

  இந்தியாவில் நடந்தால் பிரச்னையே இல்லை, குழிப்பிட்சில் இரண்டரை நாட்கள் மிஞ்சிப் போனால் மூன்றரை நாட்களில் டெஸ்ட் முடிந்து விடும். ஆனால் இங்கிலாந்தில் அப்படியல்ல.

  சவுத்தாம்டன் நகரில் ஏஜெஸ் பவுல் மைதானத்தில் ஜூன் 18-ம் தேதி நடக்கும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி ஆட்டத்தில் இந்திய அணியும், நியூஸிலாந்து அணியும் பலப்பரீட்சை நடத்துகின்றன. இந்தப் போட்டிக்கான மார்க்கெட்டிங் பில்ட் அப்கள் ஏற்கெனவே தொடங்கிவிட்டன, கோலியா, வில்லியன்சனா, பும்ரா வில்லியம்சனுக்கு வீசினால் எப்படி இருக்கும், ரிஷப் பந்த் எனும் ஒரு அதிரடி காரணி, ட்ரெண்ட் போல்ட் பந்தில் கோலி ‘போல்டு’ ஆவாரா? என்ற ரகப் பேச்சுகள் இப்போதே கிளப்பி விடப்படுகின்றன.

  ஆனால் நியூசிலாந்து அணிக்கு அதிர்ஷ்டவசமாக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிக்கு முன்பாக இங்கிலாந்து அணியுடன் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி தங்களைத் தயார் செய்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது, இந்திய அணிக்கு அந்தப் போட்டியை பார்க்கும் வாய்ப்புத்தான் கிடைத்துள்ளது.

  இந்நிலையில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் கடைப்பிடிக்கப்படும் புதிய விதிமுறைகள் குறித்து சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) இன்று வெளியிட்டுள்ளது.

  இதன்படி, டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி டிராவில் முடிந்தாலோ அல்லது டையில் முடிந்தாலோ இந்தியா, நியூஸிலாந்து இரு அணிகளும் வெற்றியாளர்கள் என்று அறிவிக்கப்படுவார்கள்.

  ரிசர்வ் நாள் ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது. அந்த நாள் என்பது வழக்கமாக நடக்கும் 5 நாளில் ஏதேனும் நேர இழப்பு ஏற்பட்டால் அதை ஈடுகட்டும் வகையில் இந்த ரிசர்வ் நாள் பயன்படுத்தப்படும்.

  இரு அணிகளில் ஒரு அணிக்கு சாதகமான முடிவு கிடைக்க வேண்டும் என்பதற்காக கூடுதலாக ஒரு நாள் ஏதும் போட்டியில் சேர்க்கப்படாது. போட்டி டிராவில், டையில் முடிந்தால் இரு அணிகளும் சாம்பியன்களாக அறிவிக்கப்படுவார்கள்.

  ஒவ்வொரு நாள் ஆட்டத்தின்போது ஏற்படும் நேர இழப்பு குறித்து போட்டி நடுவர்கள் அணி நிர்வாகிகளிடமும், ஊடகத்திடமும் அறிவிப்பார்கள். ரிசர்வ் நாளை எவ்வாறு பயன்படுத்துவது என்பது கடைசி நாளில் அதாவது 5-வது நாளில் முடிவு செய்யப்படும்.

  இந்தப் போட்டியில் கிரேட்-1 டியூக் பந்துகள்தான் பயன்படுத்தப்படும். இந்தியாவுக்கு ஏற்ப எஸ்ஜி பந்துகளோ அல்லது நியூஸிலாந்துக்கு ஏற்ப கூக்கபுரா பந்துகளோ பயன்படுத்தப்படாது.

  புதிய விதிகள்:

  ஷார்ட் ரன்: பேட்ஸ்மேன்கள் ரன் ஓடும்போது ஒரு பேட்ஸ்மேன் கிரீஸை சரியாகத் தொடாமல் ஓடிவிட்டால் (ஷார்ட் ரன்) மூன்றாவது நடுவர் தாமாகவே அதை ஆய்வுக்கு எடுத்துக்கொண்டு, அந்த முடிவைக் கள நடுவர்களுக்கு, அடுத்த பந்து வீசுவதற்குள் தெரிவிப்பார்.

  எல்.பி.டபிள்யூ: எல்பிடபிள்யு அவுட் குறித்து ஃபீல்டிங் அணியின் கேப்டன் டிஆர்எஸ் ஆய்வுக்குக் கேட்கும் முன், அல்லது பேட்ஸ்மேன் டிஆர்எஸ் கோரும் முன், கள நடுவரிடம் உண்மையாகவே கால்காப்பில் பந்துபட்டதா என்பதை உறுதி செய்து கேட்க வேண்டும்.

  எல்பிடபிள்யு அவுட் வழங்கும் முறையில் பந்து ஸ்டெம்ப்பின் மேல் இருக்கும் பெயில்ஸ் பாதிப் பகுதியைத் தொடுமாறு சென்றாலும் அது அம்பயர்ஸ் கால் வழங்கப்படும். அதேபோல ஸ்டெம்பின் உயரம் மட்டுமல்லாது, பரப்பளவிலும் பாதியளவுக்கு பந்து உரசிச் செல்லும் என்றாலும் அம்பயர்ஸ் கால் வழங்கப்படும்.

  இவ்வாறு ஐசிசி தெரிவித்துள்ளது.
  Published by:Muthukumar
  First published: