இந்திய அணியின் சமீபத்திய ஆட்டங்கள் உச்சத்தை நோக்கி சென்று கொண்டிருப்பதால் 2023 ஐசிசி 50 ஓவர் கிரிக்கெட் உலகக்கோப்பையில் இந்தியாதான் வெற்றி பெற அதிக வாய்ப்புள்ள அணி என்று முன்னாள் வீரர் தீப் தாஸ் குப்தா தெரிவித்துள்ளார்.
2011 உலகக்கோப்பையை வென்று 10 ஆண்டுகள் ஆனதை நேற்று முதல் இந்திய ரசிகர்கள், வீரர்கள், முன்னாள் வீரர்கள் கொண்டாடி வருகின்றனர். 12 ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய மண்ணில் 2023ம் ஆண்டு ஐசிசி உலகக்கோப்பை நடைபெறவிருக்கிறது. இந்தத் தொடரில் இந்தியாதான் கோப்பையை வெல்லும் என்று இப்போதிருந்தே பேசப்பட்டு வருகின்றது.
ஐசிசி உலகக்கோப்பைக்கு இன்னும் 2 ஆண்டுகள் உள்ளன, அதற்குள் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம் ஆனால் இந்திய அணியின் முன்னாள் வீரர்கள் பெரிய ஒரு கனவில் வாழ்ந்து கொண்டு உலகக்கோப்பையை இந்தியாதான் வெல்லும் என்று ஹேஷ்யம் கூறத் தொடங்கியுள்ளனர். அப்படித்தான் தீப் தாஸ் குப்தாவும் நாளையே உலகக்கோப்பை என்று கூறுங்கள் இந்தியாதான் உலகக்கோப்பையை வெல்லும் என்று அடித்து விட்டுள்ளார்.
அவர் கூறியதாவது:
ஒருநாள் சர்வதேசப் போட்டிகளைப் பொறுத்தவரை இந்தியா நல்ல நிலையிலேயே உள்ளது. டாப் 3 அணிகளில் இருப்பார்கள். அனைத்திற்கும் மேலாக இளைஞர்களின் பங்களிப்பு ஆறுதல் அளிக்கிறது. அதிருப்தி வீரர்களுக்கு நெருக்கடி அளிக்கின்றனர் இளம் வீரர்கள். உதாரணம் ஷிகார் தவானுக்கு நெருக்கடி அளிக்க விஜய் ஹசாரேயில் ரன்களைக் குவித்த படிக்கால், பிரிதிவி ஷா உள்ளனர்.
ஏற்கெனவே மயங்க் அகர்வால், கே.எல்.ராகுல் உள்ளனர். ஆரோக்கியமான போட்டி நிலவுகிறது, இது இந்திய அணிக்கு நல்ல வலுவைச் சேர்க்கிறது.
உலகக்கோப்பை கிரிக்கெட் நவம்பர் 2023-ல் நடக்கிறது. ஏன்? நாளையே உலகக்கோப்பை தொடங்குகிறது என்றாலும் இந்தியாதான் உலகக்கோப்பையை வெல்லும் அணியாக உள்ளது.
இப்படியிருக்கையில் 2023-ல் அணி இன்னும் மேம்படவே செய்யும் வலுவடையவே செய்யும். இந்தியா தனக்கு பழகிய பாணியில் ஆட வேண்டும், இங்கிலாந்து டாப் ஆர்டர் வருவது வரட்டும் என்று ஆக்ரோஷம் காட்டுவதால் நாமும் காட்ட வேண்டிய அவசியமில்லை. அவர்களிடம் அதற்கான வீரர்கள் இருக்கிறார்கள். நாம் அதைக் கடைப்பிடிக்க வேண்டிய அவசியமில்லை என்றே கருதுகிறேன்
இவ்வாறு கூறினார் தீப் தாஸ் குப்தா.
2015 உலகக்கோப்பையில்
தோனியின் தலைமையின் கீழ் கடைசியாக ஆடிய போது இந்தியா தோற்கடிக்க முடியாமல் வந்து கடைசியில் ஆஸ்திரேலியாவிடம் அரையிறுதியில் 95 ரன்களில் தோற்றது. 4 வருடங்கள் சென்று இங்கிலாந்தில் நடந்த 2019 உலகக்கோப்பையில் கூட விராட் கோலி தலைமையில் அரையிறுதி வரை வந்து எளிய இலக்கான 239 ரன்களை எட்ட முடியாமல் வீழ்ந்து வெளியேறியது.