Home /News /sports /

நான் அஸ்வினைக் காயப்படுத்தியிருந்தால் அதற்காக மகிழ்கிறேன் - ரவி சாஸ்திரி பதிலடி

நான் அஸ்வினைக் காயப்படுத்தியிருந்தால் அதற்காக மகிழ்கிறேன் - ரவி சாஸ்திரி பதிலடி

ரவி சாஸ்திரி, அஸ்வின்

ரவி சாஸ்திரி, அஸ்வின்

“அனைவருக்கும் தடவிக்கொடுப்பது போல் வெண்ணையாகப் பேசுவது என் வேலையல்ல. எந்த ஒரு முன் திட்டமும் இல்லாமல் உண்மையைக் கூறுவதுதான் என் பணி. நான் குல்தீப் யாதவ்வை பாராட்டியது அஸ்வினைக் காயப்படுத்தியிருந்தால் அதனால் எனக்கு மகிழ்ச்சிதான்.

    வெளிநாடுகளில் இந்தியாவின் நம்பர் 1 ஸ்பின்னர் குல்தீப் யாதவ் என்று பயிற்சியாளர் ரவி சாஸ்திரி சொன்னது தன் இதயத்தை நொறுங்கச் செய்தது என்று ரவிச்சந்திரன் அஸ்வின் கூறியதற்கு ரவி சாஸ்திரி கறார் பதிலடி கொடுத்துள்ளார்.

    இது தொடர்பாக ரவி சாஸ்திரி ஆங்கில ஊடகம் ஒன்றில் கூறும்போது, “அனைவருக்கும் தடவிக்கொடுப்பது போல் வெண்ணையாகப் பேசுவது என் வேலையல்ல. எந்த ஒரு முன் திட்டமும் இல்லாமல் உண்மையைக் கூறுவதுதான் என் பணி. நான் குல்தீப் யாதவ்வை பாராட்டியது அஸ்வினைக் காயப்படுத்தியிருந்தால் அதனால் எனக்கு மகிழ்ச்சிதான்.

    அது அஸ்வினை வித்தியாசமாக வீசச் செய்தால் அது நன்மைதானே. அஸ்வின் சிட்னியில் ஆடவில்லை, குல்தீப் யாதவ்தான் ஆடினார். குல்தீப் யாதவ் அருமையாக வீசினார், 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். குல்தீப் யாதவுக்கு வாய்ப்பு கொடுத்தது நியாயம்தான். சரி ஒரு பயிற்சியாளர் ஒரு பவுலருக்கு சவால் விடுக்கிறார் என்றால் அவர் என்ன செய்ய வேண்டும்?

    வீட்டுக்குப் போய் கோவென்று கதறி அழுது, ‘போ, நான் இனிமே வரவே மாட்டேன்’ என்று குழந்தை போல் அடம்பிடிப்பதா? நான் அஸ்வின் இடத்தில் இருந்தால், சவாலை ஏற்றுக் கொண்டு கோச் எப்படி தவறு என்று நிரூபிப்பேன். பஸ்ஸுக்கு அடியில் அஸ்வினை விட்டது பற்றி கூறுகிறார், ஆனால் நான் பஸ் டிரைவரிடம் 2-3 அடி முன்னாலேயே பஸ்ஸை நிறுத்தச் சொன்னேன்’ என்று பயங்கர நக்கலாக பேட்டியில் கூறியுள்ளார் ரவி சாஸ்திரி.

    அவர் மேலும் கூறும்போது, 2018-ல் அஸ்வினிடம் கூறியது என்னவெனில் அவர் உடற்தகுதியில் 100% சரியாக வேண்டும் என்பதே. அதில் அவர் சிறப்பாக பணியாற்றினார், பாருங்கள் அஸ்வின் இப்போது எப்படி வீசுகிறார் என்று. அவர் வேர்ல்ட் கிளாஸ். 2019-லும் 2021-லும் அஸ்வின் பயங்கரமாக வீசுகிறார். ஈகோக்கள் இருக்கவே செய்யும் ஆனால் ஈகோவை நாம் எப்படி கட்டுப்படுத்தி திசைவழிப்படுத்துகிறோம் என்பதுதான் முக்கியம். இங்குதான் இருக்கிறது நம் மேன் மேனேஜ்மெண்ட் திறமைகள், என்றார் ரவி சாஸ்திரி.

    முன்னதாக ஈஎஸ்பின் கிரிக் இன்போ இணையதளத்தில் அஸ்வின் இது தொடர்பாக கூறியபோது, “குல்தீப் யாதவ் நம்பர் 1 ஓவர்சீஸ் ஸ்பின்னர் என்று கூறிய அந்தத் தருணம் என்னை உடைத்து நொறுக்கி விட்டது. குல்தீப் யாதவுக்காக நான் உண்மையில் மகிழ்ச்சியடைகிறேன். என்னால் 5 விக்கெட்டுகளை எடுக்க முடியவில்லை, குல்தீப் யாதவ் எடுத்தார். அது எவ்வளவு பெரிய விஷயம் என்பதும் எனக்குத் தெரியும்.

    நான் நன்றாக வீசினாலும் 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றவில்லை என்பது ஒரு குறைதான். நான் உண்மையிலேயே குல்தீப் யாதவுக்காக மகிழ்கிறேன். ஆஸ்திரேலியாவில் வெல்வது மிக மிக மகிழ்ச்சியான தருணம். ஆனால் நான் அவருடைய வெற்றியில் பங்கேற்கும் போது, அணி அதை கொண்டாடும்போது நான் அந்த இடத்துக்குரியவன் என்பதை நான் உணர வேண்டும். ஆனால் என்னை ஒருமாதிரி மட்டம் தட்டி விட்டால் நான் எப்படி பார்ட்டியில் கலந்து கொள்ள முடியும். சக வீரரின் வெற்றியை என்னால் கொண்டாட முடியும்?” என்று கூறியதற்குத்தான் ரவி சாஸ்திரி பதிலடி கொடுத்துள்ளார்.
    Published by:Muthukumar
    First published:

    Tags: R Ashwin, Ravi Shastri

    அடுத்த செய்தி