ஐசிசி மகளிர் டி20 உலகக்கோப்பை... இந்திய அணி கடந்து வந்த பாதை

ICC Womens T20 Worldcup

 • Share this:
  கிரிக்கெட் என்றாலே ஆண்கள் விளையாட்டு என்றிருந்ததை தற்போது நம்மூர் பெண்கள் மாற்றத் தொடங்கியுள்ளனர். நடப்பு ஐசிசி மகளிர் உலகக்கோப்பை தொடரில் இந்திய மகளிர் அணி அரையிறுதி வரை முன்னேறியுள்ளது.

  ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் 7-ஆவது மகளிர் டி20 உலகக் கோப்பைப் போட்டியில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, இந்தியா, உள்ளிட்ட 10 அணிகள் பங்கேற்றுள்ளன. இந்திய அணியைப் பொறுத்தவரை, நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியாவை 17 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி கணக்கைத் தொடங்கியது. அடுத்த போட்டியில் வங்கதேசத்தையும், தொடர்ந்து பலம் வாய்ந்த நியூஸிலாந்து மற்றும் இலங்கையை வீழ்த்தி அரையிறுதிக்குள் முதல் அணியாக நுழைந்தது.

  எனினும் ஒவ்வொரு போட்டியிலும் கடும் போராட்டத்திற்கு பின்பே வெற்றி பெற்றுள்ளது. பேட்டிங்கைப் பொறுத்தவரை, தொடக்க வீராங்கனையான ஷஃபாலி வெர்மா தவிர யாரும் பெரிதாக சோபிக்கவில்லை. 16 வயதே ஆன ஷஃபாலி வெர்மா முதல் மூன்று ஆட்டங்களிலும் முறையே 29, 39, 46 ரன்களை விளாசி இருந்தார். குறிப்பாக இலங்கையுடன் நடைபெற்ற கடைசி ஆட்டத்தில் ஷஃபாலி, 34 பந்துகளில் 47 ரன்கள் விளாசி அதிரவைத்தார். பவர்பிளேயில் எதிரணி பந்துவீச்சாளர்களுக்கு இரக்கம் காட்டுவதே இல்லை என்பதால், 'ராக்ஸ்டார்', லேடி சேவாக்,' என்றெல்லாம் பெயரெடுத்துள்ளார்

  தொடக்க வீராங்கனையாக களமிறங்கும் ஸ்மிருதி மந்தானா இதுவரை சரிவர ஆடவில்லை. அனுபவ வீராங்கனையான அவா் தொடா்ந்து சொதப்பி வருகிறார். தொடக்கம் சரியாக அமையாததாலேயே இதுவரை பெரியளவிலான ஸ்கோரை எட்ட முடியாமல் தவித்து வருகிறது இந்தியா.

  மிடில் ஆா்டரைப் பொறுத்தவரை கேப்டன் ஹா்மன்ப்ரீத் கவுர், ஜெமிமா ரோட்ரிக்ஸ், வேதா கிருஷ்ணமூா்த்தி ஆகியோர் அணியின் வெற்றிக்கு தங்கள் பங்களிப்பாக எதையும் தரவில்லை. இதனால் எதிர்வரும் 'நாக்-அவுட்' சுற்றுப் போட்டிகளில் டாப் ஆர்டர் சரிந்தால், அணியை மீட்க மிடில் ஆா்டா் தயாராக இருக்குமா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.

  பந்துவீச்சைப் பொறுத்தவரை சுழற்பந்துவீச்சாளர்களே ஆதிக்கம் செலுத்திவருகிறார். பூனம் யாதவ், ராதிகா யாதவ் ஆகியோர் பல இக்கட்டான தருணங்களில் தங்கள் சுழல் மூலமே இந்திய அணிக்கு திருப்புமுனையை ஏற்படுத்தியுள்ளனர். மிதவேகத்தில் பந்துவீசும் ஷிகா பாண்டேவும் அவ்வப்போது மிரட்டுகிறார். பந்து வீச்சாளர்களின் பங்களிப்பாலேயே, இந்திய அணி அரையிறுதிக்குள் நுழைந்துள்ளது என்றே கூறலாம்

  இந்நிலையில் நாளை சிட்னியில் நடைபெற உள்ள அரை இறுதி ஆட்டத்தில் பலம் வாய்ந்த இங்கிலாந்தை எதிர்கொள்கிறது. உலக கோப்பை வரலாற்றில் இதுவரை மூன்று முறை இந்திய அணி அரைஇறுதியில் விளையாடியுள்ளது. கடைசியாக 2018-ல் நடந்த அரைஇறுதிப்போட்டியில் இங்கிலாந்திடம் தோல்வியுற்று தொடரிலிருந்து வெளியேறியிருந்தது. இந்தமுறை தனது குறைகளெயெல்லாம் சரிசெய்து முதல்முறையாக இறுதி போட்டிக்கு முன்னேறும் என்ற நம்பிக்கையோடு காத்திருக்கின்றனர் ரசிகர்கள்.

  இந்நிலையில் சிட்னியில் மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக ஆஸ்திரேலிய வானிலை மையம் தெரிவித்துள்ளது. அவ்வாறு நாளை மழைபெய்து போட்டி தடைபட்டால் ரன்ரேட் அடிப்படையில் இந்திய அணி நேரடியாக இறுதிப்போட்டிக்கு முன்னேறும்.
  Published by:Vijay R
  First published: