நியூசிலாந்தில் நடந்து வரும் பெண்கள் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இன்று மவுன்ட் மாங்கானுவில் நடைபெற்ற 15-வது லீக் ஆட்டத்தில் இந்திய அணி, நடப்பு சாம்பியன் இங்கிலாந்தை எதிர்கொண்டது. இதில் இங்கிலாந்து அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இதன்படி இந்திய அணி முதலாவதாக பேட்டிங் செய்தது. இந்திய அணியின் தொடக்க வீராங்கனையாக களமிறங்கிய யாஷ்டிகா பாட்டியா 8 ரன்னிலும், அவரை தொடர்ந்து களமிறங்கிய கேப்டன் மிதாலி ராஜ் 1 ரன்னிலும் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தனர். அடுத்து வந்த தீப்தி சர்மா, ஹர்மன்பிரீத் கவுர், சிநேஹ் ராணா ஆகியோரும் சொதப்பலாக ஆடி வெளியேற ஆட்டமிழக்க இந்திய அணியின் ஸ்கோர் சரிவு பாதையில் சென்றது.
ஸ்மிரிதி மந்தனா மட்டும் ஒரு முனையில் சுமாராக ஆடி 35 ரன்களை எடுத்தார். இந்திய அணி 100 ரன்களை தாண்டுமா என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இந்திய அணியின் விக்கெட்கீப்பர் ரிச்சா கோஷ் 33 ரன்கள் எடுத்து அணியின் ஸ்கோரை உயர்த்த உதவினார். அவருக்கு பக்கபலமாக ஆல் ரவுண்டர் ஜூலன் கோஸ்வாமி 20 ரன்கள் எடுத்தார்.இருவரும் 47 ரன்கள் சேர்த்தனர்.
இறுதியில் இந்திய மகளிர் அணி 36.2 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 134 ரன்கள் எடுத்தது. இங்கிலாந்து அணியில் சிறப்பாக பந்துவீசிய சரோலெட் டீன் 4 விக்கெட்டுகளை சாய்த்தார்.
இங்கிலாந்து ஆரம்பத்தில் இரண்டு விக்கெட்டுகளை இழந்தது, அந்த அணியின் தொடக்க வீராங்கனைகள் டாமி பியூமண்ட் மற்றும் டேனியல் வியாட் ஆகிய இருவரும் 1 ரன்னில் ஆட்டமிழந்தனர்.
ஆனால் பின்னர் ஜோடியான நைட் மற்றும் நடாலி ஸ்கிவர் ஜோடி 65 ரன் பார்ட்னர்ஷிப்பில் இணைந்து இந்தியாவிடம் இருந்து ஆட்டத்தை எடுத்துச் சென்றனர். ஸ்கிவர் 45 ரன்களில் வீழ்ந்தார், ஆனால் நைட் திடமாக பேட்டிங் செய்தார். சிறப்பாக விளையாடிய ஹீத்தர் நைட் 53 ரன்கள் எடுத்து அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்து சென்றார்.
இறுதியில் 31.2 ஓவரில் இங்கிலாந்து அணி 6 விக்கெட் இழப்பிற்கு 136 ரன்கள் எடுத்தது. இதன்மூலம், 4 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது.
சிறப்பாக பந்துவீசிய சரோலெட் டீன் சிறந்த வீராங்கனையாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்திய அணியில் அதிகபட்சமாக மேக்னா சிங் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
மிதாலி ராஜ் தலைமையிலான இந்திய அணி தனது முதலாவது ஆட்டத்தில் பாகிஸ்தானை தோற்கடித்தது. 2-வது ஆட்டத்தில் நியூசிலாந்திடம் பணிந்தது. மூன்றாவது போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணியை பந்தாடிய இந்திய மகளிர் அணி, இங்கிலாந்துக்கு எதிரான 4வது போட்டியில் படுமோசமாக தோல்வியை சந்தித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: ICC world cup, India Vs England