ஆண்டிகுவாவின் கூலிட்ஜில் நேற்று நடைபெற்ற ஐசிசி அண்டர்-19 உலகக்கோப்பை அரையிறுதிப்போட்டியில் வலுவான ஆஸ்திரேலிய இளம் படையை இந்திய இளம்புலிகள் 96 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தொடர்ச்சியாக 4வது முறையாக உலகக்கோப்பை இறுதிக்குத் தகுதி பெற்றது.
இந்திய அணி நிதானமாக தொடங்கி போகப்போக ஆக்ரோஷம் ஏற்றியது, கேப்டன் யாஷ் துல் 110 ரன்களை விளாச, வைஸ் கேப்டன் ரஷீத் 94 ரன்களை எடுக்க 204 ரன்களை இருவரும் சேர்ந்து எடுக்க இந்திய யு-19 அணி 37/2 என்பதிலிருந்து 290 ரன்களுக்கு 5 விக்கெட் என்று இன்னின்ஸை பிரமாதமாக முடித்தது. தொடர்ந்து ஆடிய ஆஸ்திரேலியா யு-19 அணி 194 ரன்களுக்குச் சுருண்டது. ஆஸ்ட்வால் 3 விக்கெட்டுகளையும் சிந்து, ரவி தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
ஸ்பின் பலவீனத்தை இந்திய பவுலிங் சரியாகப் பயன்படுத்திக் கொண்டது. 71/1 என்று இருந்த ஆஸ்திரேலியா இந்திய சுழலில் சிக்கி 125/7 என்று சரிவு கண்டது. மூன்றாவது முறையாக இந்திய யு-19 அணி ஆஸ்திரேலிய யு-19 அணியை தொடர்ச்சியாக உலகக்கோப்பைகளில் காலி செய்துள்ளது.
ஆனால், முதல் இன்னிங்ஸில் இரு தொடக்க வீரர்களையும் மலிவாக இழந்தது இந்திய அணி. . வில்லியம் சால்ஸ்மேன், ரகுவன்ஷியின் ஸ்டம்புகளை சீக்கிரமே பெயர்த்தார். விரைவில் ஹர்னூர் சிங் ஜாக் நிஸ்பெட்டை கீப்பரிடம் கேட்ச் கொடுத்து பின்தொடர்ந்தார். 2 விக்கெட்டுக்கு 37 ரன்கள் எடுத்திருந்தபோது, ரஷீத் மற்றும் துல் இருவரும் ரன்களை எடுக்க அவசரப்படவில்லை.
மிக அருமையாக ஆடிய துல், மற்றும் ரஷீத் 13வது ஓவரில் இருந்து 28வது ஓவர் வரை இருவரும் மூன்று பவுண்டரிகளை மட்டுமே அடித்தனர், நங்கூரம் போடுவதை ஆரம்பத்திலேயே தெளிவுபடுத்தினர். அணியின் மொத்த எண்ணிக்கை 100ஐ எட்டும் வரை, ஓவருக்கு 4-5 ரன்களை மட்டுமே இடைவெளிகளில் தட்டி விட்டு எடுத்துக் கொண்டிருந்தனர்.
31 வது ஓவரில் யாஷ் துல் புல் ஷாட் மூலம் 64 பந்தில் தன் அரைசதத்தை எடுத்தார். பவுண்டரிகளாக இவர் திடீரென ஆக்ரோஷம் காட்ட இந்திய அணி 36 ஓவர்களில் 150 ரன்களை எட்டியது. ரஷீத் ரன் அவுட் வாய்ப்பிலிருந்து தப்பி 78 பந்துகளில் அரைசதம் கண்டார். அதன் பிறகு துல்லும் இவரும் தூள் பறத்த பவுண்டரிகள் சர்மாரியாக வந்தன. 41வது ஓவரில் ஆஸி. பவுலர் சால்ஸ்மேனை 3 பவுண்டரிகள் விளாசினார் ரஷீத். பின் தங்கியிருந்த ரஷீத் விரைவில் 90களுக்குள் புகுந்தார், துல் பிறகு 2 பவுண்டரிகளுடன் 90லிருந்து 98க்கு நகர்ந்தார். பிறகு 2 ரன்கள் எடுத்து சதத்தை நிறைவு செய்தார். சதத்தை கொண்டாடும் சிக்ஸ் ஒன்றையும் அடித்து 110 ரன்களில் ரன்னர் முனையில் துரதிர்ஷ்டவசமாக ரன் அவுட் ஆனார். அடுத்த பந்தே ரஷீத் 94ல் பாயிண்டில் கேட்ச் ஆகி வெளியேறினார்.
ஆனால் பிறகு இறங்கிய டெய்ல் எண்டர்கள் வெளுத்துக் கட்டினர். ராஜ்யவர்தன் ஹங்கர்கேக்கர் ஒரு சிக்ஸ் ஒரு பவுண்டரியுடன் 13 ரன்களை எடுக்க, நிஷாந்த் சிந்துவும் ஒரு பவுண்டரி ஒரு சிக்சுடன் 12 ரன்கள் எடுக்க கடைசியில் தினேஷ் பானா 4 பந்துகலிள் 2 பவுண்டரி 2 சிக்சர்களுடன் 20 ரன்கள் விளாச இந்திய அணி கடைசி 18 பந்துகளில் 47 ரன்கள் விளாசியது. இந்தியா 290/5 என்று முடிந்தது.
ஸ்பின்னில் சரிந்த ஆஸ்திரேலியா
தொடங்கும்போதே ஆஸ்திரேலியாவுக்கு அதிர்ச்சிக் காத்திருந்தது. ஓபனர் டீகு வைலி ரவிக்குமார் பந்தில் எல்.பி. ஆனார். இருப்பினும், கோரி மில்லர் மற்றும் கேம்ப்பெல் கெல்லவே ஆகியோர் இரண்டாவது விக்கெட்டுக்கு 68 ரன்களை இணைத்து இன்னிங்ஸை மீட்டெடுக்க வழிவகுத்தனர்.
இருப்பினும், சுழற்பந்து வீச்சாளர்கள் அறிமுகப்படுத்தப்பட்டதும் போட்டியை இந்தியா உறுதியாகக் கைப்பற்றியது. விக்கி ஓஸ்ட்வால் தலைமையிலான இந்திய சுழற்பந்து வீச்சுத் தாக்குதலால், லாச்லன் ஷா மட்டும், போராடி அரை சதத்தை - 66 ரன்களில் 51 ரன்களை அடித்தார்.
ஓஸ்ட்வால் 3 விக்கெட்டுகளையும், நிஷாந்த் சிந்து மற்றும் ரவிக்குமார் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். ரகுவன்ஷி, கவுஷல் தம்பே ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.
Brief Scores: India U-19 290/5 (Yash Dhull 110, Shaik Rasheed 94; Jack Nisbet 2/41) beat Australia U-19 194 (Lachlan Shaw 51; Vicky Ostwal 3/42) by 96 runs
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: ICC world cup