டெஸ்ட் போட்டிகளில் வெளுத்து வாங்கி வரும் ரிஷப் பந்த் ஐசிசி டெஸ்ட் பேட்ஸ்மென்கள் தரவரிசையில் 7ம் இடத்துக்கு முன்னேறியுள்ளார்.
747 புள்ளிகளுடன் 14ம் இடத்திலிருந்து ரிஷப் பந்த் 7ம் இடத்துக்கு முன்னேறினார். சமீபத்தில் அகமதாபாத் டெஸ்ட் போட்டியில் அதிரடி சதமெடுத்து ஆட்ட நாயகன் விருதைத் தட்டிச் சென்றார். 7வது இடத்தில் ரோகித் சர்மா, நியூஸிலாந்தின் ஹென்றி நிகோலஸ் ஆகியோரும் உள்ளனர்.
இவரைப்போலவே பேட்டிங்கில் பின் வரிசையில் இறங்கி கலக்கி வரும் வாஷிங்டன் சுந்தர் 494 புள்ளிகளுடன் 39 இடங்கள் முன்னேறி 62ம் இடத்தில் உள்ளார். விராட் கோலி சமீபமாக சரியாக ஆடாமல் சொதப்பி வந்தாலும் 814 புள்ளிகளுடன் 5ம் இடத்தில் உள்ளார்.
முதலிடத்தில் நியூஸிலாந்தின் கேன் வில்லியம்சன் தொடர்கிறார். இவர் 919 புள்ளிகளில் இருக்கிறார். பவுலிங் தரவரிசையில் 850 புள்ளிகளுடன் ரவிச்சந்திரன் அஸ்வின் 3ம் இடத்திலிருந்து 2ம் இடத்துக்கு முன்னேறியுள்ளார்.
அஸ்வின் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் 4 டெஸ்ட் போட்டிகளில் 32 விக்கெட்டுகளைச் சாய்த்தார். கடைசி டெஸ்ட் போட்டியில் 8 விக்கெட்டுகளைச் சாய்த்தார்.
2017-ம் ஆண்டு ஆகஸ்டுக்குப் பிறகு தரவரிசையில் 2ம் இடம் பிடித்துள்ளார். இங்கிலாந்துக்கு எதிராக 27 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய அக்சர் படேல் 8 இடங்கள் முன்னேறி 30வது இடத்துக்கு வந்துள்ளார். மேலும் முதல் 3 டெஸ்ட் போட்டிகளிலேயே அதிக ரேங்கிங் புள்ளிகள் பெற்ற 3வது பவுலர் ஆனார். இதற்கு முன்பாக இந்திய சுழற்பந்து வீச்சாளர் நரேந்திர ஹிர்வானி 564 புள்ளிகள் பெற்றதே அதிகமாக இருந்தது. தற்போது அக்சர் படேல் 552 புள்ளிகள் பெற்றுள்ளார்.
பவுலிங் தரவரிசையில் எவர் கிரீன் பாட் கமின்ஸ் 908 புள்ளிகளுடன் முதலிடம் வகிக்கிறார். ஆல்ரவுண்டர் தரவரிசையில் அஸ்வின் 4வது இடத்துக்கு முன்னேறினார். ஜேசன் ஹோல்டர், பென் ஸ்டோக்ஸ் ஜடேஜா ஆகியோர் முதல் 3 இடங்களில் உள்ளனர்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.