சென்னை சேப்பாக்கம் டெஸ்ட் வெற்றி எதிரொலி: ஐசிசி தரவரிசை பட்டியலில் ரவிச்சந்திரன் அஸ்வின், ரோஹித் சர்மா, ரிஷப் பந்த் முன்னேற்றம்!

சென்னை சேப்பாக்கம் டெஸ்ட் வெற்றி எதிரொலி: ஐசிசி தரவரிசை பட்டியலில் ரவிச்சந்திரன் அஸ்வின், ரோஹித் சர்மா, ரிஷப் பந்த் முன்னேற்றம்!

ரவிச்சந்திரன் அஸ்வின்

முதல் இன்னிங்ஸில் 58 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்த ரிஷப் பந்த், தனது கேரியரிலேயே சிறந்த நிலையாக 11வது இடத்துக்கு முன்னேறியுள்ளார்.

  • Share this:
இங்கிலாந்து அணிக்கு எதிராக சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் பெற்ற வெற்றியின் மூலம் இந்திய அணியின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்த ரவிச்சந்திரன் அஸ்வின், ரோகித் சர்மா ஆகியோர் ஐசிசி டெஸ்ட் தரவரிசை பட்டியலில் முன்னேற்றம் அடைந்துள்ளனர்.

இங்கிலாந்து அணியுடனான முதல் டெஸ்ட் போட்டியில் தோல்வியடைந்த இந்திய அணி, சென்னை ரசிகர்கள் முன்னிலையில் சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற 2வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 317 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அசத்தியதுடன் தொடரையும் 1-1 என்ற கணக்கில் சமன் செய்தது.

ரோகித் சர்மா, மண்ணின் மைந்தன் ரவிச்சந்திரன் அஸ்வின் ஆகியோரின் ஆட்டமே இந்திய அணி வெற்றிக்கு முக்கியமாக அமைந்தது. முதல் இன்னிங்ஸில் ரோகித் சர்மா எடுத்த 161 ரன்கள் இந்திய அணிக்கு வலுவான அடித்தளத்தை ஏற்படுத்திக் கொடுத்தது.

இந்நிலையில் தற்போது வெளியிடப்பட்ட ஐசிசியின் டெஸ்ட் வீரர்களுக்கான தரவரிசையில் ரோகித் சர்மா 9 இடங்கள் முன்னேறி 14வது இடத்தை பிடித்துள்ளார். 2019 நவம்பருக்கு பிறகு ரோகித்தின் சிறந்த தரநிலை இதுவாகும். ராஞ்சியில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக இரட்டை சதம் அடித்த பின்னர் கடந்த அக்டோபர் 2019-ல் ரோகித் சர்மா ஐசிசி தரவரிசையில் 10வது இடத்துக்கு முன்னேறினார். இதுவே அவரின் சிறந்த தரநிலையாக அமைந்தது.

அதே போல உள்ளூர் நாயகனான ரவிச்சந்திரன் அஸ்வின், சேப்பாக்கத்தில் சதம் அடித்து இந்திய அணியின் வெற்றியை பிரகாசப்படுத்தினார். இதன் மூலம் பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசையில் 14 இடங்கள் முன்னேறி 81வது அஸ்வின் பிடித்துள்ளார். இதே போட்டியில் 8 விக்கெட்கள் வீழ்த்திய போதும் பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசையில் 7வது இடத்திலேயே அஸ்வின் தொடருகிறார்.

இதே போல முதல் இன்னிங்ஸில் 58 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்த ரிஷப் பந்த், தனது கேரியரிலேயே சிறந்த நிலையாக 11வது இடத்துக்கு முன்னேறியுள்ளார். இடது கை ஸ்பின்னரான குல்தீப் யாதவ் 50வது இடத்தில் உள்ளார்.

இப்போட்டியில் அறிமுக வீரராக களமிறங்கிய அக்ஸர் பட்டேல் 7 விக்கெட்களை வீழ்த்தியிருக்கிறார், இதில் 2வது இன்னிங்ஸில் 5 விக்கெட் வீழ்த்தியதும் அடங்கும். இதன் மூலம் தரவரிசை பட்டியலில் முதல் முறையாக இடம்பிடித்துள்ள அக்ஸர் பட்டேல் 68 இடத்தை பிடித்துள்ளார்.

நேற்று வெளியான டெஸ்ட் அணிகளுக்கான தரவரிசை பட்டியலில் 4வது இடத்தில் இருந்த இந்திய அணி 2வது இடத்திற்கு முன்னேறியது குறிப்பிடத்தக்கது.
Published by:Arun
First published: