ஐ.சி.சி வெளியிட்டுள்ள டி20 பேட்ஸ்மேன்கள் தரவரிசைப்பட்டியலில் டாப் 10-ல் இரண்டு இந்திய வீரர்கள் இடம்பிடித்துள்ளனர். ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை இந்திய அணி 2-1 என்ற கணக்கில் வென்றது. இந்த தொடருக்கு பின் ஐ.சி.சி தரவரிசைப்பட்டியலை தற்போது வெளியிட்டுள்ளது.
ஐசிசி டி20 பேட்ஸ்மேன் தரவரிசைப் பட்டியலில் கே.எல்.ராகுல் 816 புள்ளிகளுடன் 3-வது இடத்திற்கு முன்னேறி உள்ளார். இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி 697 புள்ளிகளுடன் 8-வது இடத்தை பிடித்துள்ளார். இங்கிலாந்து அணி வீரர் டேவிட் மாலன் முதலிடத்திலும், பாகிஸ்தான் வீரர் பாபர் அஷாம் 2-வது இடத்திலும் உள்ளனர்.
ஐசிசி டி20 பந்துவீச்சாளர்கள் தரவரிசைப் பட்டியலில் டாப் 10-ல் இந்திய அணியின் பந்துவீச்சாளர்கள் யாரும் இடம்பெறவில்லை. வாஷிங்டன் சுந்தர் 11-வது இடத்திலும் பும்ரா 17-வது இடத்திலும் உள்ளனர். ஆப்கானிஸ்தான் அணியின் பந்துவீச்சாளர் ரஷித் கான் 736 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளார்.
ஆஸ்திரேலியா சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி ஒரு நாள் தொடரை 2-1 என்ற கணக்கில் இழந்தது. அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் 2-1 என்ற கணக்கில் டி20 தொடரை கைப்பற்றியது. இரு அணிகளுக்கும் இடையேயான 4 டெஸ்ட் போட்டிகள் தொடர் வரும் டிசம்பர் 17-ம் தேதி தொடங்க உள்ளது.
முதல் டெஸ்ட் போட்டி உடன் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி இந்திய திரும்ப உள்ளார். எஞ்சிய போட்டிகளில் ரோஹித் சர்மா கேப்டன் பொறுப்பை ஏற்பார் என பிசிசிஐ தெரிவித்திருந்தது. ரோஹித் சர்மா டெஸ்ட் தொடரில் இடம்பெறுவது இதுவரை உறுதிப்படுத்தவில்லை. டிசம்பர் 11-ம் தேதி பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் தனது உடல்தகுதியை நிருபித்த பின்னரே அவர் இந்திய அணியில் இடம்பெறுவது குறித்து அறிவிப்பு வெளியாகும்.