ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளுக்கான ஐசிசி தரவரிசை பட்டியலில் இந்திய அணியின் விராட் கோலி முன்னேற்றம் அடைந்துள்ளார். இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரில் சிறப்பான ஆட்டத்தை விராட் கோலி வெளிப்படுத்திய நிலையில், ஐசிசி அவருக்கு பேட்ஸ்மேன்கள் பட்டியலில் புதிய இடத்தை வழங்கியுள்ளது. உலக கோப்பை கிரிக்கெட் தொடர் இந்த ஆண்டு இறுதியில் நடைபெற உள்ள நிலையில், இந்திய அணியின் விராட் கோலி பழைய ஃபார்முக்கு திரும்பியுள்ளார். இதனால் இந்திய கிரிக்கெட் அணியின் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர். இலங்கை அணிக்கு எதிராக கடந்த ஞாயிறு அன்று திருவனந்தபுரத்தில் 3ஆவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி நடைபெற்றது.
இதில் விராட் கோலி 110 பந்துகளில் 166 ரன்களை எடுத்தார். முன்னதாக கவுகாத்தியில் நடந்த முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் விராட் கோலி 87 பந்துகளை சந்தித்து 113 ரன்கள் எடுத்தார். இதனடிப்படையில் ஒருநாள் போட்டிகளில் விராட் கோலி 46 சதங்களை அடித்து இருக்கிறார். இந்திய கிரிக்கெட் லெஜெண்ட் சச்சின் டெண்டுல்கர் ஒருநாள் போட்டிகளில் 51 சதங்கள் அடித்ததுதான் சாதனையாக இருந்து வருகிறது. இந்நிலையில் இந்த ஆண்டிலேயே சச்சினின் சாதனையை விராட் கோலி முறியடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையே ஐசிசி தரவரிசை பட்டியல், மாற்றங்களுடன் தற்போது வெளியிடப்பட்டு உள்ளது.
இதில் 6ஆவது இடத்தில் இருந்த விராட்கோலி 750 புள்ளிகளுடன் 4வது இடத்திற்கு முன்னேறியுள்ளார். முதலிடத்தில் பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் ஆசம் 887 புள்ளிகளுடன் இருக்கிறார். இரண்டாவது இடத்தில் தென்ஆப்பிரிக்க அணியின் வாண்டர் டஸன் 766 புள்ளிகளுடன் 2-வது இடத்திலும், அதே அணியைச் சேர்ந்த குவின்டன் டி காக் 759 புள்ளிகளுடன் 3வது இடத்திலும் உள்ளனர்.
விராட்கோலி தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினால் அவர் முதலிடத்திற்கு செல்வதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக கிரிக்கெட் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். இதற்கிடையே இன்று நடைபெற்று வரும் நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் விராட் கோலி 10 பந்துகளில் 8 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Cricket