Home /News /sports /

முதல் தோல்வியை பதிவு செய்த இந்தியா... 27 ஆண்டுகளுக்குப் பிறகு அந்த பெருமையை பெற்ற இங்கிலாந்து...!

முதல் தோல்வியை பதிவு செய்த இந்தியா... 27 ஆண்டுகளுக்குப் பிறகு அந்த பெருமையை பெற்ற இங்கிலாந்து...!

களத்தில் இந்திய வீரர்

களத்தில் இந்திய வீரர்

ஆட்டத்தில் தோல்வியுற்ற போதிலும், புள்ளிகள் பட்டியலில், இந்திய அணி, 11 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில் வலுவான நிலையில் உள்ளது

  • News18
  • Last Updated :
    உலகக் கோப்பை கிரிக்கெட்டில், இந்திய அணிக்கு எதிரான முக்கிய ஆட்டத்தில், 31 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது. 

    உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் 38-வது லீக் ஆட்டம், இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையே பர்மிங்ஹாமில் உள்ள எட்ஜ்பேஸ்டன் (Edgbaston) மைதானத்தில் நடைபெற்றது. இவ்விரு அணிகளும் நேருக்கு நேர் மோதும் 100-வது சர்வதேச ஒருநாள் போட்டி என்பதால், இப்போட்டிக்கு எதிர்பார்ப்பு அதிகரித்தது.

    டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. தொடக்க வீரர்களாக களமிறங்கிய ஜேசன் ராய் மற்றும் ஜானி பேர்ஸ்டோ, ஒவ்வொரு பந்தையும் நிதானமாகவும், அதிரடியாகவும் எதிர்கொண்டு, அணிக்கு சிறப்பான அடித்தளத்தை அமைத்துக் கொடுத்தனர். இவர்களின் சிறப்பான ஆட்டத்தால் இங்கிலாந்து அணியின் ஸ்கோர் மளமளவென உயர்ந்தது.



    ஜேசன் ராய் 66 ரன்களை குவித்தார். அவருடன் ஜோடி சேர்ந்து ஆடிய பேர்ஸ்டோ, சதமடித்த நிலையில், 111 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.

    அடுத்து வந்த கேப்டன் மோர்கன், ஒரு ரன்னில் அவுட்டானது இங்கிலாந்து ரசிகர்களுக்கு அதிர்ச்சியாக அமைந்தது. பின்னர் ஜோடி சேர்ந்த ஜோ ரூட் மற்றும் பென் ஸ்டோக்ஸ் ஆகியோர் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். குறிப்பாக 54 பந்துகளில் 79 ரன்கள் விளாசி பென் ஸ்டோக்ஸ் ஆட்டமிழந்தார்.



    முடிவில், 50 ஓவர்களில் ஏழு விக்கெட்டுகளை இழந்து இங்கிலாந்து அணி 337 ரன்கள் எடுத்தது. இந்திய அணியின் சார்பில் அதிகபட்சமாக முகமது ஷமி ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

    338 ரன்கள் என்ற பெரிய இலக்குடன் களமிறங்கிய இந்திய அணிக்கு தொடக்கமே அதிர்ச்சியாக அமைந்தது. தொடக்க வீரரான கே.எல்.ராகுல் ரன் எதுவும் அடிக்காமல் விக்கெட்டை பறிகொடுத்தார். இதனையடுத்து விராட் கோலி, ரோகித் சர்மா இணை, பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. விராட் கோலி 66 ரன்களில் ஆட்டமிழக்க, தொடர்ந்து ஆடிய ரோகித் சர்மா, சிறப்பாக விளையாடி 100 ரன்களை கடந்தார்.



    பின்னர் 102 ரன்களில் கேட்ச் கொடுத்து ரோகித் சர்மா பேவிலியன் திரும்பினார். அடுத்து களமிறங்கிய ரிஷப் பாண்ட் 32 ரன்கள் எடுத்து வெளியேறினார். பின்னர் ஹர்திக் பாண்டியாவுடன் தோனி இணைந்து நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.



    ஹர்திக்கின் வேகமான ஆட்டம், இந்திய ரசிகர்களை உற்சாகப்படுத்தியது. இதனையடுத்து 33 பந்துகளில் 45 ரன்கள் எடுத்திருந்தபோது, ஹர்திக் பாண்டியாவும் ஆட்டமிழந்தார்.

    பின்னர், இங்கிலாந்து வீரர்களின் பந்துவீச்சுக்கு, தோனி- கேதர் ஜாதவ் ஜோடியால் சொற்ப ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இறுதியில், தோனி 42 ரன்களுடனும், ஜாதவ் 12 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் 50 ஓவர்களை நிறைவு செய்தனர்.



    முடிவில், இந்திய அணி 5 விக்கெட்டுகளுக்கு 306 ரன்கள் எடுத்தது. 31 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி வெற்றிபெற்றது. இங்கிலாந்தின் பிளங்கெட் அதிகபட்சமாக 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 111 ரன்கள் விளாசிய இங்கிலாந்து அணியின் பேர்ஸ்டோ, ஆட்டநாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

    இந்த வெற்றியின் மூலம், 27 ஆண்டுகளுக்கு பிறகு, உலகக்கோப்பைத் தொடரில் இந்தியாவை வென்ற பெருமையை இங்கிலாந்து அணி பெற்றிருக்கிறது. அதேபோல 2019 உலகக்கோப்பையில் இந்திய அணியும் அதன் முதல் தோல்வியை பதிவு செய்துள்ளது.



    இந்தப் போட்டியில் வெற்றிபெற்றிருந்தால் இந்திய அணியின் அரையிறுதி கனவானது உறுதி செய்யப்பட்டிருக்கும். ஆட்டத்தில் தோல்வியுற்ற போதிலும், புள்ளிகள் பட்டியலில், இந்திய அணி, 11 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில் வலுவான நிலையில் உள்ளது. இங்கிலாந்து அணி 10 புள்ளிகள் பெற்று நான்காம் இடத்துக்கு முன்னேறியுள்ளது.




    உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர்பான செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  விளையாட்டு செய்திகள், சுவாரஸ்யமான வீடியோக்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.



    Published by:Sankar
    First published:

    Tags: ICC Cricket World Cup 2019

    அடுத்த செய்தி