இந்தியாவின் 2011 உலகக்கோப்பை வெற்றியை மீண்டும் அசைபோடுகிறார் யுவ்ராஜ் சிங். உலகக்கோப்பைக்கு முன்பிருந்தே சச்சினுக்காக, சச்சினுக்காக என்று கூறி வந்த ஒரே வீரர் யுவ்ராஜ் சிங் மட்டுமே.
இந்திய கிரிக்கெட் வரலாற்றுப் புத்தகத்தில் ஒரு பிரகாசமான அத்தியாயம்தான் 2011 உலகக்கோப்பை வெற்றி. அதுவும் 2007 உலகக்கோப்பையில் திராவிட் தலைமையில் இந்திய அணி படுதோல்வி அடைந்து முதல் சுற்றிலேயே வங்கதேசம் இலங்கை அணிகளிடம் தோல்வி தழுவி வெளியேறியது.
அதன் பிறகு இந்திய அணியை மூத்த வீரர்களான சச்சின் டெண்டுல்கர் உள்ளிட்டோர் மீட்டெடுத்தனர், சச்சின் டெண்டுல்கர் அப்போது முதல்
2011 உலகக்கோப்பையை வெல்வது என்ற திடகாத்திர தன்மையுடன் பேட்டிங்கில் வெளுத்து வாங்கினார். இடையே 2007 டி20 உலகக்கோப்பையை தோனி தலைமையில் இந்தியா வென்று புத்தெழுச்சி பெற்றது. அதிலும் குறிப்பாக யுவராஜ் சிங் ஒரே ஓவரில் ஸ்டூவர்ட் பிராடை 6 சிக்சர்களை விளாசி 12 பந்துகளில் அரைசதம் கண்டது இன்று வரை சர்வதேச டி20-யில் உலகச் சாதனை அரைசதமாக இருந்து வருகிறது.
பிறகு
2011 உலகக்கோப்பை தொடரில் 362 ரன்கள் 15 விக்கெட்டுகள் என்று யுவராஜ் தொடர் நாயகன் விருதைத் தட்டிச் சென்றார்.
இப்போது பழைய நினைவை அசைபோட்ட யுவராஜ் சிங், முன்னணி ஸ்போர்ட்ஸ் பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:
கபில்தேவுடன் நிறைய உரையாடினேன், கபில்தேவ் எங்கள் அனைவருக்கும் பெரிய உத்வேகமாகும். கடவுள் என் மீது அன்பாக இருக்கிறார், இருமுறை கனவை வாழ்ந்து விட்டேன், ஒன்று 2007 டி20 உலகக்கோப்பை வெற்றி, 2வது 2011 உலகக்கோப்பை வெற்றி, நிறைய கொண்டாடுவதற்கும் நிறைய பகிர்வதற்கும் உள்ளது. 2 உலகக்கோப்பை வெற்றியில் பங்கு பெற்றது பெரிய முன்னுரிமையாக கருதுகிறேன். 2 பெரிய அணிகளைக் கொண்டிருந்தோம்.
சச்சினுக்காகவே உலகக்கோப்பையை வெல்ல வேண்டும் என்பது திட்டம். ஆம் சச்சினுக்காகத்தான்!!
ஒரே ஓவரில் 6 சிக்சர்கள் மக்களிடையே வித்தியாசமான ஒரு சந்தோஷத்தை அளித்தது.
பேட்டிங்கில் பங்களிப்பு செய்ய முடியாத போது பவுலிங்கில் விக்கெட்டுகளைக் கைப்பற்றுவது மகிழ்ச்சியளிக்கிறது. நெருக்கடியில் ஆடுவது எனக்கு பிடிக்கும். வெற்றியை ஒரு சிக்சர் மூலம் பிரமாதமாக வெல்வது சிறப்பானது. எப்போதும் வின்னிங் ஷாட்டை நாங்கள் கொண்டாடுவோம். ஸ்டேண்டுக்கு பந்தை அனுப்பி இலக்கை எட்டியதை மறக்க முடியாது. அந்த ஷாட்டை தோனி ஆடும்போது நான் கிரீசில் எதிர்முனையில் இருந்ததை பெருமையாகக் கருதுகிறேன்.
இவ்வாறு கூறினார் யுவ்ராஜ் சிங்.
அந்த உலகக்கோப்பையில் அரையிறுதியில் பாகிஸ்தானுக்கு எதிராக ஆசாத் ஷபீக் என்ற அபாய வீரரையும் அடுத்த ஓவரில் யூனிஸ் கான் விக்கெட்டையும் கபளீகரம் செய்தார் யுவ்ராஜ் சிங்.
அதே போல் இறுதிப் போட்டியில் குமார் சங்கக்காரா மற்றும் திலன் சமரவீரா விக்கெட்டுகளை யுவ்ராஜ் வீழ்த்தியதால் இலங்கை அணி 300 ரன்கள் இலக்கை எட்ட முடியவில்லை.