நெருக்கடியான நேரத்தில் சிறப்பாக ஆடிய ரிஷப் பந்த்திற்கு இன்னொரு மகுடம்: சிறந்த வீரராக ஐசிசி தேர்வு

ஜாக் லீச்சை சிக்ஸ் விளாசிய ரிஷப் பந்த்.

உத்தரகண்டின் ஹரித்துவார் மாவட்டத்தின் ரூர்கீ என்ற இடத்தில் பிறந்தவர் ரிஷப் பந்த். ஞாயிறன்று இங்கு சமோலி என்ற இடத்தில் பனிப்பாறை உடைந்து விழுந்ததில் 22 பேர் பலியாகி 172 பேர் காணாமல் போயுள்ளனர். இதற்கு தன் சம்பளத்தை மீட்புப் பணி நிவாரணத்துக்காக தருவதாக ரிஷப் பந்த் தெரிவித்துள்ளார்.

 • Share this:
  சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் என்ற ஐசிசி சமீபமாக மாதத்தின் சிறந்த வீரர் என்பதை அறிமுகம் செய்தது, அதன் படி ஜனவரி மாத சிறந்த வீரராக அதிரடி மன்னன் ரிஷப் பந்த் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

  இலங்கையில் வெளுத்துக் கட்டிய ஜோ ரூட், அயர்லாந்தின் பால் ஸ்டர்லிங் ஆகியோர் டாப் 3 பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.

  ஆஸ்திரேலியா தொடரில் 36 ஆல் அவுட் அசிங்கத்துக்குப் பிறகு இந்திய அணி மீண்டெழ இளம் வீச்சாளர்களான சிராஜ், நடராஜன், வாஷிங்டன் சுந்தர், ஷர்துல் தாக்கூர் ஆகியோர் உதவ பேட்டிங்கில் சிட்னி டெஸ்ட் போட்டியில் 97 அதிரடி ரன்களுடன் ஆஸ்திரேலிய நிர்ணயித்த 406 ரன்கள் இலக்கை விரட்டி வெற்றி பெறுவோம் என்று அந்த அணியின் வயிற்றில் புளியைக் கரைத்தார், பிறகு அஸ்வின், ஹனுமா விஹாரி அந்தப் போட்டியை டிரா செய்தனர்.

  பிறகு பிரிஸ்பனில் முன்னணி வீரர்கள் அஸ்வின், பும்ரா இல்லாத நிலையில் இந்திய அணி வெற்றி பெற்றது. அதில் ரிஷப் பந்த் கடைசி நாளில் அதிரடி 89 ரன்களை எடுக்க இந்திய அணி 329 ரன்கள் இலக்கை எட்டி 32 ஆண்டுகளுக்குப் பிறகு ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பன் கோட்டையை தகர்த்தது. தொடரை தொடர்ச்சியாக 2வது முறையாக ஆஸி. மண்ணில் வென்றது.

  இதன் தொடர்ச்சியாக சென்னை டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸில் 91 ரன்களை அதிரடியாக விளாசி ஓரளவுக்கு இந்திய அணியை சரிவிலிருந்து மீட்டார்.

  இப்படியாக இன்றியமையாத ஒரு வீரராக ரிஷப் பந்த் இந்திய அணியில் திகழ்கிறார். மேலும் டெஸ்ட் கிரிக்கெட்டையே ஒரு காலத்தில் சேவாக், கில்கிறிஸ்ட், லாரா போன்றவர்கள் சுவாரசியமாக்கியதை தற்போது ரிஷப் பந்த் செய்து வருகிறார். இதனையடுத்து ஐசிசியின் ஜனவரி மாத சிறந்த வீரர் விருதைத் தட்டிச் சென்றார்.

  வீராங்கனைகளில் பாகிஸ்தானின் டயானா பெய்க, தென் ஆப்பிரிக்காவின் ஷப்னிம் இஸ்மாயில், மரிஜானே டாப் 3 இடங்களில் உள்ளனர்.

  பாகிஸ்தான் முன்னாள் வீரர் ரமீஸ் ராஜா, ரிஷப் பந்த் பற்றி கூறுகையில், ‘இரண்டு வித்தியாசமான சவால்களை திறம்பட சமாளித்தார், ஒரு போட்டியில் வெற்றியும் பெறச் செய்தார். நெருக்கடியான நேரத்தில் சிறப்பாகச் செயல்பட்டார்’ என்று பாராட்டினார்.

  உத்தரகண்டில் பிறந்தவர் ரிஷப் பந்த்:

  உத்தரகண்டின் ஹரித்துவார் மாவட்டத்தின் ரூர்கீ என்ற இடத்தில் பிறந்தவர் ரிஷப் பந்த். ஞாயிறன்று இங்கு சமோலி என்ற இடத்தில் பனிப்பாறை உடைந்து விழுந்ததில் 22 பேர் பலியாகி 172 பேர் காணாமல் போயுள்ளனர். இதற்கு தன் சம்பளத்தை மீட்புப் பணி நிவாரணத்துக்காக தருவதாக ரிஷப் பந்த் தெரிவித்துள்ளார்.
  Published by:Muthukumar
  First published: