Home /News /sports /

5,947 ரன்கள், 50.39 சராசரி, 30 வயது தாண்டியதால் வாய்ப்பில்லையாம்: ஷெல்டன் ஜாக்சன் காட்டம்

5,947 ரன்கள், 50.39 சராசரி, 30 வயது தாண்டியதால் வாய்ப்பில்லையாம்: ஷெல்டன் ஜாக்சன் காட்டம்

ஷெல்டன் ஜாக்சன்

ஷெல்டன் ஜாக்சன்

ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு ஆடிய விக்கெட் கீப்பர்-பேட்டர் ஷெல்டன் ஜாக்சன் முதல் தர கிரிக்கெட்டில் 79 போட்டிகளில் 5,947 ரன்களை 50.39 என்ற சராசரியில் எடுத்துள்ளார். ஆனால் தொடர்ந்து அவர் வயதை (35) காரணம் காட்டி அவரை ஓரங்கட்டி வருகிறது இந்திய அணித் தேர்வுக்குழு நிர்வாகம்.

ஒருமுறை ஹர்பஜன் சிங் ஷெல்டன் ஜாக்சன் தொடர்ந்து ஓரங்கட்டப்படுவது குறித்து தன் வருத்தத்தை தெரிவித்திருந்தார். ஒருபுறம் ஹனுமா விஹாரி, 30வயது கடந்த சூரியகுமார் யாதவ், மயங்க் அகர்வால், ஷ்ரேயஸ் அய்யர், தினேஷ் கார்த்திக் போன்றோருக்கு வாய்ப்பு கிட்டியுள்ள நிலையில் வயதைக் காரணம் காட்டி ஷெல்டன் ஜாக்சன் ஓரங்கட்டப்பட்டு வருகிறார்.
ஷெல்டன் ஜாக்சன் மட்டுமல்ல ஜலஜ் சக்சேனா, அக்‌ஷய் வகாரே போன்றோருக்கு இந்தியாவுக்கு ஆடும் கனவு இன்னும் நிறைவேறவில்லை. ஷெல்டன் ஜாக்சன் ஒரு திடமான விக்கெட் கீப்பர் பேட்டர்.

இது தொடர்பாக ஷெல்டன் ஜாக்சன் கூறும்போது, “நான் உள்ளபடியே கூறுகிறேன், இது ஏதோ இந்த ஆண்டு மட்டும் நடப்பதல்ல, ஆரம்பத்திலிருந்தே இப்படித்தான். நான் எடுத்த ரன்களின் அளவு மற்றும் அதை நான் எடுக்கும் வேகம் ஆகியவற்றை மற்ற வீரர்கள் செய்திருக்கிறார்கள் என்று நான் நினைக்கவில்லை. 75 போட்டிகளில் 6000 ரன்கள், இது என் கடின உழைப்பின் சாதனை.

என்னை ஏன் தேர்வு செய்யவில்லை என்பதற்கான காரணம் கூறப்படுவதில்லை, ஒருமுறை நானே கேட்டேன் , இந்திய அணியில் ஆட நான் என்ன செய்ய வேண்டும் என்று கேட்டேன், அப்போது எனக்கு வயதாகி விட்டது என்றனர். 30 வயது தாண்டிய யாரையும் அணியில் தேர்வு செய்வதில்லை என்றனர்.

ஆனால் என்னிடம் இதைக் கூறிவிட்டு 32-33 வயது வீரரைத் தேர்வு செய்தனர். நான் கேட்கிறேன் 30, 35, அல்லது 40 வயதானால் அணியில் தேர்வு செய்யப்படக் கூடாது என்று ஏதாவது சட்டம் உள்ளதா என்ன? அப்படி இருந்தால் சட்டமே போட்டு விட வேண்டியதுதானே?” என்றார் ஷெல்டன் ஜாக்சன்.

முதல் தரப் போட்டி மட்டுமல்ல குறைந்த ஓவர் லிஸ்ட் ஏ போட்டிகளில் ஜாக்சன் 67 ஆட்டங்களில் 2346 ரன்கள் எடுத்துள்ளார். 37.33 என்ற சராசரி வைத்துள்ளார். இதில் 8 சதங்கள் 23 அரைசதங்கள். டி20 கிரிக்கெட்டில் 1 சதம், 10 அரைசதங்கள் எடுத்துள்ளார். இப்படி இருந்தும் எந்த ஒரு வடிவத்திலும் இவருக்கு இடமில்லை என்றால் என்ன பொருள்?

“மிகவும் வேதனையாக இருக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் கடினமாக உழைப்பை செலுத்துகிறோம். சீராக ஆடுகிறோம், இந்திய உள்நாட்டு கிரிக்கெட்னா என்ன சும்மாவா, கடினமானது. ஏன் சீராக ஆடுகிறோம் இந்தியாவுக்கு ஆட வேண்டும் என்றுதானே.
என்னை அணியில் எடுக்காமல் விட விட நான் அதிகம் கடினமாக ஆடுகிறேன். என்னிடம் இன்னும் தீராத அவா இருக்கிறது. நான் இனி யாருக்கும் நிரூப்பிக்கத் தேவையில்லை ஏனெனில் நான் நீண்ட காலமாக இதை செய்து வருகிறேன். இன்னும் ஒராண்டு பார் என்று பயிற்சியாளர் என்னிடம் கூறி என்னை தேற்றுகின்றனர், எனவே இன்னும் ஓராண்டு பார்ப்போம்” என்றார் ஷெல்டன் ஜாக்சன் வேதனையுடன்.

இப்படித்தான் ராஜஸ்தானைச்  சேர்ந்த பங்கஜ் சிங் என்ற ஒரு நல்ல உயரம் நல்ல பிசிக் உள்ள ஒரு வேகப்பந்து வீச்சாளர் 2004 -21 வரை 3 வடிவங்களிலும் ஆடினர். 117 முதல் தர கிரிக்கெட்டில் 472 விக்கெட்டுக்ளை 23 என்ற பிரமாதமான சராசரியில் எடுத்தவர் 19வயதிலிருந்து 29 வயது வரை போராடினார் இந்திய அணியில் இடம்பெற, யாரும் இவரைக் கண்டு கொள்ளவில்லை கடைசியில் இங்கிலாந்துக்கு எதிராக 2014-ல் வாய்ப்பு கொடுத்தார்கள், அப்போது அலிஸ்டர் குக் விக்கெட்டை இவர் வீழ்த்தியிருந்தால் தன்னம்பிக்கையுடன் மேலும் விக்கெட்டுகளை எடுத்திருப்பார், ஆனால் நம் இந்திய அணியின் சிறந்த உலக பீல்டர் ரவீந்திர ஜடேஜா எளிதான கேட்சை விட்டார், பங்கஜ் சிங் கரியரே முடிந்து விட்டது. 


இவருக்கு குடும்ப பிசினஸ் உள்ளது, ஆனால் என்றாவது ஒருநாள் இந்தியாவுக்காக டெஸ்ட்டில் ஆடுவோம் என்று இவர் ‘காத்திருந்து காத்திருந்து காலங்கள் போனதடி’ என்று நொந்து நூலாகி விட்டார் பாவம்!!  அந்த வரிசையில் இப்போது ஷெல்டன் ஜாக்சன்.
Published by:Muthukumar
First published:

Tags: Cricket, KKR

அடுத்த செய்தி