12 வருடங்களுக்கு பிறகு ஒரு ஓவரில் ஆறு சிக்ஸ் அடித்ததற்கு யார் காரணம் என்ற ரகசியத்தை ஆல் ரவுண்டரும் சிக்ஸர் மன்னனுமான யுவராஜ் சிங் வெளிப்படுத்தியுள்ளார்.
ஒரு ஓவரில் ஆறு சிக்ஸ் அடிக்க முடியுமா? என்ற ஆச்சரியத்தை நிகழ்த்தி காட்டியவர்தான் அதிரடி மன்னன் யுவராஜ் சிங். ஆம் 2007-ம் ஆண்டு டி 20 உலகக் கோப்பை போட்டியில் இங்கிலாந்து அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் வேகப்பந்து வீச்சாளர் ஸ்டூவர் பிராட் பந்துவீச்சில் ஒரு ஓவரின் ஆறு பந்துகளையும் சிக்ஸருக்கு பறக்க விட்டு ஒட்டு மொத்த ரசிகர்களையும் ஆச்சரியத்தில் உறையவைத்தார். இந்த நிகழ்வை தனது சமூக வலைதள பக்கங்களில் யுவராஜ் நினைவு கூர்ந்துள்ளார்.
அந்த போட்டியில் நான் களத்தில் விளையாடிக் கொண்டிருக்கும் போது பிளிண்டாஃப் என்னை சீண்டினார். இதனால் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. அந்த சமயத்தில் ஸ்டூவர்ட் பிராட் பந்துவீச வந்தார். ஏற்கனவே உத்வேகத்தில் இருந்த என்னை பிளிண்டாஃப் சீண்டல் மேலும் அதிகப்படுத்தியது. அதே உத்வேகத்துடன் ஆறு பந்துகளையும் சிக்ஸர்களாக விளாசினேன். அடித்து முடித்ததும் பிளிண்டாஃபை பார்த்து எனது ஆதங்கத்தை தீர்த்துக் கொண்டேன்.
இந்த சாதனைக்கு பிளிண்டாப் மட்டும் காரணமில்லை மற்றொரு நபரும் இருக்கிறார். அவர் தான் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் எனது பந்துவீச்சில் ஐந்து சிக்ஸர் அடித்த இங்கிலாந்து வீரர் Dimitri Mascarenhas. இதையும் மனதில் வைத்துக்கொண்டு தான் ஆறாவது சிக்ஸரை பறக்கவிட்டேன் என 12 வருட ரகசியத்தை யுவராஜ் சிங் வெளிப்படுத்தியுள்ளார்.
போட்டி முடிந்த அடுத்த நாள் ஸ்டூவர் பிராட் தந்தை கிறிஸ் பிராட் என்னிடம் வந்து தன்னுடைய மகனின் கிரிக்கெட் வாழ்க்கையை முடித்துவிட்டாய் என கூறினார். மேலும் எனது மகனுக்காக உன்னுடைய ஜெர்ஸியில் கையெழுத்திட்டு தருவாயா என கேட்டார்.
உடனே எனது இந்திய அணியின் ஜெர்ஸியில் கையெழுத்திட்டு வழங்கினேன். அதில் "உங்களுடைய வலியை நான் அறிவேன், ஏனென்றால் என்னுடைய பந்துவீச்சிலும் ஐந்து சிக்ஸ் அடிக்கப்பட்டுள்ளது. உங்களுடைய எதிர்கால கிரிக்கெட் வாழ்க்கை சிறப்பானதாக அமைய வாழ்த்துகள்" என நம்பிக்கை அளிக்கும் வார்த்தைகளை எழுதி பரிசளித்தார்.
சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.