IND vs ENG | நடுவர்கள் ஏன் தங்களுக்குத் தெரியாது என்று கூறுவதில்லை? - நடுவரைக் குறைகூறும் முன் சுயபரிசோதனை செய்து கொள்வாரா கோலி?

IND vs ENG | நடுவர்கள் ஏன் தங்களுக்குத் தெரியாது என்று கூறுவதில்லை? - நடுவரைக் குறைகூறும் முன் சுயபரிசோதனை செய்து கொள்வாரா கோலி?

கோலி

ஷர்துல் ஆட்டத்தை நம் பக்கம் திருப்பினார், ஆனால் பவர் ப்ளேயில் இங்கிலாந்துக்கு செக் வைத்தோம்.

  • Share this:
அகமதாபாத் 4-வது டி20 போட்டியில் நேற்று இந்திய அணி வெற்றி பெற்றாலும் கேப்டன், முன்னாள், இந்நாள் வீரர்களுக்கு நடுவரைக் குறைகூறும் பழக்கம் மட்டும் விட்டுப்போவதில்லை.

அதற்கு உதாரணம்தான் நேற்று சூரிய குமார் யாதவுக்கு மலான் தரையில் பட்டுத்தான் கேட்ச் எடுத்தார், முதலில் கேட்ச் எடுத்த வீரருக்கு தான் ஒழுங்காக பிடித்தோமா இல்லையா என்று தெரியாது என்று கூறுவதை ஒரு போதும் ஏற்க முடியாது. அதே வேளையில் நடுவர் ஏன் சாஃப்ட் சிக்னல் அவுட் என்று தெரிவிக்க வேண்டும் என்பதுதான் இப்போது சர்ச்சையாகியுள்ளது. சாஃப்ட் சிக்னல் முறையை அகற்ற வேண்டும் என்று ஐசிசியிடம் கோரிக்கை வைக்கின்றனர்.நேற்று வென்ற பிறகு கோலி கூறியதாவது:

டாப் அணிக்கு எதிராக கடினமான போட்டி, பனிப்பொழிவு பெரிய விஷயமாக இருக்கிறது. நடுவில் சில தருணங்கள் விசித்திரமாக இருந்தது. ஆனால் 180 ரன்கள் இலக்கு வேண்டும் என்று நினைத்தோம். சூரிய குமார் யாதவ் குறித்து சிறப்பாக குறிப்பிட்டாக வேண்டும். ஐபிஎல் வரவிருக்கும் நிலையில் வீரர்கள் நம்பிக்கையுடன் ஆடுகின்றனர்.

ஷர்துல் ஆட்டத்தை நம் பக்கம் திருப்பினார், ஆனால் பவர் ப்ளேயில் இங்கிலாந்துக்கு செக் வைத்தோம்.

டெஸ்ட் தொடரிலும் கேட்ச் சர்ச்சை ஏற்பட்டது, ரகானே கேட்ச் பிடித்தார், ஆனால் சந்தேகம் எழுந்தது. கேட்சை பிடித்தார் அவர் ஆனால் தரையில் பட்டதா என்பது குறித்து அவருக்கு உறுதியாகத் தெரியவில்லை (!). ஒரு அரைகுறை கேட்சில் களநடுவரின் சாஃப்ட் சிக்னல்தான் தீர்ப்பை தீர்மானிக்கிறது.

ஏன் நடுவர் ‘எனக்குத் தெரியவில்லை’ என்று கூறக்கூடாது. அதனால்தானே மேல் முறையீடு, டிவி அம்பயரிடம் செல்கிறோம். ஆட்டத்தை நேர்மறையாக நடத்த இந்த சுருக்கங்களை அயர்ன் செய்து சரி செய்ய வேண்டும். களத்தில் தெளிவு தேவை எங்களுக்கு.

சூர்யகுமார் யாதவ்வின் தொடக்கத்தை கண்டு அதிர்ந்தோம். இறங்கியவுடனேயே தன் அதாரிட்டியைக் காட்டினார். இந்த இளைஞர்களை பாராட்டியே ஆகவேண்டும், வருகிறார்கள் வாய்ப்பை இறுகப் பற்றிக் கொள்கிறார்கள். ஹர்திக்கின் 4 ஓவர்களும் மிகப்பெரிய பங்களிப்புதான்.

இவ்வாறு கூறினார் கோலி.

இன்று சூரியகுமார் யாதவுக்கு நாட் அவுட்டை அவுட் கொடுத்ததற்கு நடுவரைச் சாடும் விராட் கோலி, முன்னாள் வீரர்கள் ஆகியோர் இதே தொடரில் இதே டி20-தொடரில் விராட் கோலிக்கு ஸ்டம்ப்டு அவுட் கொடுக்காத போது, ஏன் வாயைத்திறக்கவில்லை?  அது கிளீன் அவுட், லைனில் கால் இருந்தால் அவுட், காலின் எந்த ஒரு பகுதியும் கிரீசுக்குள் இருந்ததற்கான அறிகுறியே இல்லை என்று ஈஎஸ்பிஎன் கிரிக் இன்போ வர்ணனையும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் வர்ணனையும் தெரிவித்தன. இதே சேவாக் ஆகட்டும், லஷமண் ஆகட்டும், யார் வேண்டுமானாலும் ஆகட்டும் ஏன் அப்போது மட்டும் ‘நடுவர் தீர்ப்பு’ ஏற்றுக் கொள்ள பட வேண்டியது என்ற கருத்தில் அமைதி காக்கின்றனர்? இப்போது சூரியகுமார் தீர்ப்புக்கு எகிறுகின்றனர்?

விராட் கோலிக்கு களநடுவர்கள் ஏன் அவுட் கொடுப்பதில்லை என்ற கேள்வி அவர் கேப்டன் ஆனது முதல் உள்நாட்டுத் தொடர்களில் இருந்து வருகிறது. இது ஒருபுறமிருக்க, இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ரோகித் சர்மா இருமுறை கிளீன் ஸ்டம்ப்டு அவுட் கொடுக்கவில்லை, ஷுப்மன் கில்லுக்கு அவுட் கொடுக்கப்படாதது, கோலிக்கு பிளம்ப் எல்.பி. கொடுக்காதது,  இன்னும் சில கடுமையான நடுவர் பட்சபாத தீர்ப்புகளைச் சுட்டிக்காட்டி ஜாக் கிராலி விமர்சித்ததையும் நாம் பார்த்தோம்.

அதாவது சிலபல நடுவர் தீர்ப்பு இருதரப்பினரையும் பாதிக்கிறது  என்ற உண்மையை பேச ஏன் மறுக்கின்றனர்? இந்திய அணி பாதிக்கப்பட்டால் காச் முச் என்று சப்தம் போடுவது, அதே எதிரணிக்கு மோசமான தீர்ப்பு பாதித்தால், சுனில் கவாஸ்கர் உட்பட அனைவரும் ‘இங்கிலாந்து ஏன் அழ வேண்டும்?’ இங்கிலாந்து ஏன் புலம்ப வேண்டும்? என்று கேட்கின்றனர்.

இப்போது இந்திய அணிக்கு எதிராக சூரியகுமார் யாதவுக்குத் தவறாக அவுட் கொடுக்கும்போது இவர்கள் கூறுவதெல்லாம் புலம்பல் இல்லையா?  வெற்றி பெற்று  புலம்பினால் அது புலம்பல் இல்லை. ஆனால் தோல்வி அடைந்த அணி விமர்சனம் செய்தால் அது புலம்பல், எப்படி? எனவே நடுவர் தீர்ப்பை விமர்சிக்கும் முன் கோலி, முன்னாள், இந்நாள் இந்திய வீரர்கள் சுயபரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என்பதே நம் கோரிக்கை.
Published by:Muthukumar
First published: