தந்தையின் மறைவின்போது ஆஸ்திரேலிய சுற்றுப் பயணத்தில் இருந்த நான் அறையில் கதறி அழுததாக இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகம்மது சிராஜ் உருக்கமாக கூறியுள்ளார். இந்திய கிரிக்கெட் அணியின் வலது கை வேகப்பந்து வீச்சாளராக இருப்பவர் முகம்மது சிராஜ். இவர் தனது தொடர்ச்சியான சிறப்பான ஆட்டத்தால் சர்வதேச ஒருநாள் போட்டிகளுக்கான பவுலர்களில் முதலிடத்தை பிடித்துள்ளார். ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் பெங்களூரு அணிக்காக சிராஜ் விளையாடி வருகிறார்.
இந்நிலையில் பெங்களூரு அணி தரப்பில் நடத்தப்பட்ட நேர்காணலில் பங்கேற்று சிராஜ் கூறியதாவது- 2020 – 21 ஆம் ஆண்டில் டிசம்பர் மாதம் எனது தந்தை மறைந்தார். அப்போது நான் ஆஸ்திரேலிய சுற்றுப் பயணத்தில் இருந்தேன். கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக நான் இந்தியாவுக்கு உடனடியாக திரும்ப முடியாத சூழல் ஏற்பட்டது. தந்தையின் மறைவை நினைத்து எனது அறையில் கதறி அழுதேன். கொரோனா பிரச்னையால் யாரும் மற்றவர் அறைக்கு செல்ல முடியாத சூழல் இருந்தது. அப்போது அணியின் ஃபீல்டிங் பயிற்சியாளராக இருந்த ஸ்ரீதர் என்னை வீடியோ காலில் தொடர்பு கொண்டு அடிக்கடி நலம் விசாரிப்பார்.
எனக்கு நிச்சயம் செய்யப்பட்டவர் எனக்கு போன் செய்தார். நான் ஒருபோதும் போனில் அழுதது கிடையாது. துக்கம் அதிகம் இருந்ததால் எனது அறையில் கதறி அழுத பின்னர் அவரை அழைத்தேன். தந்தை இறந்த மறுநாளே நான் பயிற்சிக்கு சென்றேன். அங்கு பயிற்சியாளர் ரவி சாஸ்திரி எனக்கு தந்தையின் ஆசிர்வாதங்கள் இருப்பதாக கூறி ஆறுதல் படுத்தினார். பிரிஸ்பேனில் நான் 5 விக்கெட்டை கைப்பற்றியபோது, என்னைப் பார்த்து ரவி சாஸ்திரி, நான் சொன்னேன் அல்லவா, நீ நிச்சயம் 5 விக்கெட்டை எடுப்பாய் என்று கூறினார். இவையெல்லாம் மறக்க முடியாது. அப்பா இருக்கும் போது அவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கும். மகன் வெற்றி பெறுவதை அவர் பார்க்க விரும்பினார். இதற்காக அவர் செய்த தியாகங்கள் அதிகம். அவர் நினைத்ததைப் போன்று நான் நல்ல நிலைமைக்கு வந்துள்ளேன். இவ்வாறு அவர் கூறினார். சிராஜ் இடம்பெற்ற ஆஸ்திரேலிய சுற்றுப் பயணத்தில் இந்திய அணி தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. அவர் அறிமுகமான 2 ஆவது டெஸ்டின் 2 ஆவது இன்னிங்ஸில் 5 விக்கெட்டை கைப்பற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Cricket