41 வயதான கிரிக்கெட் வீரர் விரேந்திர நாய்க், உள்ளூர் போட்டி ஒன்றில் விளையாடி விட்டு அவுட் ஆகி பெவிலியன் திரும்பிய நிலையில், மாரடைப்பால் நிலைகுலைந்து கீழே விழுந்து மரணமடைந்துள்ளார்.
ஹைதராபாத்தில் நடந்த டிவிசன் கிரிக்கெட் போட்டியில் நேற்று மர்ரெட்பள்ளி ஸ்போர்ட்டிங் கிளப் - மர்ரெட்பள்ளி புளூஸ் அணிகள் மோதின. ஸ்போர்ட்டிங் கிளப் சார்பில் 41 வயதான விரேந்திர நாய்க், அரைச்சதம் கடந்து 66 ரன்களில் அவுட் ஆகி பெவிலியன் திரும்பினார்.
இதனை அடுத்து, பெவிலியனில் இருக்கும் போது திடீரென நிலைகுலைந்து விரேந்தர் கீழே விழுந்துள்ளார். அப்போது, அவரின் தலை சுவற்றில் வேகமாக மோதியதாக உடன் இருந்த வீரர்கள் தெரிவிக்கின்றனர். இதனை அடுத்து, வாகனம் மூலம் அவர் அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

விரேந்தர் நாய்க்
ஆனால், அவர் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். மாரடைப்பு காரணமாக அவர் உயிரிழந்திருக்கலாம் என்றும் மருத்துவர்கள் குறிப்பிட்டுள்ளனர். நெஞ்சு வலியால் ஏற்கனவே விரேந்தர் பாதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்ததாக அவரின் சகோதரர் கூறியுள்ளார்.
உயிரிழந்த விரேந்தருக்கு மனைவி, 8 மற்றும் 5 வயதில் இரு குழந்தைகள் உள்ளனர். அவரின் சொந்த ஊரான மஹாராஷ்டிராவில் உள்ள சிந்துதர்க்கில் இறுதிச்சடங்குகள் நடக்க உள்ளதாக குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம், அம்மாநில கிரிக்கெட் வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.