2011 WC | மறக்க முடியுமா ஏப்ரல் 2, 2011-ஐ? - 28 ஆண்டுகளுக்குப் பிறகு கோடிக்கணக்கான ரசிக இதயங்களின் கனவு நினைவான நாள்: தோனி தலைமையில் 2ம் முறை உலக சாம்பியன்

2011 உலக சாம்பியன் இந்திய அணி.

இதே ஏப்ரல் 2ம் தேதியான இன்று, 2011ம் ஆண்டு ஐசிசி உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் மும்பையில் தோனி இலங்கை பவுலர் நுவான் குலசேகராவை லாங் ஆன் மேல் அடித்த சிக்ஸ் இந்திய அணிக்கு 28 ஆண்டுகளுக்குப் பிறகு உலகக்கோப்பையை மீண்டும் பெற்றுத் தந்தது. தோனி அடித்த அந்த சிக்ஸ் இன்று ஒரு பெரிய ஐகானாக மாறியுள்ளது.

  • Share this:
இதே ஏப்ரல் 2ம் தேதியான இன்று, 2011ம் ஆண்டு ஐசிசி உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் மும்பையில் தோனி இலங்கை பவுலர் நுவான் குலசேகராவை லாங் ஆன் மேல் அடித்த சிக்ஸ் இந்திய அணிக்கு 28 ஆண்டுகளுக்குப் பிறகு உலகக்கோப்பையை மீண்டும் பெற்றுத் தந்தது. தோனி அடித்த அந்த சிக்ஸ் இன்று ஒரு பெரிய ஐகானாக மாறியுள்ளது.



மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் டாஸ் வென்ற குமார் சங்கக்காரா முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்ய மகேலா ஜெயவர்தனேயின் அபார சதம் (103 நாட் அவுட்) மூலம் இலங்கை அணி 274/6 என்ற இலக்கை நிர்ணயித்தது. ஜாகீர் கான் 2 விக்கெட், யுவராஜ் சிங் இரண்டு விக்கெட்.



தொடர்ந்து ஆடிய இந்திய அணியில் சேவாக் மலிங்கா பந்தில் எல்.பி.ஆக கோடிக்கணக்கான இந்தியர்களின் இருதயம் ஒருநிமிடம் துடிப்பை நிறுத்தியது. சச்சின் டெண்டுல்கர் ஒருமுனையில் இருந்தார். ஆனால் அவரும் 18 ரன்களில் மலிங்கா பந்தில் சங்கக்காராவிடம் கேட்ச் ஆக இந்தியா 31/2 என்று தடுமாறியது, மும்பை ரசிகர்கள் அமைதியாகினர். விராட் கோலி (35) கவுதம் கம்பீர் (97) இணைந்து ஸ்கோரை 114 ரன்களுக்குக் கொண்டு சென்றனர். கோலி அப்போது 35 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். தில்ஷான் பந்தில் அவர் காலியானார்.

மறக்க முடியாத அந்த வின்னிங் சிக்ஸ்.


அப்போதெல்லாம் சச்சின் டெண்டுல்கர் ஆட்டமிழந்து சென்ற பிறகு இன்னொரு வீரர் இறங்கி ஆடுவது அவ்வளவு சுலபமல்ல, கடும் அழுத்தம் இருக்கும். ஆனாலும் கோலி அதனை திறம்பட வெற்றி கொண்டு ஸ்கோரை கம்பீருடன் உயர்த்தி நிலைப்படுத்தினார்.



அதுவரை அந்த உலகக்கோப்பையில் யுவராஜ் சிங் தான் வந்து கொண்டிருந்தார், அதே டவுன் ஆர்டரில் இந்த முறை தீர்மானமாக தோனி இறங்கினார். தோனியும் கவுதம் கம்பீரும் கடினமான ஒரு சூழ்நிலையில் 109 ரன்களை 20 ஓவர்களில் சேர்த்தனர். கவுதம் கம்பீர் மிகப்பிரமாதமான இன்னிங்ஸில் 9 பவுண்டரிகள் உடன் 122 பந்துகளில் 97 ரன்கள் எடுத்து சதம் எடுப்பதற்கு முன்பாக மேலேறி வந்து ஒரு சிக்சர் மூலம் சதம் அடிக்கலாம் என்று ஆடினார் கம்பீர், பந்தை விட்டார் பவுல்டு ஆனது.

223/4-லிருந்து எம்.எஸ்.தோனி, யுவராஜ் சிங் ஸ்கோரை வெற்றிக்கு இட்டுச் சென்றனர் யுவராஜ் சிங் 21 நாட் அவுட். தோனி நுவான் குலசேகரா பந்தை லாங் ஆன் மேல் தூக்கி அடிக்க அந்த ஐகான் ஷாட் வின்னிங் ஷாட் ஆனது, இந்தியா 277/4 என்று அபார வெற்றி பெற்றது.



தோனியின் இந்த இன்னிங்ஸ் மிகப்பிரபலமானது. 28 ஆண்டுகளுக்குப் பிறகு, கபில்தேவ் தலைமை இந்திய அணி 1983-ல் வென்றதற்கு அடுத்தபடியாக 2011-ல் தோனி தலைமையில் இந்தியா உலகக்கோப்பையை வென்றது. சச்சின் டெண்டுல்கருக்காக உலகக்கோப்பையை வென்று கொடுத்தது இந்திய அணி. சச்சின் டெண்டுல்கரின் கடைசி உலகக்கோப்பை ஆனது அது. அனைவரும் சச்சினை தோளில் தூக்கி மைதானத்தில் வளைய வந்தனர்.

அதுவரை உலகக்கோப்பையை நடத்தும் நாடு வென்றதில்லை, 1996-ல் இலங்கை இணை நடத்துநர் என்ற அளவில் உலகக்கோப்பையை வென்றது. மற்றபடி நடத்தும் நாடு சொந்த மண்ணில் உலகக்கோப்பையை வென்றது, அதுவும் தோனி தலைமையில் இரண்டு ஐசிசி கோப்பைகளை இந்திய வென்றது. ஆட்ட நாயகன் தோனி, தொடர் நாயகன் யுவ்ராஜ் சிங்.
Published by:Muthukumar
First published: