என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா..! - புழுதி பறக்கும் பிட்சுக்கு முட்டுக்கொடுக்கும் கவாஸ்கர்..

என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா..! - புழுதி பறக்கும் பிட்சுக்கு முட்டுக்கொடுக்கும் கவாஸ்கர்..

சுனில் கவாஸ்கர்

ஸ்டார் ஸ்போர்ட்ஸில் பேசியுள்ள சுனில் கவாஸ்கரோ ஒரு படி மேலே சென்று, “கிரிக்கெட் குறித்த விவாதம் என்றால் அது பேட்ஸ்மேன் மற்றும் பந்துவீச்சாளர் குறித்து இருக்க வேண்டும். அதை விடுத்து பிட்ச் பற்றி ஏன் பேசுகிறார்கள்” என்று கூறியுள்ளார்

 • Share this:
  புழுதி பறக்கும் பாரு.... புழுதி பறக்கும் பாரு.... ஜிகிர்தண்டா படத்துல பாபி சிம்ஹா ஒரு பாழடைந்த கிணத்துல தன் பரிவாரங்களோடு சேர்ந்து இந்த பாட்டுக்கு ஃபர்பாமன்ஸ் பண்ணிட்டு இருப்பார். என்னடா இப்படி வந்து சிக்கிடோமேன்னு சித்தார்த் பாவமா மூச்சிய வைச்சுக்கிட்டு உட்கார்ந்திருப்பார். புழுதி பறக்கும் அகமதாபாத் பிட்சுக்கு பாபி சிம்ஹா ஸ்டைலில் முட்டுக்கொடுத்து பாடிக்கிட்டு இருக்கார் நம்ம ஊரு சுனில் கவாஸ்கர். இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட்டோ பிட்ச் குறித்து சொல்லவும் முடியாம மெல்லவும் முடியாம உட்கார்ந்திருக்கார். பொதுவாக இந்திய ஆடுகளங்கள் ஸ்பின்னுக்கு உகந்த மாதிரிதான் தயார் செய்யப்படும். இங்கு ஸிப்பனர்களின் ஆதிக்கம் அதிகம் இருக்கும். இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான இந்த டெஸ்ட் தொடரில் ஆடுகளங்கள் படுமோசம் என்ற விமர்சனங்களே பரவலாக முன்வைக்கப்படுகிறது.

  India vs England


  விராட்கோலி இல்லாத நிலையில் ரஹானே தலைமையில் ஆஸ்திரேயாவில் இந்திய அணி பெற்ற வெற்றியை இந்திய ரசிகர்கள் கொண்டாடி தீர்த்தனர். இங்கிலாந்து தொடரும் அதேபோல் விறுவிறுப்பு நிறைந்ததாக இருக்கும் என நினைத்த கிரிக்கெட் ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியுள்ளது. அகமதாபாத் போட்டியை பார்த்தவர்கள் சென்னை சேப்பாக்கம் மைதானமே பரவாயில்லை என்ற மனநிலைக்கு வந்துவிட்டனர்.டெஸ்ட் மேட்ச லைவா வீட்டுல உட்கார்ந்து பார்க்கும் போது பிட்ச் நோக்கி கேமராமேன் ஸூம் பண்ணும்போது டிவி ஸ்கீரின்லயே புழுதி பறக்குது. இதனைப்பார்த்த இங்கிலாந்து முன்னாள் வீரர்கள் வரிந்து கட்டிக்கொண்டு வந்துவிட்டார்கள்.

  மூன்றாவது டெஸ்ட் போட்டி குறித்து கருத்து தெரிவித்த இங்கிலாந்து முன்னாள் வீரர் மைக்கேல் வாகன், ‘இந்தியா தன் இஷ்டத்துக்கு செயல்படுகிறது. அவர்களுக்கு ஏற்றவாறு பிட்சை தயார் செய்கிறது. பிசிசிஐ-யை கேள்வி கேட்காமல் ஐசிசி மவுனம் காக்கிறது. இது டெஸ்ட் கிரிக்கெட்டின் தரத்தை பாதிக்கிறது. 5 நாள்கள் நடைபெற வேண்டிய டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இரண்டு நாள்களில் முடிந்தால் டெஸ்ட் போட்டிகளில் முதலீடு செய்ய தொலைக்காட்சி நிறுவனங்கள் முன்வர மாட்டார்கள். இந்த டெஸ்டில் இந்தியா திறமையை வெளிப்படுத்தியது மறுப்பதற்கில்லை. ஆனால் இங்கிலாந்து வீரர்கள் ஒன்றும் திறமையற்றவர்கள் இல்லை” என கடுமையாக சாடியிருந்தார். இதற்கு ஐசிசியின் ரியாக்‌ஷனோ ‘இஸ் இட்’ என்கிற ரீதியில்தான் இருந்தது.

  விராட் கோலி


  3-வது டெஸ்ட் குறித்து பேசியிருந்த இந்திய கேப்டன் கோலியோ 'சுழற்பந்துக்கு உகந்த ஆடுகளத்தை விமர்சிக்கும் போது மட்டும் சத்தம் அதிகமாக வருகிறது. நியூசிலாந்தில் 3 நாள்களில் ஆட்டம் முடிந்தால் இந்திய அணியை குறை சொல்கிறீர்கள். இந்தியாவில் இரண்டு நாள்களில் ஆட்டம் முடிந்தால் பிட்ச்தான் காரணமா?. இங்கு ஆடுவதற்கு பேட்ஸ்மேன்களுக்கு போதுமான திறன் இல்லை’ என அதிரடியாக கருத்து தெரிவித்தார்.

  விராட் கோலி பேசுவது சரியில்லை. பிட்சில் உள்ள தவறுகள் குறித்து பராமரிப்பாளர்கள்தான் கண்டறிய வேண்டும் என இங்கிலாந்து முன்னாள் வீரர்கள் கருத்து தெரிவித்துள்ளார். அகமதாபாத் பிட்ச் பராமரிப்பாளர்களிடம் கேட்டால் பகவான் (பிசிசிஐ) போட சொன்னார்.. போட்டேன் என்கிற ரீதியில்தான் பதிலை எதிர்ப்பார்க்க முடியும்.

   

  சுனில் கவாஸ்கர்


  ஸ்டார் ஸ்போர்ட்ஸில் பேசியுள்ள சுனில் கவாஸ்கரோ ஒரு படி மேலே சென்று, “கிரிக்கெட் குறித்த விவாதம் என்றால் அது பேட்ஸ்மேன் மற்றும் பந்துவீச்சாளர் குறித்து இருக்க வேண்டும். அதை விடுத்து பிட்ச் பற்றி ஏன் பேசுகிறார்கள். வெளிநாட்டு வீரர்களுக்கு ஏன் நாம் இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறோம். அவர்கள் சொல்வதை ஏன் நாம் விவாதிக்க வேண்டும். இந்தியா 36 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அப்போது கபில்தேவ், சச்சின் டெண்டுல்கர், சேவாக், கங்குலி ஆகியோரின் கருத்துக்கு அந்நாட்டு பத்திரிகைகள் அல்லது தொலைக்காட்சிகள் முக்கியத்துவம் கொடுத்ததா என்றால் இல்லவே இல்லை. பிறகு ஏன் நாம் அவர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.

  நாம் அவர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்காதபோது அவர்கள் பாடம் கற்றுக்கொள்வார்கள். தங்களுக்கு முக்கியத்துவம், விளம்பரம் கிடைக்கும் என்பதை அவர்கள் நன்கு உணர்ந்து வைத்திருக்கிறார்கள். அதனால் அவர்கள் அதை தொடர்ந்து செய்வார்கள். இங்கிலாந்து அணி புகார் கொடுக்கவில்லை. ஜோ ரூட் புகார் அளிக்கவில்லை” எனத் தெரிவித்துள்ளார். பிட்சில் உள்ள தவறுகளை சுட்டிக்காட்டாமல் இந்திய முன்னாள் வீரர்கள் தொடர்ந்து பிசிசிஐ ஆதரவு மனநிலையில் பேசுவதுதான் வேதனையளிக்கிறது.
  Published by:Ramprasath H
  First published: