2007- டி20 உலகக்கோப்பை இறுதிப் போட்டியின் நாயகனாக திகழ்ந்த கிரிக்கெட் வீரர் ஜோகிந்தர் சர்மா அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் பிசிசிஐ, அரியானா கிரிக்கெட் சங்கம், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கு நன்றி தெரிவித்து கடிதம் அனுப்பியுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது- இன்று நான் மிகுந்த பணிவன்புடனும், நன்றியுடனும் எனது ஓய்வை அறிவிக்கிறேன். சர்வதேச, உள்ளூர் என அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் நான் ஓய்வு பெறுகிறேன். 2002 முதல் 2017 வரையிலான எனது கிரிக்கெட் பயணம் எனது வாழ்வில் மறக்க முடியாத தருணமாகும்.
எனக்கு கிரிக்கெட் விளையாட வாய்ப்பை அளித்த இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம், அரியானா கிரிக்கெட் சங்கம், சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் அரியானா அரசுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். எனது சக அணி வீரர்கள், பயிற்சியாளர்கள், அணி உதவியாளர்கள் இவர்கள் இல்லாமல் எனது பயணம் சாத்தியமில்லை. இவர்கள் அனைவருக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். அனைத்து ஃபார்மேட் போட்டிகளிலும் விளையாடியது எனக்கு பெருமையும், கவுரவத்திற்கும் உரிய விஷயம். சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் நான் பின்னடைவை சந்தித்தபோது எனக்கு ஆதரவாக பலர் இருந்தனர். அவர்கள் என்றும் என் நினைவில் இருப்பார்கள். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
2007 ஆம் ஆண்டு டி20 உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் இந்திய அணி பாகிஸ்தானை எதிர்கொண்டது. கடைசி ஓவரில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற 13 ரன்கள் தேவை என்ற நிலையில், இந்த ஓவரை வீசிய ஜோகிந்தர் சர்மா முதல் 2 பந்துகளில் 7 ரன்களை கொடுத்தார். அடுத்த பந்தில் பாகிஸ்தான் அணியின் மிஸ்பா உல் ஹக்கை ஆட்டமிழக்க செய்ததால், இந்திய அணி வெற்றி பெற்று உலகக்கோப்பையை கைப்பற்றியது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Cricket