இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் ராகுல் திராவிட் இந்திய அணி "முக்கியமான நேரங்களில் ஸ்மார்ட் கிரிக்கெட்டை" விளையாடவில்லை என்று ஒப்புக்கொண்டார், ஆனால் கே.எல்.ராகுல் கேப்டன்சியின் ஆரம்ப கட்டத்தில் இருக்கிறார், வரும் நாட்களில் அவர் ஒரு நல்ல தலைவராக வருவார் என்று ராகுல் திராவிட் ஆதரவு தெரிவித்துள்ளார்.
செஞ்சூரியனில் நடந்த முதல் டெஸ்டில் இந்தியா வெற்றி பெற்று பிரகாசமான தொடக்கம் கண்டபோதிலும், பிறகு இந்தத் தொடர் இந்திய அணிக்கு பேரழிவு தரும் சுற்றுப்பயணமாக மாறி டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடர்களில் இந்தியா தோல்வியடைந்தது. தென் ஆப்பிரிக்க அணி நேற்று ஒருநாள் தொடரை 3-0 என்று கைப்பற்றியது.
ராகுல் கேப்டனாக இருந்த நான்கு ஆட்டங்களிலும் தோல்வியடைந்துள்ளார் அவரை எவ்வாறு தலைவராகக் கண்டார் திராவிட் என்று கேட்டபோது “அவர் நன்றாகத்தான் கேப்டன் பணியைச் செய்தார். முடிவுகள் தவறாக அமைந்ததற்கு அவர் காரணமல்ல.
அவர் இப்போதுதான் தொடங்குகிறார், அவர் டீசண்டாகத்தான் தன் பணியை ஆற்றினார் என்று நினைக்கிறேன். அவர் கேப்டனாக போகப் போக மிளிர்வார் என்றே நம்புகிறேன்.
இது நம் அகக்கணைத் திறந்த ஒரு தொடர் ஆனால் நாங்கள் அதிக ஒருநாள் கிரிக்கெட் தொடரக்ளை சமீபமாக விளையாடியதில்லை. நாங்கள் கடைசியாக மார்ச் மாதம் இங்கிலாந்துக்கு எதிராக விளையாடினோம் (திராவிடின் பயிற்சியின் கீழ் இரண்டாவது தொடர் இலங்கைக்கு எதிராக விளையாடியது). அடுத்த ஆண்டு உலகக் கோப்பைக்கு முன்பு நாங்கள் நிறைய வெள்ளை பந்து கிரிக்கெட்டை விளையாடுவோம்.
Also Read: இந்திய அணிக்கு என்ன செய்யணுமோ அதைச் சரியாகச் செய்தோம்- தெம்பா பவுமா
6, 7 மற்றும் 8 -ம் இடத்தில் விளையாடும் வீரர்கள் தேர்வுக்கு தகுதி பெற இல்லை. அவர்கள் திரும்பி வரும்போது, அணியில் சற்று வித்தியாசமானதாக இருக்கும்.” என்றார் ராகுல் திராவிட்.
இரண்டு சேஸிங்கிலும் 30வது ஓவர் வரை வெற்றிப்பாதையில் இருந்தோம் ஆனால், சில பேட்டர்கள் மோசமான ஷாட்களை அப்போது ஆடி ஆட்டமிழந்தனர். முக்கியமான தருணங்களில் புத்திசாலித்தனமாக ஆடத் தவறிவிட்டோம், என்கிறார் ராகுல் திராவிட்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.