விராட் கோலி நவீன கால விவியன் ரிச்சர்ட்ஸ்: பாக் முன்னாள் கேப்டன் ரமீஸ் ராஜா புகழாரம்!

விராட் கோலி

“இஷான் கிஷானுக்கு விராட் கோலியுடன் பார்னர்ஷிப் கிடைத்தது அதிர்ஷ்டம். ஏனென்றால் கோலி நவீன காலத்து ஜாம்பவான், என்னை பொறுத்த வரை கோலி நவீன காலத்து விவியன் ரிச்சர்ட்ஸ்”

  • Share this:
இங்கிலாந்துடனான டி20 தொடரில் விராட் கோலியின் ஆட்டத்திறனை கண்டு வியந்த பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் ரமீஸ் ராஜா, கோலியை நவீன கால விவியன் ரிச்சர்ட்ஸ் என புகழாரம் சூட்டியுள்ளார்.

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ரமீஸ் ராஜா, தன்னுடயை யுடியூப் சேனலில் வெளியிட்டுள்ள வீடியோவில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி மற்றும் நடைபெற்று வரும் இங்கிலாந்துடனான டி20 தொடர் குறித்து பேசியுள்ளார்.

அப்போது, மேற்குஇந்திய தீவுகள் அணியின் ஜாம்பவனான விவியன் ரிச்சர்ட்ஸுடன் விராட் கோலியை ஒப்பிட்ட ரமீஸ் ராஜா, கோலி நவீன காலத்திய விவியன் ரிச்சர்ட்ஸ் என்று புகழ்ந்தார். சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷான் போன்ற இளம் வீரர்கள் சர்வதேச போட்டிகளில் அடியெடுத்து வைக்கும் போது விராட் கோலி போன்ற ஒரு வீரர் எதிர்முனையில் அவர்களுடன் இருப்பது என்பது அதிர்ஷ்டம் என்றார்.

“இஷான் கிஷானுக்கு விராட் கோலியுடன் பார்னர்ஷிப் கிடைத்தது அதிர்ஷ்டம். ஏனென்றால் கோலி நவீன காலத்து ஜாம்பவான், என்னை பொறுத்த வரை கோலி நவீன காலத்து விவியன் ரிச்சர்ட்ஸ்” என்றார். இந்த இன்னிங்ஸ் மூலம் இஷான் கிஷானுக்கு நம்பிக்கை கிடைத்திருக்கும். எதிர்காலத்தில் அவரிடம் இருந்து நிறைய எதிர்பார்க்கலாம்” என்றார்.

இஷான் கிஷனுக்கு பெரும் ஆற்றலும் திறமையும் இருக்கிறது. அவர் பயங்கரமான தாக்குதல் ஆட்டத்தை வெளிப்படுத்துகிறார். அவர் உயரம் குறைவானவராக இருந்தாலும் கூட பந்தை சரியான இடத்தில் தாக்குகிறார். ஆப் சைடு, லெக் சைடு என இரண்டு பக்கமும் விளையாடுகிறார். சிக்ஸ்களை பறக்க விடுகிறார். தனது அறிமுக போட்டியிலேயே சிறப்பாக விளையாடி அரை சதம் கண்டு ஆட்டத்தின் போக்கை மாற்றிவிட்டார்.

இஷான் மிக சுதந்திரமாக ஆடினார். அவருக்கு மிக உகந்த சூழல் நிலவியது, அவருடைய கேப்டன் எதிர்முனையில் இருந்து கொண்டு இஷானின் அனைத்து ஷாட்டுகளுக்கும் கைதட்டிக் கொண்டிருந்தார்.” இவ்வாறு ரமீஸ் ராஜா பேசினார்.

இங்கிலாந்துடனான 2வது டி20 போட்டியில் அறிமுக வீரராக களமிறங்கிய இஷான் கிஷான், 56 ரன்கள் எடுத்தார். அவருடன் எதிர்முனையில் ஆடிய விராட் கோலி, இஷானுக்கு பக்க பலமாக இருந்தார்.
Published by:Arun
First published: