ஜடேஜாவைக் கழற்றி விடுங்கள், அதான் அக்சர் படேல் பிரமாதமாக ஆடுகிறாரே- சுனில் கவாஸ்கர் பரிந்துரை

ஜடேஜாவைக் கழற்றி விடுங்கள், அதான் அக்சர் படேல் பிரமாதமாக ஆடுகிறாரே- சுனில் கவாஸ்கர் பரிந்துரை

சுனில் கவாஸ்கர்

இங்கிலாந்துக்கு எதிராக 3 டெஸ்ட் போட்டிகளில் குழிப்பிட்சில் 27 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய அக்சர் படேல் தனக்கு அளித்த வாய்ப்பையெல்லாம் அருமையாகப் பயன்படுத்திக் கொண்டு அணியில் இடத்தை இறுகப்பற்றியுள்ளார் என்கிறார் சுனில் கவாஸ்கர்.

  • Share this:
இங்கிலாந்துக்கு எதிராக 3 டெஸ்ட் போட்டிகளில் குழிப்பிட்சில் 27 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய அக்சர் படேல் தனக்கு அளித்த வாய்ப்பையெல்லாம் அருமையாகப் பயன்படுத்திக் கொண்டு அணியில் இடத்தை இறுகப்பற்றியுள்ளார் என்கிறார் சுனில் கவாஸ்கர்.

இதனால் காயமடைந்த ஜடேஜா குணமடைந்தாலும் இனி இந்திய அணிக்குள் வருவது கடினம் என்கிறார் சுனில் கவாஸ்கர். கவாஸ்கருக்கு சமீபத்திய அணித்தேர்வு சூட்சமங்களெல்லாம் தெரியாது போலும். கோலியின் வணிக ஒப்பந்தங்களை கவனித்துக் கொள்ளும் ஸ்போர்ட்ஸ் நிறுவனம்தான் பெரும்பாலான இந்திய வீரர்களின் ஒப்பந்தங்களையும் கவனித்து வருகிறது. இதன் சூட்சமம் கவாஸ்கருக்குப் புரிகிறதா, இல்லையா என்பதே நமக்குப் புரியவில்லை.

சரி போகட்டும் அவர் விருப்பத்தை அவர் சொல்லும் போது, “அக்சர் படேல் தன் வாய்ப்புகளை இறுகப் பற்றிக் கொண்டுவிட்டார். 27 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார். அதே வேளையில் தன்னால் பேட்டிங் ஆட முடியும் என்பதையும் நிரூபித்துள்ளார். இவரும் நல்ல பீல்டர்தான், ஆனால் ஜடேஜா அளவுக்கு சிறந்த பீல்டர் இல்லைதான். அதற்காக பீல்டிங் சோடை போகக்கூடியவரும் அல்ல.
அக்சர் படேல்


இதனால் ஜடேஜா இந்திய அணியில் மீண்டும் இடம்பிடிப்பது கடினம். குறைந்தது டெஸ்ட் போட்டியில் இடம்பிடிப்பது கடினம். ஏனெனில் ஃபார்ம் வைத்துப் பார்த்தால் அவர் காயத்திலிருந்து மீண்டு மேட்ச் பிராக்டீஸ் இல்லாமல் அணிக்குள் நேரடியாக நுழைய முடியாது.

எனவே இந்திய அணி நிர்வாகம் நிச்சயம் அக்சர் படேலைத்தான் அணியில் வைத்துக் கொள்ள விரும்பும்.

ஒரு இடத்துக்கு 2 வீரர்கள் போட்டிப் போடுவது நல்ல விஷயம்தான் அப்போதுதான் அலட்சியம் ஏற்படாது” இவ்வாறு கூறினார் சுனில் கவாஸ்கர்.

ரவீந்திர ஜடேஜா ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியில் காயமடைந்தார். இதனையடுத்து அறுவை சிகிச்சை தேவைப்பட்டது. இதனையடுத்து இங்கிலாந்து தொடருக்கான அணியில் முதல் டெஸ்ட் போட்டிக்கு தண்ட பவுலர் ஷாபாஸ் நதீம் தேர்வு செய்யப்பட்டார். ஏன் ஷாபாஸ் நதீம் தேர்வு செய்யப்பட்டார் என்றால் கோலி மனதில் இடம்பிடித்துள்ள ஜடேஜாவுக்காக அந்த இடத்தை அப்படியே வைக்கத்தான் கோலி விரும்பியுள்ளார்.

ஆனால் ஜோ ரூட் முதல் டெஸ்ட் போட்டியில் இரட்டைச் சதம் எடுத்து இந்தியாவை வீழ்த்தி விட ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியை மனதில் கொண்டு ஷாபாஸ் நதீம் அதுக்குச் சரிப்படமாட்டார் என்று அக்சர் படேலைக் கொண்டு வந்தார். அக்சர் படேல் நிரூபித்தார் என்பதை விட குழிப்பிட்ச் அவருக்கு உதவியது, இவருக்குப் பந்துகள் திரும்பாத போதும் நேர் பந்துகளில் ஆட்டமிழக்கும் இங்கிலாந்தின் ‘திறமையின்மை’யும் அக்சருக்குக் கைகொடுத்தது.
Published by:Muthukumar
First published: