33 ரன்களில் 7 விக்கெட்டுகளை இழந்து தென் ஆப்பிரிக்கா படுதோல்வி: 2003-க்குப் பிறகு தொடரை வென்று பாகிஸ்தான் அபாரம்

பாக். வெற்றி. ஆட்ட நாயகன் ஹசன் அலி 10 விக்.

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக 2003-ம் ஆண்டுக்குப் பிறகு டெஸ்ட் தொடரை வென்றுள்ளது பாகிஸ்தான்.

 • Share this:
  ராவல்பிண்டியில் நடைபெற்ற 2வது டெஸ்ட் போட்டியிலும் தென் ஆப்பிரிக்கா அணி பாகிஸ்தானிடம் 95 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி தழுவிதையடுத்து டெஸ்ட் தொடரை பாகிஸ்தான் வென்று ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிகள் 60-ஐப் பெற்றது.

  தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக 2003-ம் ஆண்டுக்குப் பிறகு டெஸ்ட் தொடரை வென்றுள்ளது பாகிஸ்தான்

  தென் ஆப்பிரிக்கா இத்துடன் தங்கள் ஆடிய கடைசி 5 தொடர்களில் 4-ல் தோற்றுள்ளது. கடைசி 13 டெஸ்ட்களில் 10 டெஸ்ட்களில் தென் ஆப்பிரிக்கா தோல்வி அடைந்துள்ளது. குவிண்டன் டி காக்  கேப்டனாக 4 போட்டிகளில் 71 ரன்களை மட்டுமே எடுத்து சொதப்பி வருகிறார்.

  வெற்றி பெற 370 ரன்களை பாகிஸ்தான் அணி தென் ஆப்பிரிக்காவுக்கு நிர்ணயித்தது. அந்த அணி 4ம் நாள் ஆட்ட முடிவில் பிரமாதமாக 127/1 என்று வெற்றியை நோக்கி முன்னேறிக் கொண்டிருந்தது.

  அய்டன் மார்க்ரம் 59 ரன்களுடனும் ராஸி வான் டெர் டுசன்  48 ரன்களுடனும் இன்று 5ம் நாள் காலை களமிறங்கினர். எய்டன் மார்க்ரம் 13 பவுண்டரிகள் 3 சிக்சர்களுடன் 108 ரன்களை எடுத்து வெளியே சென்ற ஹசன் அலி பந்தை தொட்டு எட்ஜ் ஆகி கேட்ச் ஆகி வெளியேற அதுவே திருப்பு முனையாக அமைந்தது. 241/3 என்ற நிலையிலிருந்து கடும் சரிவு கண்டு அடுத்த 33 ரன்களில் 7 விக்கெட்டுகளைப் பறிகொடுத்து 274 ரன்களுக்குச் சுருண்டு படுதோல்வி அடைந்தது.

  பாகிஸ்தான் தரப்பில் ஷாஹின் ஷா அஃப்ரீடி 4 விக்கெட்டுகளைக் கைப்பற்ற ஹசன் அலி 2வது இன்னிங்ஸிலும் 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றி இந்த டெஸ்ட் போட்டியில் 10 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

  ஆட்ட நாயகனாக ஹசன் அலி தேர்வு செய்யப்பட, தொடர் நாயகனாக பாகிஸ்தான் விக்கெட் கீப்பர்/பேட்ஸ்மன் முகமது ரிஸ்வான் தேர்வு செய்யப்பட்டார்.

  இன்று காலை வந்தவுடன் 48 ரன்களிலேயே வான் டெர் டுசன், ஹசன் அலியின் லேட் இன்ஸ்விங்கரில் பவுல்டு ஆகி வெளியேறினார்.
  எய்டன் மார்க்ரம் ஒரு முனையில் நிற்க ஃபாப் டு பிளெசிஸ் 5 ரன்களில் ஹசன் அலியின் தரையிலிருந்து எழும்பாத பந்தில் எல்.பி. ஆகி வெளியேறினார்.

  135/3 என்ற நிலையில் தெம்பா பவுமா (61), மார்க்ரமுடன் இணைந்து இருவரும் ஸ்கோரை 241 ரன்களுக்கு உயர்த்தினர், மார்க்ரம்-பவுமா ஜோடி 106 ரன்களை 36 ஓவர்களில் சேர்த்தனர்.
  இப்போது தென் ஆப்பிரிக்கா வெற்றிக்கு 129 ரன்களே தேவை என்ற நிலையில் வெற்றி நம்பிக்கையுடன் ஆடிவந்தது.

  ஆனால் மார்க்ரம் 13 பவுண்டரிகள் 3 சிக்சர்களுடன் 108 ரன்கள் எடுத்து வெளியே சென்ற ஹ்சன் அலி பந்தில் 2வது ஸ்லிப்பில் கேட்ச் ஆகி வெளியேற சரிவு தொடங்கியது.  அடுத்த பந்தே குவிண்டன் டி காக் ஃபுல் லெந்த் பந்தை ட்ரைவ் ஆட முயன்று 2வது ஸ்லிப்பில் கேட்ச் ஆகி டக் அவுட் ஆனார். பவுமா அடுத்ததாக 61 ரன்களில் ஷாஹின் அஃப்ரீடி பந்தில் எட்ஜ் செய்து வெளியேறினார்.

  லிண்டே (4), கேஷவ் மகராஜ் (0), ரபாடா (0), அடுத்தடுத்து வெளியேற முல்டர் மட்டும் 20 ரன்கள் எடுத்து கடைசி விக்கெட்டாக வீழ்ந்தார். 274 ரன்களுக்குச் சுருண்டது தென் ஆப்பிரிக்கா 2-0 என்று தொடரை இழந்தது. முதல் டெஸ்ட் போட்டி கராச்சியில் நடந்தது அதில் பாகிஸ்தான் 7 விக்கெட்டுகளில் வெற்றி பெற்றது.

  பாபர் ஆஸம் கேப்டனியில் முதல் டெஸ்ட் தொடரை வென்றது பாகிஸ்தான். நியூஸிலாந்து தொடரின் தோல்விகளுக்குப் பிறகே பாகிஸ்தானுக்கு இது ஒரு அருமையான வெற்றியாக அமைந்துள்ளது.
  Published by:Muthukumar
  First published: