ரிஷப் பந்த்தின் உயிரைக் காக்க உதவிய அரியானாவைச் சேர்ந்த அரசு பஸ் டிரைவர் மற்றும் நடத்துனருக்கு அரசு பாராட்டு தெரிவித்துள்ளது. நேற்று டெல்லியில் இருந்து உத்தராகண்டின் ரூர்க்கி நகருக்கு ரிஷப் பந்த் வந்து கொண்டிருந்தார். புத்தாண்டையொட்டி தனது தாயாருக்கு சர்ப்ரைசாக இருக்க அவர் வீட்டில் தெரிவிக்காமல் இந்த பயணத்தை மேற்கொண்டிருந்தார். நேற்று அதிகாலை 5.30 மணியளவில் வந்து கொண்டிருந்தபோது சாலையில் இருந்த டிவைடரில் மோதி ரிஷப் பந்த்தின் கார் விபத்துக்குள்ளானது. தீப்பற்றி எரிந்த காரில் இருந்து அவர் கடுமையாக போராடி வெளியே வந்தார்.
அப்போது எதிர் வழியில் அரியானாவை சேர்ந்த அரசு பேருந்து ஒன்று வந்து கொண்டிருந்தது. அதில் இருந்த டிரைவர் சுஷில் குமார் மற்றும் கண்டக்டர் பரம்ஜீத் ஆகியோர் பானிபட்டில் இருந்து பேருந்தை ஹரித்வார் நோக்கி இயக்கிக் கொண்டிருந்தனர். யாரோ ஒருவர் சாலையில் விபத்துக்குள்ளாகி உயிருக்கு போராடிக் கொண்டிருந்ததை பார்த்த அவர்கள் பேருந்தை ஓரமாக நிறுத்தி விட்டு வேகமாக ஓடிச் சென்று ரிஷப் பந்தை காப்பாற்றினார்கள். அவரிடம் தான் ரிஷப் பந்த் என்பதை அவர் விளக்கியுள்ளார். இதற்கிடையே போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்டு, ரிஷப் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அந்த வகையில் ரிஷப் பந்தின் உயிரைக் காப்பாற்றியதில் டிரைவரும், கண்டக்டரும் முக்கிய பங்கு வகித்துள்ளனர். அவர்களை பானிபட் பஸ் டிப்போ மேலாளர் நேற்று நேரில் அழைத்து பாராட்டு தெரிவித்து கவுரவித்தார். இதன் தொடர்ச்சியாக அரியானா அரசு சார்பாக இருவருக்கும் பாராட்டு தெரிவிக்கப்பட்டுள்ளது. சரியான நேரத்தில் சுதவி செய்த சுஷில் குமார், பரம்ஜீத் இருவருக்கும் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
விபத்தில் காயமடைந்த கிரிக்கெட் வீரர் ரிஷப் பந்த்தின் நெற்றியில் ப்ளாஸ்டிக் சர்ஜரி செய்யப்பட்டுள்ளது. அவர் அபாய கட்டத்தை தாண்டி விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த அறுவை சிகிச்சை சிறிய அளவிலானது மட்டுமே என்று மருத்துவர்கள் கூறியுள்ளார்கள். 3 பேர் கொண்ட மருத்துவக்குழுவினர் ரிஷப் பந்திற்கு இந்த சிகிச்சையை சுமார் ஃ மணி நேரமாக மேற்கொண்டனர். விபத்தில் படுகாயம் அடைந்த ரிஷப் பந்த் தற்போது டேராடூனில் சிகிச்சை பெற்று வருகிறார்.
அவரை அங்கிருந்து உயர் சிகிச்சைக்காக டெல்லி கொண்டு செல்வது குறித்து முடிவு ஏதும் இன்னும் எடுக்கப்படவில்லை. தற்போதைய நிலையில் அவர் அபாய கட்டத்தை தாண்டி விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளதால் ரிஷப் பந்த்தின் நலன் விரும்பிகள் நிம்மதி அடைந்துள்ளார்கள்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Rishabh pant