‘என் மகனின் முதல் விமானப் பயணம்’: மகனோடு விமானத்தில் பறந்த கிரிக்கெட் வீரர் ஹர்திக் பாண்டியா பூரிப்பு..

மகனோடு விமானத்தில் பயணித்த ஹர்திக் பாண்டியா

சொந்த நாட்டில் இங்கிலாந்து உடனான தொடர் நடைபெறுவதால், குடும்பத்துடன் பயணிக்க இந்திய அணி வீரர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, தனது மகன் அகஸ்தியா மற்றும் மனைவியுடன் ஹர்திக் பாண்டியா சென்னையை அடைந்துள்ளார்.

  • Share this:
மகன் அகஸ்தியாவுடன் விமானப் பயணம் மேற்கொண்ட ஹர்திக் பாண்டியா, எனது மகனின் முதல் விமானப் பயணம் என அந்தப் புகைப்படத்தை பூரிப்புடன் டிவிட்டரில் பகிர்ந்துள்ளார்.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 20 ஓவர் மற்றும் ஒருநாள் தொடரில் மட்டும் இடம்பிடித்த ஹர்திக் பாண்டியா , அந்த தொடர்களுடன் தாயகம் திரும்பினார். இந்தியா வந்ததடைந்ததும் மனைவி நடாஷா மற்றும் மகன் அகஸ்தியாவுடன் தனது முழு நேரத்தையும் செலவிட்டு வந்தார். அவ்வப்போது, குடும்பத்துடன் இருக்கும் புகைப்படங்களையும் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வந்தார்.

இந்நிலையில், இங்கிலாந்து தொடரில் இடம்பிடித்துள்ள ஹர்திக் பாண்டியா, முதல் டெஸ்ட் போட்டி நடைபெறும் சென்னைக்கு வந்துள்ளார். சொந்த நாட்டில் இங்கிலாந்து உடனான தொடர் நடைபெறுவதால், குடும்பத்துடன் பயணிக்க இந்திய அணி வீரர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, தனது மகன் அகஸ்தியா மற்றும் மனைவியுடன் ஹர்திக் பாண்டியா சென்னையை அடைந்துள்ளார். முன்னதாக, சென்னை கிளம்புவதற்கு விமானத்தில் ஏறிய அவர், தன் மகனுடன் இருக்கும் புகைப்படத்தை டிவிட்டரில் பதிவிட்டுள்ளார். அதில், என் மகனின் முதல் விமானப் பயணம் என பூரிப்புடன் தெரிவித்துள்ளார்.

அகஸ்தியாவுடன் ஹர்திக் பாண்டியா இருக்கும் புகைப்படம் நெட்டிசன்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது. இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் வரும் இங்கிலாந்து அணி முதலாவதாக 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. இவ்விரு அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி சென்னையில் பிப்ரவரி 5 ஆம் தேதி தொடங்குகிறது. இதில் பங்கேற்கும் இந்திய அணி வீரர்கள் கேப்டன் விராட் கோலி, ரோகித் சர்மா, ஷர்துல் தாக்கூர், ரஹானே உள்ளிட்ட வீரர்கள் ஏற்கனவே சென்னை வந்தடைந்துள்ளனர்.

இங்கிலாந்து டெஸ்ட் அணியில் இடம்பிடித்துள்ள பென் ஸ்டோக்ஸ், ஜோப்ரா ஆர்ச்சர், ரோரி பர்ன்ஸ் ஆகியோரும் சென்னைக்கு வந்துள்ளனர். இலங்கைக்கு எதிரான தொடரில் பங்கேற்றுள்ள மற்ற இங்கிலாந்து அணி வீரர்களும் விரைவில் தமிழகம் திரும்புகின்றனர். கொரோனா வைரஸ் பரவல் காரணமாக சென்னை விமான நிலையம் வந்தடைந்த கிரிக்கெட் வீரர்கள் அனைவருக்கும் தீவிர பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. பின்னர், விடுதிகளுக்கு சென்ற அவர்களுக்கு பல்வேறு கொரோனா வழிகாட்டு நெறிமுகளை கடைபிடிக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

வீரர்கள் ஒவ்வொருவரும் குறைந்தபட்சம் 6 நாட்களாவது தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும் என கூறப்பட்டுள்ளது. இந்த ஆண்டு லண்டனில் நடைபெறும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் பங்கேற்கும் ஒரு அணியை இந்த தொடர் தீர்மானிக்கும் என்பதால், இவ்விரு அணிகளுக்கும் முக்கியமான தொடராக பார்க்கப்படுகிறது. ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை கைப்பற்றினாலும், குறைந்தது 2 டெஸ்ட் போட்டிகளில் வெற்றி பெற வேண்டிய நிலையில் இந்திய அணி உள்ளது. அதே நிலை இங்கிலாந்து அணிக்கும் இருப்பதால், இந்த தொடர் பரபரப்புக்கு கொஞ்சமும் பஞ்சமிருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது.
Published by:Arun
First published: