Happy Birthday Wasim Akram: மறக்க முடியாத, மறுக்க முடியாத மாஸ்டர் பவுலர் அக்ரமின் சாதனைகள்

வாசிம் அக்ரம் பிறந்த நாள்.

கிரிக்கெட் இதுவரை நமக்கு அளித்த பல நட்சத்திர பவுலர்களில் வாசிம் அக்ரம் போல் ஒரு இடது கை வேகப்பந்து, ஸ்விங் பவுலரை பார்க்க முடியாது. இவரைப் போல வீசுவது கடினத்திலும் கடினம், அத்தகைய வாசிம் அக்ரம் இன்றைய தினமான ஜூன் 3ம் தேதி, 1966-ம் ஆண்டு பாகிஸ்தானில் உள்ள லாகூரில் பிறந்தார்.

  • Share this:
கனவு கிரிக்கெட்டர் என்றே வாசிம் அக்ரமை அழைக்க வேண்டும். நீரிழிவு நோயுடன் போராடினாலும் பந்து வீச்சில் அட்ரனலின் அவரிடம் சுரக்காமல் போன நாளில்லை என்றே கூறலாம். ஒரே பந்தை உள்ளேயும் வெளியேயும் ஸ்விங் செய்வார், இவரது ரிவர்ஸ் ஸ்விங் உள்ளே வருவது போன்று வெளியே செல்லவும் கூடும் வெளியே செல்வது போல் உள்ளே வரவும் கூடும்.

இவர் உச்சத்தில் இருந்த போது இவரைக் கண்டு நடுங்காத உலகின் தொடக்க வீரர்களே இல்லை எனலாம் எந்த ஒரு டெய்ல் எண்டரும் 5 ரன்னைத் தாண்ட முடியாது. ஏனெனில் டாப் பேட்ஸ்மென்களை வீழ்த்துவதில் வல்லவர் என்றாலும் சில அணிகளில் டெய்ல் எண்டர்கள் படுத்தி எடுப்பார்கள், அவர்களுக்கு யார்க்கர்களை பரிசாக அளித்து குச்சிகளை பறக்க விட்டவர் வாசிம் அக்ரம். சுல்தான் ஆஃப் ஸ்விங் என்று இவரைத் தவிர வேறு யாரையும் அழைக்க முடியாது.

இயன் போத்தம் என்றால் அச்சுறுத்தும் ஆல்ரவுண்டர் என்று அனைத்து அணிகளும் அவரைக் கண்டு பயப்படும், போத்தம் பேட்டிங்கில் இறங்கினால் மைதானம் அமளிதுமளிப்படும் அப்பேர்ப்பட்ட இயன் போத்தமுக்கு ஒருமுறை ஒரு யார்க்கரைப் போட்டாரே பார்க்கலாம் வாசிம் அக்ரம், காலைப் பெயர்க்கும் பயத்தில் போத்தம் இருகால்களையும் தூக்க சாஷ்டாங்கமாக மைதானத்தில் நமஸ்கரித்தார் போத்தம். ஒரு லெஜண்டையே சாய்த்து விட்டார் வாசிம் அக்ரம் அந்தப் பந்தில்.ஆனால் இப்படிப்பட்ட வாசிம் அக்ரமை, சச்சின் டெண்டுல்கர் தனது 18வது வயதில் ஷார்ஜாவில் கிட்டத்தட்ட ஸ்லாக் ஸ்வீப் போன்ற ஷாட்டில் சிக்ஸ் அடித்ததையும் மறக்க முடியாது, இவரது யார்க்கர்களை சச்சின் டெண்டுல்கர் 1992 உலகக்கோப்பையிலும் அதற்குப் பிறகு அனாயசமாகக் கையாண்டதையும் மறக்க முடியாது.

1992 உலகக்கோப்பையில் பிரையன் லாரா பிரமாதமாக ஆடி வந்த போது இவர் வீசிய யார்க்கர் அவரது காலை பதம் பார்க்க பெவிலியனுக்கு நொண்டியபடியே லாரா திரும்பியதையும் லாரா மறந்திருக்க மாட்டார்.

எந்த ஒரு பவுலரும் இன்று வாசிம் அக்ரமின் செல்வாக்கு இல்லாமல் ஸ்விங் பவுலராக வர முடியாது. சர்வதேச கிரிக்கெட்டில் 900 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார். பேரதிசியம் என்னவெனில் உள்நாட்டு கிரிக்கெட்டில் ஆடாமலேயே சர்வதேச கிரிக்கெட்டில் கால்பதித்து அச்சுறுத்தியவர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

நவம்பர் 23, 1984 அன்று இவர் பாகிஸ்தான் சீருடையில் பைசலாபாத் ஒருநாள் போட்டியில் நியூசிலாந்துக்கு எதிராகக் களமிறங்கினார். ஒருநாள் அறிமுகத்துக்குப் பிறகு கொஞ்ச நாட்களிலேயே ஆக்லாந்தில் டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்துக்கு எதிராக அறிமுகமானார்.

அறிமுகமாகி 2வது டெஸ்ட் போட்டியிலேயே புரியாத புதிராகி 10 விக்கெட்டுகளை ஒரு டெஸ்ட் போட்டியில் கைப்பற்றி உலகைத் திரும்பி பார்க்க வைத்தார், அந்த இடது கையை சுழற்றும் வேகம், பந்தை மறைத்து வைத்து தையலை தனக்கு சாதகமாகப் பயன்படுத்தும் லாவகம், ரிவர்ஸ் என்ற கலை வாசிம் அக்ரமின் பலங்கள். 1992-ல் இம்ரான் கான் கேப்டன்சியில் பாகிஸ்தான் உலகக் கோப்பையை வென்றதற்கு வாசிம் அக்ரம் பந்து வீச்சும் பெரும் காரணம். அதுவும் இங்கிலாந்துக்கு எதிரான இறுதிப் போட்டியில் ஆலன் லாம்ப், லூயிஸ் இருவரையும் அடுத்தடுத்து எடுத்த பந்துகளை மறக்கவும் கூடுமோ?கேப்டனாக 25 டெஸ்ட் போட்டிகள் 109 ஒருநாள் சர்வதேச போட்டிகளில் பாகிஸ்தான் அணியை வழிநடத்தியுள்ளார். டெஸ்ட்டில் இவரது கேப்டன்சியில் பாகிஸ்தான் 12 வெற்றிகளையும் 109 ஒருநாள் போட்டிகளில் வாசிம் அக்ரம் கேப்டன்சியில் 66 போட்டிகளையும் வென்றுள்ளனர்.

பாகிஸ்தானில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவர்:

916 சர்வதேச விக்கெட்டுகளுடன் அதிக விக்கெட்டுகளைக் கைப்பற்றிய பாகிஸ்தான் லெஜண்டாகத் திகழ்கிறார். டெஸ்ட்டில் 404 விக்கெட்டுகள் ஒருநாள் போட்டிகளில் 502 விக்கெட்டுகள். ஓய்வு பெற்று 17 ஆண்டுகள் ஆன பின்பும். இந்த சாதனை இன்னும் அப்படியே தான் உள்ளது.

ஒருநாள் கிரிக்கெட்டில் முதன் முதலாக 500 விக்கெட்டுகள் சாதனை:

ஒருநாள் சர்வதேச கிரிக்கெட்ட்டில் முதன் முதலில் 500 விக்கெட்டுகள் என்ற மைல்கல்லை எட்டியவர் வாசிம் அக்ரம். பிறகுதான் முத்தையா முரளிதரன் இணைந்தார்.

4 ஹாட்ரிக் சாதனைகள்:

வாசிம் அக்ரம் முதன் முதலில் 4 சர்வதேச ஹாட்ரிக் சாதனையை நிகழ்த்தியவர் ஆவார். டெஸ்ட்டில் 2 ஹாட்ரிக் சாதனையையும் ஒருநாள் போட்டிகளில் 2 ஹாட்ரிக் சாதனையையும் நிகழ்த்தினார்.

8ம் நிலையில் இறங்கி அதிகபட்ச தனிப்பட்ட ஸ்கோர்:பவுலிங்கில் தீப்பொறி பறந்தாலும் அவர் பேட்டிங்கும் அணிக்கு ஏகப்பட்ட தருணங்களில் கைகொடுத்துள்ளது. 460 சர்வதேச போட்டிகளில் அவர் 6,615 ரன்களை எடுத்துள்ளார். 3 சதங்கள் 13 அரைசதங்கள், இதில் ஒரு இரட்டைச் சதமும் அடங்கும். 1996-ல் ஜிம்பாப்வேவுக்கு எதிராக 257 ரன்களைக் குவித்தார். இதுதான் 8ம் நிலையில் இறங்கி எடுக்கப்பட்ட அதிக ரன்கள் சாதனையாகும்.

இந்த இன்னிங்ஸில்தான் 12 சிக்சர்களை வாசிம் அக்ரம் விளாசியது டெஸ்ட் அரங்கில் இன்னிங்ஸ் ஒன்றில் ஒரு வீரர் அடிக்கும் அதிகபட்ச சிக்சர்களாகும்.

இவரை எதிர்கொண்ட பேட்ஸ்மென்கள் இன்று கண்களை மூடினாலும் இவரது பந்துகள் ராட்சசமாய் அச்சுறுத்தும்.

ரிக்கி பாண்டிங் இவரைப் பற்றிக் கூறும்போது, “கார்ட்னி வால்ஷ், கர்ட்லி ஆம்புரோஸ் நாள் முழுதும் ஒரு ட்ரைவ் கூட ஆட முடியாமல் நம்மை ஒரு ரன் கூட எடுக்க விடாமல் வீசுவார்கள், ஆனால் வாசிம் அக்ரம் போல் நம்மை எந்தப் பந்திலும் வீழ்த்தி விடுவார் என்ற பீதியை கிளப்பும் பவுலரை நான் பார்த்ததில்லை” என்றார்.

அப்பேர்ப்பட்ட லெஜண்டை நாமும் அவரது பிறந்த தினத்தில் வாழ்த்துவோமே.
Published by:Muthukumar
First published: