ஹோம் /நியூஸ் /விளையாட்டு /

இன்று பிறந்த தினம் கொண்டாடும் திராவிட் எனும் சூரரைப் போற்றுவோம்: 2021-ன் சிட்னி டெஸ்ட் டிராவை பிறந்தநாள் பரிசாக அளித்த இந்திய அணி

இன்று பிறந்த தினம் கொண்டாடும் திராவிட் எனும் சூரரைப் போற்றுவோம்: 2021-ன் சிட்னி டெஸ்ட் டிராவை பிறந்தநாள் பரிசாக அளித்த இந்திய அணி

ராகுல் திராவிட் பிறந்த நாள் இன்று. சிட்னி டிரா பரிசு.

ராகுல் திராவிட் பிறந்த நாள் இன்று. சிட்னி டிரா பரிசு.

திராவிட் இன்று இந்தியா இளம் வீரர்களின் பயிற்சியாளராக மிக அருமையான காரியத்தை செய்து வருகிறார். டி20, காட்டடி, சிக்சர் தர்பார், ஐபிஎல் பணமழை என்று அலைபாயும் இளைஞர்களின் ஆசைகளைக் கட்டிப்போட்டு அவர்களையும் சூரர்களாக்கி வருகிறார்.

  • News18 Tamil
  • 3 minute read
  • Last Updated :

அவ்வளவு எளிதில் தன் விக்கெட்டைத் தாரை வார்க்க மாட்டார், எதிரணி பவுலர்கள் தங்கள் வியர்வையைச் சிந்தித்தான் இவரை வீழ்த்த முடியும் இவரது வலுவான தடுப்பு உத்தியினால் இவர் ‘இந்திய அணியின் சுவர்’ என்றே செல்லமாக அழைக்கப்பட்டார். ஆம்! இன்று திராவிட்டுக்குப் பிறந்த நாள்.

இன்று சிட்னியில் அஸ்வின், விஹாரி, புஜாரா, பந்த் கைவண்ணத்தில் மகா டிராவை இந்திய அணி நிகழ்த்திய தினமும் திராவிட் பிறந்தநாளும் இணைவது தற்செயலான நல்வாய்ப்புதான்.

திராவிட்டை ஆல்ரவுண்டர் என்றே அழைக்கலாம், ஏனெனில் பேட்டிங் சுமையுடன் விக்கெட் கீப்பிங்கையும் ஏற்று மகத்தான தியாகத்தையும் அவர் செய்துள்ளார்.

அவரது பிறந்த தினமான இன்று 2004 சிட்னியில் அருமையான வெற்றியைச் சாதித்த திராவிட்டுக்கு அர்ப்பணிக்கும் விதமாக இன்று 131 ஓவர்களை வெற்றி கரமாக ஆடி சிட்னி டெஸ்ட் போட்டியை ட்ரா செய்தது இந்திய அணி. ஆஸ்திரேலியா அணி வெறுப்பின் உச்சத்தில் உள்ளது. பேசாததும் பேசி வீசாததும் வீசி இந்திய அணியை நிலைகுலையச் செய்ய பார்த்தனர். ஆனால் திராவிட் பிறந்த தினப் பரிசாக இன்று ஹனுமா விஹாரி, அஸ்வின் இருவரும் சேர்ந்து 259 பந்துகளை வெற்றிகரமாக எதிர்கொண்டு ட்ரா செய்தனர்.

1979-ல் பெரிய இலக்கை எதிர்த்து இந்தியா 150 ஓவர்கள் ஆடி ட்ரா செய்த வரிசையில் இந்த பெரிய ட்ரா 4ம் இடம் பிடித்துள்ளது.

திராவிட் என்றாலே நமக்கு நினைவுக்கு வருவது ஒன்று 2001 கொல்கத்தா ‘எபிக் டெஸ்ட்’, கங்குலி தலைமையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக பாலோ ஆன் ஆடி டெஸ்ட்டையே வென்ற மகா புராணம் அந்த வெற்றி.

அதில் திராவிடும் லஷ்மணும் ஒரு நாள் முழுக்க ஆட்டமிழக்காமல் ஆடினர். லஷ்மண் 281 ரன்களையும் திராவிட் 180 ரன்களையும் சேர்த்தனர், அப்படிப்பட்ட கூட்டணி உலக கிரிக்கெட்டில் அமைவது கடினம்.

இன்னொன்று திராவிட் என்றால் நினைவுக்கு வருவது 2004 ஆஸ்திரேலிய தொடரில் அடிலெய்டில் முதல் இன்னிங்சில் 233 ரன்களையும் இரண்டாவது இன்னிங்சில் 78 ரன்களையும் எடுத்து ஒரே டெஸ்ட்டில் 300 ரன்களுக்கும் மேல் எடுத்து வெற்றியை சிங்கிள் ஹேண்டடாக பெற்று தந்ததை மறக்க முடியுமா? இந்தத் தொடரிலும் ஒருநாள் முழுதும் லஷ்மண், திராவிட் ஆடினர்.

அதே போல் இங்கிலாந்துக்கு எதிராக ஒரே தொடரில் இங்கிலாந்தில் 4 சதங்களை விளாசினார். திராவிடின் கரியரில் மிக முக்கியமான திருப்பம் சேவாக் தொடக்க வீரராக இறங்கியதிலிருந்துதான் என்பதை புள்ளி விவரங்களை ஆராய்ந்தால் எளிதில் கண்டு கொள்ளலாம்.

தொடக்கத்தில் சேவாக் பவுலர்களின் லெந்த்தை காலி செய்தால், திராவிட் வந்து செட்டில் ஆக சுலபமாக அமைந்தது, அதற்கு முன்பாக தொடக்க ஜோடி சரியில்லாததால் திராவிட் புதிய பந்திலேயே இறங்கி தடுமாறிய காலம் உண்டு, ஆனாலும் விக்கெட்டை எளிதில் விட்டுக் கொடுக்க மாட்டார். அதுதான் திராவிட்.

அதே போல் ஒருநாள் கிரிக்கெட்டில் 2003 உலகக்கோப்பையின் போது இவர் விக்கெட் கீப்பிங் செய்ததால் கூடுதலாக ஒரு மட்டையாளரையோ அல்லது பவுலரையோ சேர்க்க முடிந்தது, இது ஒரு பெரும் தியாகம், நிறைய வீரர்கள் ஒப்புக் கொள்ள மாட்டார்கள், சச்சின் டெண்டுல்கரெல்லாம் தன் பேட்டிங் நிலையையே விட்டுக் கொடுக்க மாட்டார்கள். ஆனால் திராவிட் 3ம் நிலையா சரி என்பார் 5ம் நிலையா சரி என்பார். அந்த அளவுக்கு நெகிழ்வுடன் ஏற்றுக்கொள்ளக் கூடிய மனநிலை கொண்டவர்.

கேப்டனாக 17 ஒருநாள் போட்டிகளில் சேசிங்கில் வென்று இந்திய ஒருநாள் கிரிக்கெட்டுக்கு ஒரு புதிய மகுடத்தை சூட்டினார். ஆனால் திராவிட் என்றால் உடனே 2007 உலகக்கோப்பையிலிருந்து வெளியேறியதைத்தான் அனைவரும் பேசுவார்கள். ஆனால் அவர் கைவிடப்பட்டார் என்பதே உண்மை. இது அப்போதைய பயிற்சியாளர் கிரெக் சாப்பலுக்குத்தான் தெரியும்.

டெஸ்ட் கிரிக்கெட்டில் திராவிட் 163 டெஸ்ட்களில் 13,625 ரன்களை 52.63 என்ற சராசரியில் எடுத்திருக்கிறார். 36 சதங்கல் 63 அரைசதங்கள். இங்கிலாந்தில் மட்டும் 13 டெஸ்ட் போட்டிகளில் 1376 ரன்களை எடுத்துள்ளார். 6 சதங்கள் 4 அரைசதங்கள். இங்கிலாந்தில் மட்டும் சராசரி 69. துணைக்கண்ட வீரர் ஒருவர் இங்கிலாந்தில் அதிக சராசரி வைத்திருப்பதில் திராவிட் என்று முதலிடம் வகிக்கிறார்.

உலகில் பல பெரிய பேட்ஸ்மென்களும் தடுமாறும் நியூஸிலாந்தில் திராவிடின் ரன்கள் 7 டெஸ்ட்களில் 766. 2 சதம், 5 அரைசதம். சராசரி 63.83.

2001-2006-ல் திராவிட் டெஸ்ட் உச்சத்தில் இருந்தார், இந்தக் காலக்கட்டத்தில் 66 டெஸ்ட்களில் 5576 ரன்களை விளாசினார். சராசரி 60.16. இந்தக் காலக்கட்டத்தில்தான் 15 சதங்களை எடுத்தார்.

ஆட்டத்தின் பெரிய ஜெண்டில்மேன், அனாவசிய பேச்சு, சர்ச்சைகள் கிடையாது திராவிட்டிடம், செயல் அதுதான் அவரது சிறந்த சொல். ஒரு பிரியாவிடை போட்டியுடன் விடைபெறவே அனைவரும் விரும்புவார்கள் ஆனால் திராவிட், “ஒய்வு என்று முடிவாகிவிட்டது, இன்னும் எதற்காக ஒரு போட்டி?” என்று கேட்டு படாரென ஓய்வு அறிவித்தார். உலகம் போற்றும் மிகப்பெரிய வீரர் திராவிட். இன்று இந்தியா இளம் வீரர்களின் பயிற்சியாளராக மிக அருமையான காரியத்தை செய்து வருகிறார். டி20, காட்டடி, சிக்சர் தர்பார், ஐபிஎல் பணமழை என்று அலைபாயும் இளைஞர்களின் ஆசைகளைக் கட்டிப்போட்டு அவர்களையும் டெஸ்ட் சூரர்களாக்க முயன்று வருகிறார். இந்தச் சூரரை இன்று நாம் போற்றுவோம்.

இன்றைய சிட்னி ட்ரா உண்மையில் திராவிடுக்கு ரஹானே தலைமை இந்திய அணி அளிக்கும் மிகப்பெரிய பரிசே.

Published by:Muthukumar
First published:

Tags: Happy BirthDay, R Ashwin, Rahul Dravid, Sydney