• HOME
  • »
  • NEWS
  • »
  • sports
  • »
  • பெர்பைஸில் விதைத்த விதை 1983-ல் லார்ட்சில் உலகக்கோப்பையாக மலர்ந்தது: இன்று பிறந்தநாள் காணும் கபில்தேவ் எனும் அற்புதன்

பெர்பைஸில் விதைத்த விதை 1983-ல் லார்ட்சில் உலகக்கோப்பையாக மலர்ந்தது: இன்று பிறந்தநாள் காணும் கபில்தேவ் எனும் அற்புதன்

கபில்தேவ் எனும் அற்புதனின் பிறந்த நாள்.

கபில்தேவ் எனும் அற்புதனின் பிறந்த நாள்.

இந்தியாவில் வேகப்பந்து வீச்சாளரா என்று கேலி பேசியவர்கள் மூக்கில் விரல் வைக்குமாறு தன் முதல் டெஸ்ட்டிலேயே பாகிஸ்தானில் சாதிக் முகமது ஹெல்மெட்டைத் தாக்கும் பவுன்சரை வீசி கிர்மானி பின்னாலிலிருந்து ‘ஏக் அவுர்’ என்று கூறியது, அதாவது இன்னொரு பவுன்சர் என்று கூறியது இந்திய கிரிக்கெட்டை மாற்றிய வரலாற்றுத் தருணமாகும்.

  • Share this:
1983ம் ஆண்டு இங்கிலாந்தில் நடைபெற்ற உலகக்கோப்பைத் தொடரில் உலக சாம்பியன் பட்டத்துக்கு அழைத்துச் சென்று இந்திய கிரிக்கெட் சரித்திரத்தையே மாற்றி அமைத்த மிகப்பெரிய ஆல்ரவுண்டர், கேப்டன் கபில்தேவ் இன்று தனது 62வது பிறந்த தினத்தைக் கொண்டாடுகிறார்.

ஒருநாள் கிரிக்கெட்டில் முதல் முதலில் 200 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய இந்திய பவுலரும் கபில்தேவ் தான்.

டெஸ்ட் கிரிக்கெட்டில் 400க்கும் அதிகமான விக்கெட்டுகள் 5,000 ரன்கள் என்ற டபுளைச் சாதித்த ஆல்டைம் கிரேட் ஆல்ரவுண்டர் என்றால் கபில்தேவ் தான்.

1983 உலகக்கோப்பையின் விதையை 1983 மார்ச்சில் மே.இ.தீவுகளின் பெர்பைஸில் விதைத்த கபில்தேவ் எனும் அற்புதன், அந்த வெற்றி ஏதோ அதிர்ஷ்டம் அல்ல என்பதை 1983 உலகக்கோப்பை தொடரில் முதல் போட்டியிலேயே உலக சாம்பியன் மே.இ.தீவுகளை வெற்றி கொண்டதன் மூலம் நிரூபித்தார்.

இந்தியாவில் வேகப்பந்து வீச்சாளரா என்று கேலி பேசியவர்கள் மூக்கில் விரல் வைக்குமாறு தன் முதல் டெஸ்ட்டிலேயே பாகிஸ்தானில் சாதிக் முகமது ஹெல்மெட்டைத் தாக்கும் பவுன்சரை வீசி கிர்மானி பின்னாலிலிருந்து ‘ஏக் அவுர்’ என்று கூறியது, அதாவது இன்னொரு பவுன்சர் என்று கூறியது இந்திய கிரிக்கெட்டை மாற்றிய வரலாற்றுத் தருணமாகும். கடைசியில் 434 விக்கெட்டுகளைக் கைப்பற்றி டெனிஸ் லில்லி, உலகச் சாதனையாளர் ரிச்சர்ட் ஹாட்லி ஆகியோரை முறியடித்த ஒரே இந்திய பவுலராக அவர் திகழ்கிறார்.

மார்ச் 29, 1983-ல் பெர்பைஸ் மைதானத்தில் 0-1 என்று பின் தங்கிய நிலையில் வலுவான மே.இ.தீவுகளை ஒருநாள் சர்வதேசப் போட்டியில் கபில்தேவ் தலைமை இந்திய அணி எதிர்கொண்டது. டாஸ் வென்ற கிளைவ் லாய்ட் முதலில் பீல்டிங்கைத் தேர்வு செய்தார்.அங்கு ஹோல்டிங், ராபர்ட்ஸ், வின்ஸ்டன் டேவிஸ், மார்ஷல் போன்ற ஜாம்பவான் பவுலர்கள் இருந்தனர், பேட்டிங் கேட்கவே வேண்டாம், கிரீனிட்ஜ், ஹெய்ன்ஸ், ரிச்சர்ட்ஸ், லாய்ட், கோம்ஸ், லாய்ட், டியூஜான் என்று பெரிய பட்டியல் அணியில் இருந்தது.

ஆனால் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியில் சுனில் கவாஸ்கர், ரவிசாஸ்திரி இறங்கினர். ஆட்டம் 47 ஓவர்களாகக் குறைக்கப்பட்டிருந்தது.

கவாஸ்கர் அன்று என்ன மூடில் இருந்தார் என்று தெரியவில்லை 117 பந்துகளில் 8 பவுண்டரிகளுடன் 90 ரன்களை விளாசினார். அனைவரும் மூக்கில் விரலை வைத்தனர், கவாஸ்கர்தானா அது இல்லை ஏதும் ஆவி புகுந்து விட்டதா என்று? ரவிசாஸ்திரி 30 ரன் எடுத்தார், இருவரும் 93 ரன்கள் துவக்க ஜோடி கூட்டணி அமைத்தனர். மைக்கேல் ஹோல்டிங் தன் வாழ்நாளில் சுனில் கவாஸ்கரின் பேட்டிங்கை அப்படி கண்டிருக்க மாட்டார், ஹோல்டிங் 7 ஓவர் 49 ரன்கள் விளாசப்பட்டார்.

மொஹிந்தர் அமர்நாத் 30 ரன்களை எடுக்க 4ம் நிலையில் முன்னமேயே இறங்கிய கபில்தேவ் மே.இ.தீவுகள் பந்து வீச்சை புரட்டி எடுத்தார், மைதானம் நெடுக பந்துகள் சிதற 7 பவுண்டரிகள் 3 சிக்சர்களுடன் 38 பந்துகளில் 72 ரன்கள் விளாசித்தள்ள கிளைவ் லாய்ட் கடுகடுப்புடன் மைதானத்தில் காட்சியளித்தார். இந்திய அணி 47 ஓவர்களில் 282 ரன்கள் விளாசியது, கிளைவ் லாய்ட் கேப்டன்சிக்கு எதிராக எந்த ஒரு அணியும் ஓவருக்கு 6 ரன்களை ஒருநாள் கிரிக்கெட்டில் அதுவரை எடுத்ததில்லை.கடுப்பில் இறங்கிய மே.இ.தீவுகளின் தொடக்க வீரர் கார்டன் கிரீனிட்ஜ் முதல் ஓவரிலேயே கபில்தேவை சிக்சருக்குத்தூக்கினார் ஆனால் அதே ஓவரில் கபில் கிரீனிட்ஜை பெவிலியனுக்கு அனுப்பினார். வழக்கம் போல் விவ் ரிச்சர்ட்ஸ் இறங்கி வெளுத்துக் கட்டினார். 51 பந்துகளில் 11 பவுண்டரிகள் 3 சிக்சர்களுடன் அவர் 64 ரன்களை எடுத்து மதன்லால் பந்தில் பவுல்டு ஆன போது மே.இ.தீவுகள் 98/4 என்று ஆனது. லாய்டையும் மதனால் வெளியேற்றினார். பவுட் பாக்கஸ், ஜெஃப் ட்யூஜான் அரைசதம் எடுத்து போராடினர், ஆனால் பேக்கஸ், கோம்ஸ், மார்ஷலை ரவிசாஸ்திரி வீட்டுக்கு அனுப்ப டியூஜான் ஒரு முனையில் 53 நாட் அவுட் என்று தேங்க மே.இ.தீவுகள் 47 ஓவர்களில் 255/9 என்று தோல்வி தழுவியது. இந்தப் போட்டியில் தமிழக ஆஃப் ஸ்பின்னர் வெங்கட்ராகவன் இருந்தார், விக்கெட் எடுக்கவில்லை. இந்தப் போட்டியின் ஆட்ட நாயகன் கபில்தேவ். ஏனெனில் 38 பந்தில் 72, பவுலிங்கில் 10 ஓவர் 33 ரன்கள் 2 விக்கெட். இதுதான் உலகக்கோப்பைக்கான முன்னறிவிப்பு.

கிளைவ் லாய்ட் இந்தப் போட்டி முடிந்தவுடன் மே.இ.தீவுகள் வீரர்களை அழைத்து ‘இனி இப்படி நடக்கக் கூடாது’ என்று காட்டமாக ஒரு உரை நிகழ்த்தியதாக அப்போதைய பத்திரிகைச் செய்திகள் கூறின.

இந்தப் போட்டியில் கபில் போட்ட ஆக்ரோஷ விதைதான் 1983 உலகக்கோப்பை சாம்பியன் பட்டம் எனும் மலராக மலர்ந்தது. இந்த முந்தைய போட்டியை யாரும் பெரிதாக அப்போது பேசவில்லை. உலகக்கோப்பை வென்றவுடன் கவாஸ்கர், கபில் உள்ளிட்டோர் இந்த பெர்பைஸ் போட்டியை நினைவுபடுத்தினர். உலகக்கோப்பை 1983இல் ஜிம்பாப்வேவுக்கு எதிராக அடித்த 175 ரன்கள் இன்று வரை லெஜண்ட் வகை கதையாக கிரிக்கெட் புத்தகத்தில் வலம் வருகிறது.

1986 இங்கிலாந்தில் டெஸ்ட் தொடரில் கபில்தேவ் கேப்டன்சியில் அங்கு 2-0 என்று வென்றது இந்திய அணி. கபில்தேவ்வின் ஒருநாள் ஸ்ட்ரைக் ரேட் 95.07. இவரது கேப்டன்சியில்தான் முதன் முதலில் டெஸ்ட் கிரிக்கெட்டை இந்திய அணி சென்னையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக டை செய்தது, கபில் அதில் ஒரு சதம் அடித்ததையும் மறக்க முடியாது.அதே போல் மே.இ.தீவுகளுக்கு எதிராக சென்னையில் 1988-ல் 156/5 என்ற நிலையில் 124 பந்துகளில் 109 ரன்களை எடுத்தது நரேந்திர ஹிர்வாணியின் 8+8 16 விக்கெட்டுகளால் வெற்றியானதைத்தான் மறக்க முடியுமா? தொடரை இந்தியா சமன் செய்ததும் மறக்க முடியாத நிகழ்வுகள்.சென்னை அவருக்கு ராசியான மைதானம், பாகிஸ்தானுக்கு எதிராக 1979 தொடரில் ஒரு அதிவேக 83 ரன்களை விளாசி பவுலிங்கில் 56 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளைக் கைப்பற்றியதும் நினைவின் பக்கங்களில் பொன்னெழுத்தாக மிளிர்கிறது. ஒருமுறை இங்கிலாந்துக்கு எதிராக பாலோ ஆனை தவிர்க்க 24 ரன்கள் இருந்த போது இங்கிலாந்தின் ஸ்பின்னர் ஹெமிங்ஸை 4 சிக்சர்கள் வரிசையாக அடித்து தவிர்த்ததை மறக்க முடியுமா. 55 பந்துகளில் 89 ரன்களை விளாசி அதிவேக சதம் நோக்கி சென்ற இன்னிங்சைத்தான் மறக்க முடியுமா? அதே டெஸ்ட் போட்டியில் வெறும் 65 ரன்கள் முன்னிலையை வைத்துக் கொண்டு ஆக்ரோஷமாக வீசி இங்கிலாந்தின் 9 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளைக் காலி செய்து தோல்வி பயத்தை உருவாக்கியதைத்தான் மறக்க முடியுமா?

1991-92 ஆஸ்திரேலியா தொடருக்குச் செல்வதற்கு முன்பாக கபில் 376 டெஸ்ட் விக்கெட்டுகளை பெற்றிருந்தார். அந்தத் தொடருக்கு முன்பாக அவர் கூறியது இன்னும் காதுகளில் ஒலிக்கிறது, ஆஸி. தொடரில் 400 மைல்கல்லை எட்டுவேன் என்றார் செய்து காட்டினார்.

கபில்தேவ் என்றால் மன உறுதி, ஆக்ரோஷம், சாதிக்கும் வெறி என்றுதான் கூற வேண்டும், பாகிஸ்தானுக்கு பிஷன் பேடி தலைமையில் முதன்முதலாகச் சென்ற போது பிஷன் பேடி அவர் கையில் தி இந்து ஆங்கிலம் நாளிதழைக் கொடுத்து படிக்கச் சொல்லி சுற்றி வீரர்கள் அமர்ந்து அவரது ஆங்கிலத்தை கேலி செய்து மகிழ்ந்த காலம் போக ஆங்கிலத்தையும் முழுமையாகக் கற்றுக் கொண்டு தேறினார். டீப் தேர்ட்மென், லாங் ஆன். லாங் லெக் என்று பீல்டிங் செய்தவர் பிறகு ஸ்லிப் பீல்டராக முன்னேறினார். கபில்தேவ் என்றால் கடின உழைப்பு.

தென் ஆப்பிரிக்காவுக்கு முதல் முறையாக இந்திய அணி சென்ற போது கபில்தேவ் தன் இறுதி கிரிக்கெட் காலத்தில் இருந்தார், கபில் அந்த தொடரின் முதல் பந்திலேயே விக்கெட் எடுத்து சாதனை புரிந்தார், ஆனால் பேட்டிங்கில் அவரால் கடைசி டெஸ்ட் வரை சோபிக்க முடியவில்லை, அவரைக் காலியாகி விட்டார் என்று அன்னிய ஊடகங்கள் கேலி பேசிய போது இந்திய அணி 50 ரன்களுக்குள் 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய போது வந்திறங்கி ஒரு சதம் அடித்தாரே பார்க்கலாம், ஆலன் டொனால்டு, மெரிக் பிரிங்கிள், பிரையன் மெக்மில்லன் உள்ளிட்ட ஜாம்பவான் பந்துகள் சிதறடிக்கப்பட்டன. கடைசியில் அவர் பெவிலியன் திரும்பிய போது அன்று தென் ஆப்பிரிக்க ஒட்டுமொத்த அணியும் அவரை முன்னால் விட்டு பின்னால் கரகோஷம் செய்து வழியனுப்பி வைத்தனர்.

கபில்தேவ் அகராதியில் முடியாது என்ற வார்த்தையே கிடையாது. அதனால் தான் 183 ரன்களை வைத்துக் கொண்டு மே.இ.தீவுகளை மண்ணைக்கவ்வ செய்ய முடிந்தது. 125 ரன்களை வைத்துக் கொண்டு ஷார்ஜாவில் பாகிஸ்தானை 87 ரன்களுக்கு மண்ணைக்கவ்வ வைக்க முடிந்தது. கிரெக் சாப்பல் தலைமை ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 142 ரன்கள் முன்னிலையை வைத்துக் கொண்டு 83 ரன்களுக்குச் சுருட்ட முடிந்தது.

சாதனைகள் பல, நினைவுகள் பல கூறக்கூற பட்டியல் நீளும். இந்திய கிரிக்கெட்டுக்கு அப்படிப்பட்ட வரலாற்றுப் பெருமை சேர்த்த கபில்தேவை நாமும் இன்று வாழ்த்துவோமே.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Muthukumar
First published: