ஆஸ்திரேலிய சுற்றுப்பணத்தில் நடராஜன், நவ்தீப் சைனி, சர்துல் தாகூர், சுப்மன் கில், முகமது சிராஜ், வாஷிங்டன் சுந்தர், ரிஷப் பந்த் என இளம்வீரர்களின் படை வெற்றி பெற்றிருந்தாலும் இந்திய அணிக்கு பிரம்மாஹஸ்திரமாக இருந்தவர் சட்டீஸ்வர் புஜாரா. ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர்கள் புஜாராவிற்கு பந்துவீசியே களைப்படைந்ததால் மற்ற வீரர்கள் ஆஸ்திரேலியாவின் பந்தை சிதறவிட்டனர். டிராவிட்டிற்கு பிறகு இந்திய அணிக்கு கிடைத்த அற்புதமான டெஸ்ட் வீரர் என்றால் அது புஜாரா தான்.
ஆஸ்திரேலியாவிற்கு எதிராக பிரிஸ்பேன் மைதானத்தில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று வரலாற்று சாதனை படைத்தது. ஆஸ்திரேலியாவின் கோட்டை என்று அழைக்கப்படும் பிரிஸ்பேன் மைதானத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. பிரிஸ்பேன் டெஸ்ட் போட்டியின் 2-வது இன்னிங்சில் புஜாரா 211 பந்துகளை சந்தித்து 56 ரன்கள் எடுத்தார்.
ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர்கள் புஜாராவிற்கு பந்துவீசி விக்கெட் வீழ்த்த முடியாததால் அவருக்கு குறிவைத்து பல பவுன்சர்களை வீசினார். இதில் சில பந்துகள் புஜாராவை வேகமாக தாக்கி பதம் பார்த்தன. இதற்கு எல்லாம் சற்றும் அசராத புஜாரா ஆஸ்திரேலியாவின் வெற்றிக்கு பெரும் தடையாக பாறை போல் நின்று திணறடித்தார்.
ஆஸ்திரேலியா தொடரில் 928 பந்துகளை எதிர்கொண்ட புஜாரா 3 அரைசதங்களுடன் 271 ரன்கள் எடுத்தார். புஜாரா ஆஸ்திரேலியாவில் கிட்டத்தட்ட 154 ஓவர்களை எதிர்கொண்டுள்ளார். இது 3 ஒரு நாள் போட்டிகளில் ஒரு அணி எதிர்கொள்ளும் மொத்த ஓவரை விட அதிகம்.
டெஸ்ட் போட்டிகளில் அடித்து ஆடுவதை விட நிலைத்து நின்று ஆடி எதிரணியை திணறவைக்கும் உக்தியை இந்திய அணியின் இளம்வீரர்கள் புஜாராவிடமிருந்து கற்றுக் கொள்ள வேண்டும். புஜாரா இன்று தனது 33-வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு கிரிக்கெட் பிரபலங்கள், ரசிகர்கள் என பலர் வாழ்த்துகள் தெரிவித்து வருகின்றனர்.