பிரிஸ்பன் டெஸ்ட் போட்டியில் முதல் முதலாக இந்திய அணி வெற்றி பெற்றதோடு 32 ஆண்டுகளுக்குப் பிறகு ஆஸி.யை இந்த மைதானத்தில் மண்ணைக் கவ்வச் செய்ததோடு 2-1 என்று பார்டர்-கவாஸ்கர் டிராபியை வென்று தக்க வைத்தது.
36 ஆல் அவுட்டுக்குப் பிறகு ஒரு அணியாக கோலி இல்லாத நிலையில் ரஹானே தலைமையில் ஒன்று திரண்டு, ஏகப்பட்ட வீரர்கள் காயமடைந்து சுமார் 20 வீரர்களைச் சோதித்து பெஞ்ச் வலிமையை நிரூபித்து மெல்போர்ன், பிரிஸ்பனில் வென்று சிட்னியை வெற்றி பெறுவதாக மிரட்டி, கடைசியில் டிரா செய்து அசாத்திய தைரியத்துடன் ஆடியது இந்திய அணி.
பும்ரா, அஸ்வின், சிராஜ், ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர், ஷர்துல் தாக்குர், நடராஜன் என்று பவுலர்கள் அசத்தினர். அனுபவமற்ற இந்திய அணியை வைத்துக் கொண்டு ஆஸ்திரேலியக் கோட்டையை தகர்த்திருக்கிறது என்றால் சாதாரணமல்ல, இந்திய அணியின் சிறந்த கேப்டன் ரஹானே என்றே கூறிவிடலாம்.
இந்நிலையில் கூகுள் சி.இ.ஓ. இந்திய வெற்றியைக் கொண்டாடியுள்ளார், அனைவரும் போட்டியை ஒரு பந்து விடாமல் பார்த்துள்ளனர் என்று தெரிகிறது.
அவர் தன் ட்விட்டர் பக்கத்தில், “இதுவரை இல்லாத மிகப்பெரிய டெஸ்ட் தொடர் வெற்றி. இந்தியாவுக்கு வாழ்த்துக்கள், வெல் பிளேய்ட் ஆஸ்திரேலியா, வாட் எ சீரிஸ்” என்று ட்வீட் செய்துள்ளார்.
ஆனால் அவர் கூறுவது போல் ஆஸ்திரேலியா ‘வெல் பிளேய்ட்’ அல்ல ஆஸ்திரேலியா போலவே ஆடவில்லை தோல்வி பயத்தில் இன்று முழுதும் ஆடியது தெரிந்தது. களவியூகம் மோசமாக இருந்தது, இந்த வலுவான பவுலிங்குக்கான கேப்டன்சி இல்லை என்றே கூற வேண்டும்.