ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியைச் சேர்ந்த அதிரடி வீரர் கிளென் மேக்ஸ்வெல் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த வினி ராமன் என்ற பெண்ணை கரம் பிடிக்கப்போவதாக தெரிவித்துள்ளார்.
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியைச் சேர்ந்த ஆல்ரவுண்டர் கெளென் மேக்ஸ்வெல். 2015-ல் உலகக்கோப்பையை வென்ற ஆஸ்திரேலிய அணியில் இடம்பிடித்திருந்த இவர் தற்போது, ஐபில், பிக்பாஷ் லீக் உள்ளிட்ட பல டி20 தொடர்களில் விளையாடி வருகிறார்.
இந்நிலையில் இவர் தற்போது இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஆஸ்திரேலிய பெண்ணான வினி ராமன் என்ற பெண்ணை காதலிப்பதாகவும் விரைவில் இவர்கள் இருவரும் திருமணம் செய்துகொள்ளவிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இவர்கள் இருவரும் கடந்த 3 ஆண்டுகளாக காதலித்து வருகிறார்களாம். இவர்கள் ஜோடியாக பல இடங்களுக்கு சென்ற புகைப்படங்களை இவர்களே தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளனர்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு மேக்ஸ்வெல் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்ட போது அதிலிருந்து அவர் மீள உதவியதில், வினிக்கு முக்கியப்பங்குள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் கடந்த வாரம் மேக்ஸ்வெல் வினி ராமனிடம்,’நாம் திருமணம் செய்து கொள்ளலாமா’ என தனது காதலை வெளிப்படுத்தியதாகவும், அதற்கு வினி ராமனும் கிரீன் சிக்னல் கொடுத்துவிட்டதாகவும் வினி ராமனே தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். மெக்ஸ்வெல்லும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஜாடைமாடையாக மோதிர சின்னத்தோடு ஜோடியாக புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார்.
https://www.instagram.com/p/B9Bu90ulUwy/?utm_source=ig_web_copy_link
மேக்ஸ்வெல்லுக்கு 31 வயதாகும் நிலையில், வினி ராமனுக்கு 27 வயதாவது குறிப்பிடத்தக்கது. வினி ராமனின் பெற்றோர் தென்னிந்தியாவைச் சேர்ந்தவர்களாம். ஆனால் வினி ராமன் பிறந்து வளர்ந்து, படித்தது எல்லாமே ஆஸ்திரேலியாவில் தான். மெல்போர்ன் நகரில் வசித்துவரும் இவர் படிப்பை முடித்துவிட்டு தற்போது மருந்தாளுனராக உள்ளார்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.