முகப்பு /செய்தி /விளையாட்டு / ரன்கள் எடுக்க திணறும் கே.எல். ராகுலை சோஷியல் மீடியாவில் விமர்சிக்காதீர்கள்… காம்பீர் வேண்டுகோள்…

ரன்கள் எடுக்க திணறும் கே.எல். ராகுலை சோஷியல் மீடியாவில் விமர்சிக்காதீர்கள்… காம்பீர் வேண்டுகோள்…

கவுதம் காமபீர் - கே.எல் ராகுல்

கவுதம் காமபீர் - கே.எல் ராகுல்

தங்களுடைய ஃபாலோயர்சை அதிகரிப்பதற்காக ஒருசிலர் பதிவிட்டு வருகின்றனர். அவர்களுக்கு ரசிகர்கள் துணை போகக்கூடாது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

இந்திய அணியின் பேட்ஸ்மேன் கே.எல். ராகுல் ரன்கள் எடுக்க திணறி வரும் நிலையில், அவரை சமூக வலைதளங்களில் விமர்சிக்க வேண்டாம் என்று முன்னாள் வீரர் கவுதம் காம்பீர் கோரிக்கை வைத்துள்ளார். தொடர்ந்து மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் நிலையில், ராகுலுக்கு ஏன் மீண்டும் மீண்டும் வாய்ப்பு அளிக்கப்படுகிறது என்று ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கேள்வி எழுப்பி வருகின்றனர். இதற்கு அணி நிர்வாகம், கேப்டன், பயிற்சியாளர் உள்ளிட்டோர் அளிக்கும் விளக்கங்கள் ரசிகர்களை திருப்திபடுத்தும் வகையில் அமையவில்லை. கடந்த ஆண்டு ராகுல் ஒரே ஒரு அரைச்சதம் மட்டுமே அடித்துள்ளார். ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக 2 டெஸ்டில் நடந்த 3 இன்னிங்ஸ்களில் ராகுல் மொத்தம் 38 ரன்கள் மட்டுமே எடுத்து இருக்கிறார். இதனால் அவரை ஆடும் லெவனில் இருந்து நீக்கிவிட்டு சுப்மன் கில் அல்லது சூர்யகுமார் யாதவுக்கு வாய்ப்பு அளிக்க வேண்டும் என்று ரசிகர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக இந்தூரில் நடக்கும் மூன்றாவது டெஸ்டில் கே.எல். ராகுல் விளையாடமாட்டார் என்று சில நாட்களுக்கு முன்பு தகவல் வெளிவந்தது. முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளுக்கு கே.எல். ராகுல் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டிருந்தார். ஆனால் அவரிடமிருந்து பொறுப்பு தற்போது நீக்கப்பட்டுள்ளது. கே.எல். ராகுல் குறித்து முன்னாள் பந்து வீச்சாளர் வெங்கடேஷ் பிரசாத் மிகக் கடுமையாக விமர்சித்து இருந்தார். அவர், ‘கே.எல். ராகுல் ஃபார்முக்கு வரவேண்டுமென்றால், ஐபிஎல் போட்டிகளை தவிர்த்துவிட்டு இங்கிலாந்தின் கவுண்டி ஆட்டங்களில் விளையாட வேண்டும்’ என்று கூறியிருந்தார். இந்த விவகாரம் சமூக வலைதளங்களில் பரபரப்பாக விவாதிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கே.எல். ராகுலை சமூக வலைதளங்களில் விமர்சிக்க வேண்டாம் என்று முன்னாள் வீரர் கவுதம் காம்பீர் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது- கே.எல். ராகுல் குறித்து சமூக வலைதளங்களில் ரசிகர்கள் பேசுகின்றனர். ரசிகர்கள் தாங்கள் ஒரு கிரிக்கெட் வீரரை விமர்சிக்கிறோமா அல்லது யாரேனும் சிலருக்கு உதவி செய்கிறோமா என்பதை புரிந்து கொள்ள வேண்டும். தயவு செய்து சமூக வலைதளங்களில் ரசிகர்கள் விமர்சிக்க கூடாது. தங்களுடைய ஃபாலோயர்சை அதிகரிப்பதற்காக ஒருசிலர் பதிவிட்டு வருகின்றனர். அவர்களுக்கு ரசிகர்கள் துணை போகக்கூடாது. கே.எல். ராகுல் அணியில் இடம்பெறுவார் அல்லது இடம்பெற மாட்டார் என்பது நம்முடைய வேலை அல்ல. அது தேர்வுக்குழுவின் பணி. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கிரிக்கெட் தொடரில் நாம் 2 வெற்றிகளை பெற்று முக்கியமான கட்டத்தில் இருக்கிறோம். ஒருவர் மோசமாக விளையாடும்போது, அவருக்கு நாம் ஆதரவாக, நல்ல நிலைக்கு திரும்ப உதவியாக இருக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

First published:

Tags: Cricket