பிறந்த நாளில் தோனியை புகழ்ந்த பிரபலங்கள்: சர்ச்சையை ஏற்படுத்திய கம்பீரின் செயல்!

2011ம் ஆண்டு உலகக் கோப்பை இறுதி ஆட்டம்

டோனியின் வாழ்க்கை வரலாற்றை மையமாக கொண்ட திரைப்படம் வெளியாக இருந்த சமயத்தில்,  ‘வாழ்க்கை வரலாற்றை சினிமா படமாக எடுக்க கூடிய தகுதி கிரிக்கெட் வீரர்களுக்கு இல்லை என கம்பீர் சமூக ஊடகத்தில் பதிவிட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது.

  • Share this:
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் டோனியின் பிறந்தநாளான நேற்று கவுதம் கம்பீர் செய்த செயல் விமர்சனத்தை ஏற்படுத்தியது.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் துவக்க ஆட்டக்காரரான கவுதம் கம்பீர் மற்றும் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் டோனி இடையே பனிப்போர் இருப்பதாக கூறப்பட்டு வருகிறது.  அதற்கேற்றார்போல், பல்வேறு சந்தர்ப்பங்களில் டோனியை கம்பீர் விமர்சித்துள்ளார்.

டோனியின் வாழ்க்கை வரலாற்றை மையமாக கொண்ட திரைப்படம் வெளியாக இருந்த சமயத்தில்,  ‘வாழ்க்கை வரலாற்றை சினிமா படமாக எடுக்க கூடிய தகுதி கிரிக்கெட் வீரர்களுக்கு இல்லை என நான் நம்புகிறேன். நாட்டில் பல நல்லறம் செய்யும் மக்கள் நிறைய உள்ளனர். அவர்கள் குறித்து வரலாற்று திரைப்படம் தயாரிக்கப்பட வேண்டும்’ என்று தனது ட்விட்டர் பக்கத்தில் கவுதம் கம்பீர் கூறியிருந்தார்.

2011ம் ஆண்டு உலக கோப்பையை இந்தியா வென்றது குறித்து கடந்த ஆண்டு இஎஸ்பின் நிறுவனம் தனது  ட்விட்டர் பக்கத்தில் டோனியை பாராட்டி பதிவிட்டிருந்தது. அதற்கு, உலக கோப்பை ஒட்டுமொத்த இந்திய அணியின் முயற்சியால் பெறப்பட்டது என்று கம்பீர் பதில் அளித்திருந்தார்.

இந்நிலையில், மகேந்திர சிங் டோனியின் 40வது பிறந்த நாளை முன்னிட்டு நேற்று பல்வேறு பிரபலங்களும் ரசிகர்களும் சமூக வலைதளங்களில்  டோனிக்கு வாழ்த்து தெரிவித்தனர்.  அப்போது 2011ம் ஆண்டு உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் டோனியின் சிறப்பான ஆட்டத்தை சிலாகித்து பலரும் பதிவிட்டிருந்தனர். இந்நிலையில், அந்த போட்டியில் தனது சிறப்பான ஆட்டத்தை குறிக்கும் விதமான புகைப்படத்தை சமூக ஊடகத்தில் தனது கவர்போட்டோவாக கம்பீர் நேற்று வைத்தார்.

 டோனியை பலரும் பாராட்டிவரும் நிலையில், அதனை விமர்சிக்கும் வகையிலேயே கம்பீர் இந்த புகைப்படத்தை பதிவேற்றியிருப்பதாக பலரும் விமர்சிக்க தொடங்கினர்.  பல்வேறு பிரபலங்கள் டோனிக்கு வாழ்த்து தெரிவித்துள்ள போதிலும் கம்பீர் வாழ்த்து தெரிவிக்கவில்லை என்பதையும் ரசிகர்கள் குறிப்பிடுகின்றனர்.

2011ல் உலக கோப்பை இறுதிப் போட்டியில் கம்பீர், டோனி இருவரும் சிறப்பான பங்களிப்பை அளித்திருந்தனர்.  கம்பீர் 97 ரன்களும், டோனி 91 ரன்களும் எடுத்திருந்தனர்.  இறுதிக்கட்டத்தில் டோனி சிறப்பான சிக்ஸர் அடித்து இந்திய அணி கோப்பையை கைப்பற்ற காரணமாக இருந்தார்.
Published by:Murugesh M
First published: