கங்குலி புதிய வீரர்களை அறிமுகம் செய்தார், ஆதரவளித்தார் அணியைக் கட்டமைத்தார் கோலி இதை செய்யவில்லை என்று அதிரடி மன்னன் விரேந்திர சேவாக் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.
அதிரடி மன்னன் விரேந்திர சேவாக் கங்குலியினால் ஊட்டி வளர்க்கப்பட்டவர், தோனியால் ஓரங்கட்டப்பட்டவர். தன்னிலே சேவாக் ஒரு கேப்டன்சி வீரர்தான், இவருக்கு தெரிந்த கிரிக்கெட் நுணுக்கங்களால்தான் மொஹீந்தர் அமர்நாத் இவரைக் கேப்டனாக்கி தோனியை கேப்டன்சியிலிருந்து அகற்ற வேண்டும் என்று வலியுறுத்தினார், ஆனால் அப்போதைய பிசிசிஐ தலைவர் அமர்நாத் முயற்சிகளுக்கு முட்டுக்கட்டை போட்டார்.
இல்லையெனில் அயல்நாடுகளில் டெஸ்ட் போட்டிகளில் வரிசையாக உதை மேல் உதை வாங்கும் வேறு எந்த கேப்டனும் தோனி மாதிரி தன்னை கேப்டனாக தக்க வைத்திருக்க முடியாது என்பதுதான் பலரும் இன்று முன் வைக்கும் விமர்சனமாகும். சேவாக், கங்குலி, தோனி இருவரின் கேப்டன்சியிலும் ஆடியிருக்கிறார்.
இன்று 40 வயதில் தோனி ஆடுகிறார் ஆனால் சேவாக், யுவராஜ், ரெய்னாவைக் காணோம். அன்று 2011 உலகக்கோப்பை ஆடிய சேவாக்,ஹர்பஜன், யுவராஜ், ஜாகீர் கான் உள்ளிட்ட வீரர்கள் 2015 உலகக்கோப்பை வரையிலும் ஆடக்கூடிய திறமையுடன் தான் இருந்தனர் ஆனால் ஓரங்கட்டி விட்டார் என்று ஹர்பஜன் வைத்த குற்றச்சாட்டு கவனிக்கத்தக்கது.
ஐபிஎல் கிரிக்கெட்டிலும் கூட வீரர்களை ஆதரித்து வளர்த்தெடுப்பதுதான் அணியின் கேப்டனின் வேலை. தமிழ்நாட்டு வீரர் பாபா அபராஜித் கிட்டத்தட்ட 4 சீசன்கள் தோனி கூட இருந்தும் ஒரு ஐபிஎல் போட்டியில் கூட வாய்ப்பளிக்காமல் ஓரங்கட்டப்பட்டார், சாய் கிஷோரும் இப்படித்தான் சிஎஸ்கேவில் ஓரங்கட்டப்பட்டார் இன்று குஜராத் அணிக்கு அவர் அசத்தி வருகிறார், விராட் கோலியே அவரை மரியாதை கொடுத்து ஆடும் அளவுக்கு சிறப்பாக வீசுகிறார் சாய் கிஷோர்.
இந்த விதத்தில்தான் சேவாக் ஸ்போர்ட்ஸ் 18 சேனலுக்கு அளித்த பேட்டியில், ‘கங்குலி அணியில் புதிய வீரர்களைக் கொண்டு வந்தார், அவர்களுக்கு வாய்ப்புக் கொடுத்து அவர்களின் உயர்விலும் தாழ்விலும் காத்தார், கோலி இதைச் செயதாரா என்று கேள்வி எழுப்புகிறார். வெறும் வெற்றியை மட்டும் வைத்து எடைப்போடக் கூடாது. அப்படிப் போட்டால் ரிக்கி பாண்டிங் பெரிய கேப்டன். ஆனால் மார்க் டெய்லர் அணியைக் கட்டமைத்தார், அதில்தான் ஸ்டீவ் வாஹ் குளிர் காய்ந்தார். பாண்டிங்கும் குளிர் காய்ந்தார். மார்க் டெய்லரை விடுத்தால் அங்கு மைக்கேல் கிளார்க்தான் பெரிய கேப்டன். எனவே வெற்றி மட்டுமே ஒருவரை பெரிய கேப்டனாகத் தீர்மானிக்காது.
கங்குலி கேப்டன்சியில், யுவராஜ், சேவாக், ஹர்பஜன், ஜாகீர் கான், இர்பான் பதான், ஆஷிஷ் நெஹ்ரா, ஆர்.பி.சிங், மொகமட் கைஃப் என்று ஒரு பெரிய படையையே உருவாக்கினார்.
சேவாக் என்ன கூறுகிறார் எனில், “சவுரவ் கங்குலி புதிய அணியைக் கட்டமைத்தார், புதிய வீரர்களை அணியில் அறிமுகம் செய்தார், அறிமுகம் செய்வதோடு நிற்காமல் அவர்களின் உயர்விலும் தாழ்விலும் அவர்களுக்காக நின்றார், பாதுகாத்தார், கோலி தன் கேப்டன்சி காலத்தில் இதைச் செய்தாரா என்பது சந்தேகமே.
என்னைப் பொறுத்தவரை நம்பர் 1 கேப்டன் என்பவர் ஒரு அணியை எதிர்காலத்துக்குக் கட்டமைப்பவர்தான். வீரர்களுக்கு நம்பிக்கை அளிப்பவர்தான். விராட் கோலி நிறைய வீரர்களை தூக்குவதும் ஒதுக்குவதுமாக இருந்தார், சில வீரர்களை ஆதரித்தார், சிலரை ஆதரிக்க மறுத்தார். கட்டிங் அண்ட் சாப்பிங் என்பார்களே அதே போல் வீரர்களை அடிக்கடி மாற்றிக்கொண்டே இருந்தார் கோலி. ஆகவே அணியைக் கட்டமைத்ததில் கங்குலிதான் சிறந்த கேப்டன்” என்றார் சேவாக்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Captain Virat Kohli, MS Dhoni, Sourav Ganguly, Virender sehwag