• HOME
 • »
 • NEWS
 • »
 • sports
 • »
 • 4-வது டெஸ்ட்டில் வென்றால் அது ஒரு பெரிய சாதனைதான்...: அட! இந்தியாவைச் சொல்லலப்பா, இங்கிலாந்தை சொல்றார்

4-வது டெஸ்ட்டில் வென்றால் அது ஒரு பெரிய சாதனைதான்...: அட! இந்தியாவைச் சொல்லலப்பா, இங்கிலாந்தை சொல்றார்

ரூட் - கோலி

ரூட் - கோலி

அயல்நாட்டில் கடினமான சூழ்நிலைகளில் வெற்றி பெறுவது பெருமகிழ்ச்சி. அனைவரும் சேர்ந்து இந்த வெற்றியையும் தொடர் ட்ராவையும் சாதிக்க முடிந்தால் உண்மையில் இந்த அணி என் பெருமைக்குரிய அணிதான்.” என்றார் ஜோ ரூட்.

 • Share this:
  தொடரில் 2-1 என்று பின் தங்கிய நிலையில் இங்கிலாந்தில் லார்ட்சில் நடைபெறும் ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு இங்கிலாந்து தகுதி பெற வாய்ப்பில்லை, ஆனால் இந்தியா தகுதி பெறாமல் செய்ய முடியும். அதற்கு இங்கிலாந்து வெற்றி பெறவேண்டும்.

  அப்படி வெற்றி பெற்றால் அது ஒரு பெரிய சாதனைதான் என்கிறார் ஜோ ரூட். நம் சீமான் ரக கிரிக்கெட் ரசிகர்களின் மைண்ட் வாய்ஸ் இப்போதே கேட்கிறது. “வாய்ப்பில்ல ராஜா” என்று கமெண்ட் போடுவார்கள்.

  ஜோ ரூட் கூறியதாவது:

  “இந்தியாவின் சமீபத்திய உள்நாட்டுச் சாதனைகளை எண்ணிப்பாருங்கள். அப்படியிருக்கையில் 4வது டெஸ்ட் போட்டியை வென்று தொடரை 2-2 என்று சமன் செய்தால் அது உண்மையில் மிகப்பெரிய சாதனையே. அதுவும் கடைசி 2 தோல்விகளுக்குப் பிறகு.

  இந்த வீரர்களின் நினைவுச்சிற்ப சாதனையாக இருக்கும் அது. அதற்கு நிறைய ஆடவேண்டியுள்ளது.

  கடந்த டெஸ்ட் போல் பிட்ச் இருந்தால் ஆஃப் ஸ்பின்னர் நாக்கைச் சப்புக் கொட்டிக் கொண்டு காத்திருக்கிறார். அவர் திறமையுள்ள இளம் வீரர். சாதிக்கத் துடிப்பவர் நிச்சயம் தன் அடையாளத்தை இங்கு ஏற்படுத்த ஆர்வமாகவே இருப்பார்.

  நாங்கள் கடந்த போட்டியில் அணித்தேர்வில் தவறுகளை இழைத்தோம். கடந்த போட்டியில் பிட்சை தவறாகக் கணித்தோம். இந்தியாவில் நடந்த கடந்த பிங்க் பந்து டெஸ்ட் போட்டியை வைத்து பிட்சை தவறாக எடைபோட்டு விட்டோம். இவ்வளவு ஸ்பின் எடுக்கும் என்று தெரியவில்லை.

  எனவே கடந்த டெஸ்ட் போன்ற பிட்ச் என்றால் டாம் பெஸ் உண்மையில் பெரிய சொத்துதான். நிச்சயம் ஸ்பின் எடுக்கும் என்றுதான் கருதுகிறேன். எனவே பயிற்சியில் ஸ்பின் தான் முக்கியக் கவனம் பெறுகிறது.

  2019 தொடரை ட்ரா செய்தோம். அதே போல் இங்கும் டிரா செய்ய முடிந்தால் நிச்சயம் அது ஒரு பெரிய முயற்சியாகவே இருக்கும். அனுபவமற்ற இந்த அணி ட்ரா செய்தால் அது சாதனைதான். மேலும் என்னுடைய கேப்டன்சி வாழ்க்கையில் இந்த வெற்றியுடன் கூடிய டெஸ்ட் தொடர் ட்ராவும் ஒரு சாதனையாக அமையும்.

  அயல்நாட்டில் கடினமான சூழ்நிலைகளில் வெற்றி பெறுவது பெருமகிழ்ச்சி. அனைவரும் சேர்ந்து இந்த வெற்றியையும் தொடர் ட்ராவையும் சாதிக்க முடிந்தால் உண்மையில் இந்த அணி என் பெருமைக்குரிய அணிதான்.” என்றார் ஜோ ரூட்.

  ரஹானே ஸ்பின் பிட்ச் என்கிறார், கோலியும் 5 நாட்களுக்குள் எடுத்துச் செல்ல வேண்டிய அவசியமில்லை வெற்றிதான் முக்கியம் என்று கூறுகிறார். இப்படியெல்லாம் கூறிவிட்டு ஒரு படு மட்டையான பேட்டிங் பிட்சைப் போட்டு ரோஹித் சர்மா ஒரு இரட்டைசதம் , கோலி ஒரு இரட்டை என்று போனாலும் போக வாய்ப்புள்ளதாக ஜோ ரூட் நம்பவில்லை பாவம். அப்பாவியாக இருப்பார் போல் தெரிகிறது.

  வடிவேலு ஒரு நகைச்சுவையில் செய்வது போல் ‘பீ கேர் ஃபுல்’ என்பார் உடனே அடித்தவர்கள் திரும்பி என்னது என்பார்கள், உடனே ‘என்னைச் சொன்னேன்’ என்று சொல்வாரே அது போல் 4வது டெஸ்ட்டை வென்றால் சாதனைதான் என்று கூறியுள்ளார் உடனே எல்லோரும் ‘என்னது’ என்று கேட்க ‘எங்க டீமைச் சொன்னேன்’ என்பது போல் உள்ளது அவரது நிலைமை.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

  Published by:Muthukumar
  First published: