இந்திய கிரிக்கெட் முன்னாள் வீரரான அருண் லால் தனது 66ஆவது வயதில் இரண்டாவது திருமணம் செய்து கொள்ளவுள்ளார். தற்போது பெங்கால் ரஞ்சி அணியின் பயிற்சியாளராக உள்ள அருண் லால் தனது நீண்ட நாள் தோழியான 38 வயது ஆசிரியை புல்புல் சாஹாவை வரும் மே 2ஆம் தேதி திருமணம் செய்யவுள்ளார். இவருக்கும் திருமண நிச்சய சடங்கு அன்மையில் நடைபெற்றது. இந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.
அருண் லாலுக்கு ரீனா என்பவருடன் முதலில் திருமணமான நிலையில், இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து செய்துள்ளனர். அதேவேளை, ரீனா உடல் நலக்குறைவு காரணமாக அவதிப்பட்டு வரும் நிலையில் , ரினாவை அருண் லால் தற்போது கவனித்து வருகிறார்.
இரண்டாவது திருமணத்திற்குப் பின்னும் ரீனாவை அருண் லால் உடனிருந்து பார்த்துக்கொள்வார் எனக் கூறப்படுகிறது. இந்த திருமணத்தில் உள்ளூர் கிரிக்கெட் வீரர்கள், பெங்கால் கிரிக்கெட் வாரியத்தின் அலுவலர்கள், உறவினர்கள், நண்பர்கள் ஆகியோர் பங்கேற்க உள்ளதாகக் கூறப்படுகிறது.
1955 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 1ஆம் தேதி பிறந்த உத்தரப் பிரதேச மாநிலத்தில் பிறந்த அருண் லால், 1982ஆம் ஆண்டு இந்திய அணிக்காக தனது முதல் டெஸ்ட் போட்டியில் களமிறங்கினார். 1987ஆம் ஆண்டு மேற்கு இந்திய அணிக்கு எதிராக டெஸ்ட் போட்டியில் 93 ரண்கள் அடித்ததே, சர்வதேச போட்டியில் இவர் அடித்த அதிகபட்ச ஸ்கோர் ஆகும். 1989ஆம் ஆண்டு சர்வதேச போட்டியிலிருந்து ஓய்வு பெற்ற அருண் லால், கிரிக்கெட் வர்ணனையாளராக நீண்ட காலம் ஜொலித்துள்ளார். 2016ஆம் ஆண்டு வரை சர்வதேச போட்டிகளில் பிரபல வர்ணனையாளராக அருண் லால் இருந்த நிலையில், அவருக்கு தாடையில் புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டது. பின்னர் உரிய சிகிச்சைக்குப் பின் நோயிலிருந்து குணமடைந்த அருண் லால், பெங்கால் ரஞ்சி அணியின் பயிற்சியாளரானார்.
இதையும் படிங்க:
டி20 உலகக்கோப்பை அணியில் ‘யார்க்கர்’ நடராஜன் அவசியம்- சுனில் கவாஸ்கர்
இவரது வருகைக்குப் பின் பெங்கால் ரஞ்சி அணி சிறப்பான முன்னேற்றத்தைக் கண்டது. 13 ஆண்டுகளுக்குப் பின் பஞ்சாப் ரஞ்சி அணியை இவர் ரஞ்சிக் கோப்பை இறுதிப் போட்டிக்கு அழைத்துச் சென்றார். நடப்பாண்டு ரஞ்சி தொடரிலும் பெங்கால் அணி குரூப் ஸ்டேஜில் 18 புள்ளிகள் எடுத்து தனது குரூப்பில் முதலிடத்தில் உள்ளது.அத்துடன் காலிறுதிச் சுற்றுக்கும் பெங்கால் அணி முன்னேறியுள்ளது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.