பிட்ச் விவகாரம்: உண்மையை உடைக்கும் அகமதாபாத் முன்னாள் பிட்ச் தயாரிப்பாளர் திராஜ் பர்சானா

2வது டெஸ்ட்டுக்கான சென்னை பிட்ச்.

பிட்ச் தயாரிப்பாளர், கியுரேட்டர் என்று கூப்பிடுங்கள் அல்லது மைதான பராமரிப்பாளன் என்று கூப்பிடுங்கள், எப்படிக் கூப்பிட்டாலும் இவர்களுக்கு பிட்ச் தயாரிப்பில் சுதந்திரம் கிடையாது. இப்படித்தான் கடந்த 10 ஆண்டுகளாகச் சென்று கொண்டிருக்கிறது. நான் பிட்ச் போடும் வரையில் 5 நாட்கள் டெஸ்ட் போட்டி நடைபெறும் என்பதற்கு ஏற்பத்தான் போடுவேன்.

  • Share this:
திராஜ் பர்சானா (வயது 73), இவர் குஜராத்தைச் சேர்ந்த இடதுகை சுழற்பந்து வீச்சாளர், மித வேகப்பந்தும் வீசக்கூடியவர். 2 டெஸ்ட் போட்டிகளில் இந்தியாவுக்காக ஆடியுள்ளார். ஆனால், 1983 முதல் 2012-ல் இங்கிலாந்து இங்கு வந்து ஆடியது வரை அகமதாபாத் மொடீரா ஸ்டேடியத்தின் (இப்போது நரேந்திர மோடி ஸ்டேடியம்) பிட்ச் தயாரிப்பில் ஈடுபட்டிருந்தவர் இந்த திராஜ் பார்சனாதான். இப்போது ஓய்வு பெற்று விட்டார்.

கிட்டத்தட்ட 30 ஆண்டுகளாக குஜராத் கிரிக்கெட் சங்கத்துக்கு உழைத்துள்ளார், பிட்ச் கியூரேட்டராகப் பணியாற்றியுள்ளார். இவர் இப்போதைய பிட்ச் தயாரிப்பாளருக்கு சுதந்திரம் இல்லை, இந்திய அணிக்குச் சார்பாக பிட்ச் தயாரிக்கச் சொல்கிறார்கள். அதாவது இந்திய அணி நிர்வாகம் என்ன கேட்கிறதோ அதைச் செய்ய வேண்டியதுதான் வேலை என்கிறார், நடுநிலையுடன் பிட்ச் தயாரிக்க அனுமதிக்கப்படுவதில்லை என்கிறார்.

தி இந்து ஸ்போர்ட்ஸ்டார் ஊடகத்துக்கு திராஜ் பார்சனா அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:

பிட்ச் தயாரிப்பாளர், கியுரேட்டர் என்று கூப்பிடுங்கள் அல்லது மைதான பராமரிப்பாளன் என்று கூப்பிடுங்கள், எப்படிக் கூப்பிட்டாலும் இவர்களுக்கு பிட்ச் தயாரிப்பில் சுதந்திரம் கிடையாது. இப்படித்தான் கடந்த 10 ஆண்டுகளாகச் சென்று கொண்டிருக்கிறது. நான் பிட்ச் போடும் வரையில் 5 நாட்கள் டெஸ்ட் போட்டி நடைபெறும் என்பதற்கு ஏற்பத்தான் போடுவேன்.

ஆனால் இப்போதெல்லாம் பிட்ச் போடுபவர் ஒரு ஊழியராகப் பார்க்கப்படுகிறார், அவர் தன் இஷ்டத்துக்குச் செய்ய முடியாது, மேலிருந்து வரும் உத்தரவுகளுக்குக் கீழ்படிய வேண்டியதுதான். நான் குஜராத் கிரிக்கெட் சங்கத்தில் 36 ஆண்டுகள் ஊழியனாகப் பணியாற்றினேன். இப்படியிருக்கும் போது அவர்கள் சொல்வதைத்தான் நான் கேட்க முடியும். கவுரவப் பதவியிலிருந்தால் நான் மறுக்கலாம் எதிர்க்கலாம். இப்படித்தான் இருக்கிறது நிலைமை, என்றார் திராஜ் பார்சனா.

திராஜ் பார்சனா ஒரு விஷயத்துக்குப் பெரிதாகப் பேசப்பட்டார், 2008ம் ஆண்டு தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான அகமதாபாத் டெஸ்ட் போட்டியில் பிட்சில் உள்ள புற்களை முற்றிலும் மழிக்கச் சொன்ன போது மறுத்து தைரியமாக தன் நிலைப்பாட்டில் உறுதியாக இருந்தார். இதனால் இந்தியா அந்த டெஸ்ட் போட்டியில் இன்னிங்ஸ் தோல்வி அடைந்தது.

இது தொடர்பாக திராஜ் பார்சனா கூறும்போது, “ஏன் பிட்சில் புற்கள் என்று என்னைக் கேட்டனர். கடும் வெப்பம் இருப்பதால் பிட்ச் உடையாமல் இருக்க புற்கள் அவசியம் என்றேன். என்னுடைய கோட்பாடு என்னவெனில் பிட்ச் 5 நாட்களுக்குரியதாக இருக்க வேண்டும். பேட்ஸ்மென்களும், பவுலர்களும் தங்கள் திறமையைப் பயன்படுத்தி முடிவுகளை அவர்களுக்குச் சாதகமாக்கிக் கொள்ளட்டும் என்பதே” என்றார்.

அந்த அகமதாபாத் டெஸ்ட்டில் அனில் கும்ப்ளே தலைமையில் இந்திய அணி இன்னிங்ஸ் தோல்வி அடைந்தது, காரணம் கிரீன் டாப் பிட்சில் முதல் நாள் டாஸ் வென்று முதலில் இந்தியா பேட் செய்தது, சச்சின் இல்லை. 20 ஒவர்களே தாக்குப்பிடித்த இந்திய அணி 76 ரன்களுக்குச் சுருண்டது. வாசிம் ஜாஃபர், சேவாக், திராவிட், லஷ்மண், கங்குலி, தோனி போன்ற ஜாம்பவான்கள் அனைவரும் கிரீன் டாப்பில் மண்ணைக் கவ்வினர். ஸ்டெய்ன் 5, நிடினி 3, மோர்கெல் 2 என்று சாய்த்தனர்.

தொடர்ந்து ஆடிய போது தென் ஆப்பிரிக்கா அணியில் காலிஸ் 132 ரன்களையும் அதிரடி மன்னன் டிவில்லியர்ஸ் 217 ரன்களையும் குவிக்க தென் ஆப்பிரிக்கா 494/7 என்று டிக்ளேர் செய்தது. இரண்டாவது இன்னிங்சில் இந்திய அணி 328 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகி இன்னிங்ஸ் தோல்வியைச் சந்தித்தது.

இது கண் முன்னால வந்து போகுமா இல்லையா? அதனால் கிரீன் டாப் வேண்டாம், 5 நாட்கள் ஆடக்கூடிய உண்மையான பிட்சைப் போடலாமே என்பதுதான் நம் ஆதங்கம்.
Published by:Muthukumar
First published: