Home /News /sports /

கோலி வந்தா என்னப்பா? அதுக்கு இவரைத்தான் நீக்கணுமா பாவம்- கம்பீர் காட்டம்

கோலி வந்தா என்னப்பா? அதுக்கு இவரைத்தான் நீக்கணுமா பாவம்- கம்பீர் காட்டம்

கவுதம் கம்பீர்

கவுதம் கம்பீர்

இந்தியா தென் ஆப்பிரிக்கா டெஸ்ட் தொடர் தென் ஆப்பிரிக்காவின் வாண்டரர்ஸ் வெற்றியுடன் 1-1 என்று சமன் ஆகியுள்ள நிலையில் 3வது கடைசி டெஸ்ட் போட்டிக்கு விராட் கோலி கேப்டன் பொறுப்புக்குத் திரும்புகிறார்.

இதனால் யாரை நீக்குவது என்ற சிக்கல் எழுந்துள்ளது, ஷ்ரேயஸ் அய்யர் நியூசிலாந்துக்கு எதிராக அறிமுக சதம், அரைசதம் எடுத்த போதும் கோலி 2வது டெஸ்ட்டுக்குத்தான் வந்தார், அப்போது கூட அய்யரை உட்கார வைப்பதுதான் வழக்கம் என்றனர், ஆனால் ரகானே ஒதுங்கிக் கொண்டதால் அய்யர் நீக்கப்படவில்லை.

ஆனால் தென் ஆப்பிரிக்கா தொடரில் புஜாரா, ரகானே இருவருக்கும் ஷ்ரேயஸ் அய்யர் வழி விட்டார். சரி கோலி ஆடவில்லை என்றால் ஆட்டமேட்டிக்காக ஷ்ரேயஸ் அய்யர் தானே ஆட வேண்டும், ஆனால் விசித்திரமாக எந்த சீரியஸ் கிரிக்கெட்டையும் ஆடாத இந்தியா ஏ அணியில் தெ.ஆ. ஏ அணியுடன் ஆடிய ஹனுமா விகாரி ஆடினார். அவர் ஒன்றும் சரியாக ஆடவில்லை, ஆனால் “பங்களிப்பு” செய்தார். இனி இந்திய அணியையே நாம் “பங்களிப்பு அணி” என்று அழைக்கலாம்.

இந்நிலையில் கோலி மீண்டும் வரும் போது அந்த ஹனுமா விகாரி இடத்தைக் காலி செய்யணுமாம், ஏன் புஜாரா, ரகானே உட்கார மாட்டார்களா? இந்திய அணியில் ஏதோ ஒரு குளறுபடி உள்ளது.

இந்நிலையில் கவுதம் கம்பீர் காட்டமாக கேள்வி எழுப்புகையில், “இளம் வீரர் ஹனுமா விஹாரியை ப்ளேயிங் லெவனில் இருந்து நீக்கினால் அது நியாயமற்ற செயல்.

விஹாரிக்குத் தன்னை நிரூபிக்கப் போதுமான வாய்ப்புகளை டெஸ்ட் போட்டியில் வழங்கவில்லை. கடந்த ஓராண்டாக டெஸ்ட் போட்டியில் விஹாரி இருந்தாலும், வாய்ப்பு கிடைக்கவில்லை. இந்தச் சூழலில் அடுத்த போட்டியில் விஹாரியைத் தேர்வு செய்யாமல் அமரவைத்தால் அது வேதனைக்குரியது.

இதையும் படிங்க: இனி டி20 பேட்ஸ்மென்களுக்கு ஜாக்பாட்தான் - ஐசிசியின் புதிய அதிரடி டி20 விதிமுறை அறிமுகம்

ரஹானே கடந்த போட்டியின் 2-வது இன்னிங்ஸில் அரை சதம் அடித்தார் என்பதை நியாயப்படுத்தினால், விஹாரி 40 ரன்களுடன் நாட் அவுட்டாகி இருந்தார். ரஹானே இடத்தில் விஹாரி களமிறங்கியிருந்தால், நிச்சயம் விஹாரி அரை சதம் அடித்திருப்பார். இரு இன்னிங்ஸிலும் விஹாரி மிகுந்த கட்டுப்பாட்டுடன்தான் பேட் செய்தார்.

ஹனுமா விஹாரி போன்ற வீரர்களுக்கு நீண்ட வாய்ப்புகளை வழங்க வேண்டும். ஒரு போட்டியில் மட்டும் வாய்ப்பு வழங்கிவிட்டு, ஓராண்டுவரை அமரவைப்பது நியாயமற்றது. அதற்கு பதிலாக, ரஹானே பேட் செய்த விதத்தை ஓராண்டாகப் பார்த்து வருகிறோம். அவரை அமரவைக்கலாம், புஜாராவை நீக்கலாம். விராட் கோலி களமிறங்கும்போது 4-வது இடத்திலும் விஹாரி 5-வது இடத்திலும் களமிறங்கலாம். இதுதான் சரியான முடிவாக இருக்கும் என நினைக்கிறேன்.

இரு இன்னிங்ஸிலும் விஹாரி நல்ல பேட்டிங்கை வெளிப்படுத்தியதால், கேப்டவுனில் நடக்கும் கடைசி டெஸ்ட்டில் அவருக்கு வாய்ப்பு வழங்கலாம். ரஹானேவுக்கு ஏராளமான வாய்ப்புகளை அணி நிர்வாகம் வழங்கியிருந்தால், விஹாரி மீதும் நம்பிக்கை வைக்கவேண்டிய நேரம் இதுதான். விஹாரி இரு இன்னிங்ஸிலும் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளார் என்பதால் தெரிவிக்கிறேன்” இவ்வாறு கூறினார் கம்பீர்.
Published by:Muthukumar
First published:

Tags: Gautam Gambhir, India vs South Africa

அடுத்த செய்தி