சர்வதேச போட்டிகளில் அதிவேகமாக 25 ஆயிரம் ரன்களை எடுத்து சச்சினின் சாதனையை விராட் கோலி முறியடித்துள்ளார். ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 3ஆவது டெஸ்டில் 20 ரன்கள் எடுத்த விராட் கோலி இந்த புதிய சாதனையை ஏற்படுத்தியுள்ளார். சர்வதேச போட்டிகளில் 25 ஆயிரம் ரன்களை கடப்பதற்கு சச்சின் டெண்டுல்கர் 577 போட்டிகளை எடுத்துக் கொண்டார். ஆனால் 549 ஆட்டங்களில் இந்த சாதனையை ஏற்படுத்தியுள்ளார் விராட் கோலி. ஆஸ்திரேலிய அணியின் ரிக்கி பான்டிங் 588 போட்டிகளிலும், தென்னாப்பிரிக்காவின் ஜேகஸ் காலிஸ் 594 போட்டிகளிலும், குமார் சங்கக்கரா 608 ஆட்டங்களிலும், ஜெயவர்த்தனே 701 ஆட்டங்களிலும் 25 ஆயிரம் ரன்களைக் கடந்துள்ளனர்.
அந்த வகையில் விராட் கோலி ஏற்படுத்தியுள்ள இந்த சாதனை கிரிக்கெட் வரலாற்றில் முக்கியமான ஒன்றாக பார்க்கப்படுகிறது. விராட் கோலி 105 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 8131 ரன்களை குவித்துள்ளார். சராசரி 48.7 ரன்கள். ஸ்ட்ரைக் ரேட் 55.5. இதேபோன்று 271 சர்வதேச ஒருநாள் போட்டிகளில் விளையாடி 12,809 ரன்களை கோலி எடுத்துள்ளார். சராசரி 57.1 ரன்கள். ஸ்ட்ரைக் ரேட் 93.8 ஆக உள்ளது. இதேபோன்று 115 டி20 போட்டிகளில் விளையாடி கோலி 4008 ரன்களை குவித்துள்ளார்.
சர்வதேச டி20 போட்டிகளுடன் ஒப்பிடுகையில் ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் விராட் கோலியின் ரன் குவிப்பு குறைவாகவே இருந்துள்ளது. இதுவரை 223 போட்டிகளில் விளையாடியுள்ள விராட் கோலி 6,624 ரன்களை எடுத்துள்ளார். சராசரி 36.2 ரன்கள், ஸ்ட்ரைக் ரேட் 129.1. டெஸ்டில் 27 சதங்களும், ஒருநாள் போட்டிகளில் 46 சதங்களும், டி20 போட்டிகளில் 1 சதம் என சர்வதேச கிரிக்கெட்டில் விராட் கோலி மொத்தம் 74 சதங்களை கோலி விளாசியுள்ளார். இந்தாண்டு இறுதியில் நடைபெறவுள்ள உலகக்கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடரில், விராட் கோலி முக்கியமான ஆட்டக்காரராக இருப்பார் என்று பல்வேறு கிரிக்கெட் வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Cricket