CRICKET FAKHAR ZAMAN HIT 193 RUNS BUT PAKISTAN LOST 2ND ODI AGINST SOUTH AFRICA 01VJR
ஃபகர் ஸமான் 193 ரன்கள் விளாசி உலக சாதனை படைத்தும் பாகிஸ்தான் தோல்வி
ஃபக்கர் ஸமான்
பாகிஸ்தான் அணியின் தொடக்க வீரர் ஃபகர் ஸமான் 193 ரன்கள் விளாசிய போதும் தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான 2-வது ஒரு நாள் போட்டியில் பாகிஸ்தான் தோல்வியடைந்தது.
பாகிஸ்தான் - தென்னாப்பிரிக்கா அணிகளுக்க இடையே 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடர் நடைபெற்று வருகிறது. முதல் ஒரு நாள் போட்டியில் பாகிஸ்தான் வென்ற நிலையில் 2-வது ஒரு நாள் போட்டி நேற்று ஜேகான்ஸ்பார்க்கில் நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
இதையடுத்து முதலில் களமிறங்கிய தென்னாப்பிரிக்கா அணி அதிரடியாக விளையாடி 50 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 341 ரன்கள் சேர்த்தது. அந்த அணியின் கேப்டன் பவுமா அதிகபட்சமாக 92 ரன்கள் எடுத்தார். டி-காக், வான்டெர் டஸன், மில்லர் ஆகியோரும் அரைசதம் விளாசினார்கள்.
பாகிஸ்தான் அணி 342 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் களமிறங்கியது. பாகிஸ்தான் அணியின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் யாரும் நிலைத்து நின்று விளையாடமால் அவுட்டாகி வெளியேறினர்.
ஒருபுறம் விக்கெட் விழுந்தாலும் மறுபுறம் தொடக்க வீரர் ஃபகர் ஸமான் மட்டும் தனி வீரராக போராடி 193 ரன்கள் சேர்த்து கடைசி ஓவரின் முதல் பந்தில் ரன் அவுட்டாகி வெளிறேினார். இதனால் 50 ஓவர்கள் முடிவில் பாகிஸ்தான் 9 விக்கெட் இழப்பிற்கு 324 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியடைந்தது.
ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் 2-வது பேட்டிங்கில் ஃப்கர் ஸமான் தனி வீரராக 193 ரன்கள் அடித்து உலக சாதனை படைத்துள்ளார். இதற்கு முன் ஆஸ்திரேலிய வீரர் ஷேன் வாட்சன் 2-வது பேட்டிங்கில் 185 ரன்கள் அடித்ததே தனி ஒரு வீரரின் அதிகபட்ச ஸ்கேராக இருந்தது. மேலும் தென்னாப்பிரக்கா அணிக்கு எதிரான தனி வீரரின் அதிகபட்ச ரன்னும் இது தான். இதற்கு முன் டேவிட் வார்னர் தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிராக 173 ரன்கள் விளாசியதே அதிகபட்ச ரன்களாக இருந்தது.
தென்னாப்பிரிக்கா அணி 2-வது ஒரு நாள் போட்டியில் 17 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதை அடுத்து தொடர் 1-1 என்று சமநிலையில் உள்ளது. இந்த இரு அணிகளுக்கும் இடையேயான கடைசி ஒரு நாள் போட்டி வரும் 7-ம் தேதி நடைபெற உள்ளது.