என் இதயம் தெளிவாக உள்ளது, நேரமும் சரியாக உள்ளது: ஓய்வு அறிவித்த டுபிளெசிஸ் உருக்கம்

டுபிளெசிஸ் ஓய்வு அறிவிப்பு

கேப்டனாக நல்ல சக்ஸஸ் ரேட் வைத்திருக்கிறார் டுபிளெசிஸ், 18 வெற்றி, 15 தோல்வி அவரது கேப்டன்சியில் தென் ஆப்பிரிக்கா பெற்றிருக்கிறது. முதல் 27 டெஸ்ட்களில் கேப்டனாக 17-ல் வென்றிருக்கிறார் டுபிளெசிஸ்

 • Share this:
  முன்னாள் தென் ஆப்பிரிக்கா கேப்டன் ஃபாப் டு பிளெசிஸ் டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். ஆஸ்திரேலியா தொடரை தள்ளி வைத்ததால் இந்த முடிவை அவர் எடுத்துள்ளார்.

  இல்லையெனில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஆடிவிட்டு ஓய்வு பெறுவதாக இருந்ததாக அவர் தெரிவித்தார். டுபிளெசிஸ் இதுவரை 69 டெஸ்ட்களில் ஆடியுள்ளார்.

  அவர் தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இது தொடர்பாகக் கூறும்போது, “புதிய அத்தியாயம் தொடங்க் என் இருதயம் தெளிவாக உள்ளது, நேரமும் சரியாக உள்ளது” என்று பதிவிட்ட்டுள்ளார்.

  இப்போது 36 வயதாகும் டுபிளெசிஸ் 2012-13-ல் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அடிலெய்ட் டெஸ்ட்டில் அறிமுகமானார். அந்தப் போட்டி விறுவிறுப்பாக சென்று டிரா ஆனது அதில் டுபிளெசிஸ் 78 & 110 அடித்து அசத்தி ஆட்ட நாயகன் விருது பெற்றார். உடையும் பிட்சில் சுமார் நாலரை செஷன் தூணாக நின்றார் டுபிளெசிஸ்.

  தனது 69 டெஸ்ட்களில் 10 சதங்களையும் 21 அரைசதங்களையும் எடுத்தார் டுபிளெசிஸ். 4,163 ரன்களை 40.02 என்ற சராசரியில் அவர் எடுத்தார்.

  2016-ல் ஏ.பி.டிவில்லியர்ஸுக்கு அடுத்தபடியாக இவர் கேப்டன் ஆனார். 36 டெஸ்ட்களுக்கு இவர் கேப்டனாக இருந்தார். ஜனவரி 2020-ல் கேப்டன் பொறுப்பை உதறினார். இங்கிலாந்துக்கு எதிராக உள்நாட்டிலேயே 3-1 என்று உதைவாங்கியதால் அவர் கேப்டன்சியை உதறினார்.

  கேப்டனாக நல்ல சக்ஸஸ் ரேட் வைத்திருக்கிறார் டுபிளெசிஸ், 18 வெற்றி, 15 தோல்வி அவரது கேப்டன்சியில் தென் ஆப்பிரிக்கா பெற்றிருக்கிறது. முதல் 27 டெஸ்ட்களில் கேப்டனாக 17-ல் வென்றிருக்கிறார் டுபிளெசிஸ், பிறகுதான் சரிவு கண்டது.

  2019 தொடக்கத்திலிருந்து தன் கேப்டன்சி காலம் முடியும் வரை டுபிளெசிஸ் தலைமையில் 8 டெஸ்ட் போட்டிகளில் தென் ஆப்பிரிக்கா தோல்வி தழுவியது. பிப்ரவரி 2019-ல் இலங்கைக்கு எதிராக 2-0 என்று தோல்வியடைந்ததிலிருந்து தோல்வி முகம் ஏற்பட்டது.

  டுபிளெசிஸ் 143 ஒருநாள் போட்டிகள், 50 டி20 போட்டிகள், ஆடியுள்ளார், தொடர்ந்து இந்த இரண்டு வடிவங்களிலும் ஆடுவார். டி20 உலகக்கோப்பையில் தான் ஆட விரும்புவதாகவும் அவர் தெரிவித்தார்.

  இவரது அதிகபட்ச தனிப்பட்ட ஸ்கோர் 199 ஆகும், இரட்டைச் சதம் அடிக்காமல் துரதிர்ஷ்டவசமாக அவர் ஓய்வு பெற்று விட்டார். 63 கேட்ச்களை டெஸ்ட்டில் அவர் பிடித்துள்ளார்.

  டி20 உலகக்கோப்பை இந்த ஆண்டு இறுதியில் இந்தியாவில் நடைபெறுகிறது.
  Published by:Muthukumar
  First published: